என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் ஜெயிலில் சென்னை கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #VelloreJail
    வேலூர்:

    சென்னை எண்ணூரை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 40). கொலை வழக்கில் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக தகவல் வந்தது.

    இதனையடுத்து ஜெயில் காவலர்கள் ஜெயில் வளாகத்தில் சோதனையிட்டனர். அப்போது கார்மேகம் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு பின்னால் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

    இது குறித்து ஜெயில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கார்மேகம் 3 செல்போன்களை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இது பற்றி பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் செல்போனில் இருந்து யாருடன் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #VelloreJail
    ஆம்பூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நரியாம்பட்டு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ரஜினா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுசிலா (வயது 14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், அவரது தங்கை சுஸ்மிதா (12). 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சகோதரிகள் 2 பேரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறியது.

    இதனை கண்ட ரஜினா, சுசிலாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சுசிலா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை மற்றும் கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #Gaja #GajaCyclone
    அரக்கோணம்:

    வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து ஒரு குழுவிற்கு 27 பேர் வீதம் 10 குழுவினர் மழை, புயல் ஆகியவற்றினால் ஏற்படும் இடர்பாடு காலங்களில் உதவி செய்வதற்காக மொத்தம் 270 பேர் உதவி கமாண்டர் ராஜன்பாலு தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மீட்பு படையினர் கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, ராமநாதபுரம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

    மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் அந்தந்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். #Gaja #GajaCyclone
    வாணியம்பாடியில் கழிவறையில் மாணவியை பூட்டிச் சென்றதால் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 220-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த நதீம்பாபு என்பவரது மகள் ஷாஜீயா (வயது 5). 1-ம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று பள்ளிக்கு சென்ற ஷாஜீயா மாலை உடல்உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றார்.

    அப்போது பள்ளி நேரம் முடிவடைந்ததால் ஆசிரியர்கள் வகுப்பறையை பூட்டிவிட்டு பின்னர் சிறுமி கழிவறையில் இருப்பது தெரியாமல் கழிவறையையும் பூட்டிச் சென்று விட்டனர்.

    சிறிது நேரம் கழித்து சிறுமி கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் வெளிபக்கம் தாளிட்டு இருந்ததால் சிறுமியால் கதவை திறக்க முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அனைவரும் பள்ளியை விட்டு சென்று விட்டதால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் செய்வதறியாமல் சிறுமி அழுது கொண்டிருந்தார்.

    வெகு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் பதறிய பெற்றோர் பள்ளிக்கு வந்து சிறுமியை தேடிபார்த்தனர்.

    அப்போது கழிவறையில் இருந்து சிறுமியின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கழிவறையை திறந்து பார்த்தனர். அங்கு சிறுமி நின்று கொண்டிருந்தார். இதையடுத்து சிறுமியை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    இன்று காலை பள்ளி திறக்கப்பட்டதும் அங்கு திரண்டு வந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியர்களின் கவனகுறைவால் சிறுமி கழிவறையில் சுமார் 1 மணி நேரம் தவித்ததாகவும், இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பெற்றோரிடையே பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கஜாபுயல் திசை மாறினால் நாளை மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #GajaCyclone #GSLVMark3 #ISRO
    வேலூர்:

    தொலைத் தொடர்பு, தொலையுணர்வு வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

    எனினும் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவ மற்ற நாடுகளின் உதவியைத்தான் இஸ்ரோ நாட வேண்டியுள்ளது. அதை மாற்றி அமைக்கும் விதமாக நமது விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்பில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டது.

    இந்த ராக்கெட் 6 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்டது. இதன்மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் கிலோ எடை உடைய செயற்கைக் கோள்களையும், விண்ணில் செலுத்த முடியும். பல கட்ட சோதனைக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    அடுத்த கட்டமாக அதிநவீன ஜிசாட் 29 தொலைத்தொடர்பு செயற்கை கோள் மார்க்-3 ராக்கெட் மூலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து நாளை மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இதனையொட்டி இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    கஜா புயல் திசை மாறினால் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும். புயல் திசை மாறாவிட்டால் திட்டமிட்டப்படி நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.

    மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய பணியாகும். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகள் மிகவும் பயன்பெறும். இதில் அதிக திறன் கொண்ட கா, க்யூ பேண்ட் டிரான்ஸ் பாண்டர்கள், துல்லியமாக படம் எடுக்கும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இது தவிர எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பரிசோதனை முயற்சியில் க்யூ, வி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் இடம் பெற்றுள்ளன.

    அடுத்ததாக சந்திராயன்-2 மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய ககன்யாங்க் ஆகிய ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்-3 ராக்கெட் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

    இஸ்ரோ தயாரித்ததில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 தான் அதிக எடை கொண்ட ராக்கெட். இதனால் அதற்கு பாகுபலி ராக்கெட் என புனைப் பெயர் வந்துள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஜா உடன் மோதும் பாகுபலி என பரப்படுகிறது. #GajaCyclone #GSLVMark3
    காட்பாடி மற்றும் ஆம்பூரில் போலீஸ் போல நடித்து 2 பெண்களிடம் 20 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    காட்பாடி துரைநகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 53). திருவலத்தில் உள்ள மின் வாரியத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (52). இவர் கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகின்றார்.

    ஜெயந்தி தினமும் வீட்டில் இருந்து சித்தூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது 2 பேர் தங்களை போலீஸ் என்று அறிமுகபடுத்தி கொண்டு நாங்கள் மப்டியில் இருப்பதாக கூறி நீங்கள் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு தனியாக நடந்து சென்றால் யாராவது உங்கள் நகையை பறித்து சென்று விடுவார்கள் எனவே நீங்கள் அணிந்து உள்ள நகைகளை கழட்டி பையில் வைக்குமாறு கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய ஜெயந்தி தான் அணிந்திருந்த 16 பவுன் நகையை கழட்டி உள்ளார். அப்போது அவர்கள் நாங்கள் பேப்பரில் மடித்து கொடுப்பதாக கூறி ஒரு பொட்டலத்தை ஜெயந்தி வைத்திருந்த பையில் வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    சிறுது தூரம் சென்ற ஜெயந்தி பையில் வைத்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி உள்ள கண்காணிப்பு காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவரது மனைவி சுந்தரா (வயது 50). இவர் இன்று காலை ஆம்பூர் மார்க்கெட் சுண்ணாம்புக்கார தெருவில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் தங்களை போலீஸ் என கூறி. சுந்தரா அணிந்திருந்த நகையை கழட்டி பையில் வைக்கும்படி கூறி 4 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர்.

    இது குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் போல நடித்து 2 பெண்களிடம் நகை பறித்து சென்றது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அரக்கோணம் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாசில்தார் பாபு மற்றும் வருவாய்துறையினர் நேற்று பெருமூச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.அதிகாரிகளை கண்ட லாரி டிரைவர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஒடுக்கத்தூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் வல்லரசு (வயசு 19). கம்பி கட்டும் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதனையறிந்த பெற்றோர் இளம்பெண்ணை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காதலி இறந்த துக்கத்தில் மனமுடைந்து வல்லரசு சுற்றி திரிந்தார். நேற்று மாலை அவரது விவசாய நிலத்துக்கு சென்றார். அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை கயிறு போல கிழித்து அங்கிருந்து கீற்று கொட்டகையில் தூக்கிட்டு இறந்தார்.

    இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர். இதுபற்றி தகவலறிந்த ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் இவரது மனைவி சங்கீதா (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. தம்பதிக்கு 1 மகள் உள்ளார்.

    விஜய், சங்கீதாவிற்கு கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சங்கீதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் உதவி-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகின்றார்.

    திருப்பத்தூர் அருகே சாராயம் விற்பனை செய்து வந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28), கோதணடராமன் (22) இவர்கள் அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக திருப்பத்தூர் கலால் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி 2 பேரையும் கைது செய்தார்.

    தொடர்ந்த சாராய விற்பனை செய்த 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.

    அதனை ஏற்ற கலெக்டர் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
    சர்ச்சை படங்களை விஜய் தவிர்க்க வேண்டும் என்று வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறினார். #Sarkar #Vijay #PremalathaVijayakanth
    வேலூர்:

    வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சர்கார் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை பார்க்காமல் அதை பற்றி கருத்து கூறுவது தவறாகும். சர்கார் படம் குறித்த பிரச்சினையை நான் கவனித்து வருகிறேன். சினிமாவை, சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க. போராடுவது வேதனை அளிக்கக்கூடியது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்துக்கு தடை விதிக்க முடியாது. படம் வெளியே வந்து விட்ட பின் மீண்டும் காட்சிகளை நீக்குவது என்பது தணிக்கை குழு எதற்கு?, தணிக்கை செய்தவர்கள் தவறாக தணிக்கை செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது.

    திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு படத்தை சர்ச்சைக்குள் கொண்டு சென்று படத்தை ஓட வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் அண்மை காலமாக விஜய் நடிக்கும் படங்களும் அவ்வாறு தான் வருகிறது. இனிவரும் காலங்களில் யோசித்து செய்ய வேண்டும்.

    விஜயகாந்த் தலைமையில் தான் இயக்குனர் முருகதாசுக்கு திருமணம் நடந்தது. விஜய் நடித்து முருகதாஸ் இயக்கிய படத்துக்கு சர்ச்சை வந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும். தணிக்கை செய்த படத்துக்கு அ.தி.மு.க. தடை கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கே குளிர்விட்டு போன மாதிரி தான் இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

    ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா?, நடனம் ஆடினார்களா? அல்லது தீபாவளிக்கு வீடு, வீடாக சென்று இனிப்பு வழங்கினார்களா? என்றால் இல்லை.

    டெங்கு, பன்றிக்காய்ச்சல், வேலையின்மை, குடிநீர் பிரச்சினை போன்ற அதிக அளவு மக்கள் பிரச்சினை இருக்கும்போது அதை எல்லாம் தீர்க்க வேண்டிய அமைச்சர்கள் ஒரு திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்று பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓட்டு போட்டு வெற்றிபெற செய்த மக்களுக்கு அமைச்சர்கள் நல்லது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Sarkar #Vijay #PremalathaVijayakanth


    பண மதிப்பிழைப்பு நீக்கம் செய்ததால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதை கண்டித்து காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration
    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாநில பொதுச் செயலாளர் விஜயன் தலைமையில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாகித்பாஷா, வழக்கறிஞர் அணி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ரூ.1000 மற்றும் ரூ.500 பண மதிப்பிழைப்பு நீக்கம் செய்ததால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.  #congressdemonstration
    ×