என் மலர்tooltip icon

    வேலூர்

    கணவரின் கள்ளக்காதலை கேள்விப்பட்ட பெண், தனது 2 குழந்தைகளுக்கு வி‌ஷத்தை கொடுத்து கொன்று விட்டு அதே வி‌ஷத்தை தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சந்திரபுரம் கே.கே.கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், விவசாயி. இவருடைய மனைவி மேனகா (வயது 21). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யமுனா (3) என்ற மகளும், 7 மாதத்தில் கோவினேஷ் என்ற மகனும் இருந்தனர்.

    இந்த நிலையில், ஜெயகுமாருக்கும், அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. கணவர் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருப்பதை கேள்விப்பட்ட மேனகா, அவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த மேனகா, தனது இரு குழந்தைகளுக்கும் வி‌ஷத்தை கொடுத்து கொன்று விட்டு அதே வி‌ஷத்தை தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் வி‌ஷம் குடித்து இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதுபற்றி, கந்திலி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி உதவி கலெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என வேலூரில் நடந்த பொதுகூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். #Seeman
    வேலூர்:

    வேலூரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒவ்வொரு தேர்தலின் போதும் அனைத்து கட்சியினரும் ஆட்சி மாற்றம் குறித்து பேசுகிறார்கள். ஒரு சில கட்சிகள் எந்த கட்சியிடம் இருந்து ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார்களோ, அவர்களுடனேயே தேர்தல் கூட்டணி வைக்கிறார்கள். அவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டு வரமுடியும். அது ஏமாற்றத்தில்தான் முடியும். மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல். நாம் தமிழர் கட்சி மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கும். ஊழல், லஞ்சம் அற்ற அரசியல், அனைவருக்கும் வேலை, வேலைக்கேற்ற ஊதியம். தரமான இலவச மருத்துவம், அனைவருக்கும் சரிசமமான கல்வி. இதுவே எங்கள் கட்சியின் முக்கிய கொள்கைகளாகும்.

    இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் என்று சொல்கின்ற திராவிட கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் நாங்கள் பொதுமக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இது ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதாகும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான் ஊழல், லஞ்சத்தின் தொடக்கமாகும். ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை அரசியல்வாதிகள் லஞ்சமாகவோ, ஊழல் செய்தோ எடுத்து கொள்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை தடுக்கப்பட வேண்டும்.

    வேலூரில் சீமான் பேசிய காட்சி. அருகில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி, ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்

    பணம் மதிப்பிழப்பால் கருப்பு பணம், பயங்கரவாதம் ஒழியும் என்று மோடி கூறினார். ஆனால் சாமானிய மக்கள் வங்கி வாசல் முன்பு நின்று உயிரிழந்ததும், வியாபாரிகள் தங்கள் தொழில்களை விட்டு சென்றதும் தான் நடந்தது. காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் மாறுபட்டுள்ளது. தமிழகத்தை நாசமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதனை மாநில அரசுகள் தடுக்கவில்லை.

    மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் வேண்டும். மத்தியில் ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். இது சர்வாதிகாரத்தை உருவாக்குகிறது. நாட்டின் பாதுகாவலர் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். பிரதமர் மோடியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்காவிட்டால் பல கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறாது. ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். #Seeman
    ரெயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    தக்கோலம்:

    அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சென்னை - திருப்பதி எக்ஸ்பிரஸ், அரக்கோணம்- திருப்பதி ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயணிகளின் சீட்டுக்கு அடியிலும், கழிவறைகளில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம், வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் மட்டும் 80 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். #Vaiko
    வேலூர்:

    ‘மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்று வேலூரில் வைகோ பேசினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் மண்டி தெருவில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. ம.தி.மு.க. தலைவர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

    சுதந்திர இந்தியாவின் முக்கிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எதிர்கால இந்தியா என்ன ஆகும், ஜனநாயகமாக இருக்குமா? ரத்தக்கறைகள் கொண்ட பாசிச அதிகாரமாக மாறுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் ஆற்றல் மிகுந்தவர். ஆங்கில புலமை கொண்டவர்.

    சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, கோட்சே வாழ்க என முழக்கமிட்டனர். இது மோடிக்கு கேட்கவில்லையா? அவருக்கு இதயம் இல்லையா? இரக்கம் இல்லையா?. இந்துத்துவா மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை நிறைவேற்றும் மோடி அரசு பாசிச அரசாகும். 5 ஆண்டுகாலத்தில் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. இந்தியாவில் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழகத்தில் தான் 6.5 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. அதை தட்டிக் கேட்காமல் கைகட்டி தமிழக அரசு உள்ளது.

    தமிழகத்தை தாரைவார்க்கும் அ.தி.மு.க. அரசையும் தூக்கி எறிய வேண்டும். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் வெற்றி சின்னமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராணிப்பேட்டையில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து வைகோ பேசியதாவது:-

    2கோடி பேருக்கு வேலை தருவதாக கூறிய மோடி 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை தரவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காவேரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளை தீர்க்கவில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு இதற்கெல்லாம் உறுதுணையாக உள்ளது. தமிழகத்தில் 80லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Vaiko
    அரக்கோணத்தில் நேற்று இரவு மின்சார ரெயில் தாமதத்தால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில் என்ஜின் முன்பாக நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் தினமும் இரவு 7.35 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து 7.40 மணிக்கு திருத்தணிக்கு புறப்பட்டு செல்லும்.

    நேற்று 7.35 மணிக்கு வந்த மின்சார ரெயில் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட பாயிண்ட் கோளாறு காரணமாக 8.50 மணி வரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் என்ஜின் முன்பாக நின்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ரெயில் மறியல் செய்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தண்டவாளத்தில் பாயிண்ட் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ரெயில் 9.10 மணிக்கு திருத்தணி நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயில் மறியல் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வரும் 2 மின்சார ரெயில்கள் திருவலங்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூரில் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #petrolbombing

    வேலூர்:

    வேலூரில் தோட்டப்பாளையத்தில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தப்பிய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் பாபுராவ் தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28) ஆகியோர் நேற்று முன்தினம் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் அருகே காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதையடுத்து கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுல் தரப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல் தரப்பினர் அங்கு சென்றனர்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. ஒருவருக்கொருவர் பீர் பாட்டில், கற்களை எடுத்து வீசி தாக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் இருந்த ஒரு விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களையும் அடித்துதுவம்சம் செய்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பிரதாப், சசி, சின்னஅப்பு, ராஜி உள்பட 7 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை விசாரிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கை வெவ்வேறு கோணங்களில் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே தோட்டப்பாளையம் அருகே உள்ள காட்பாடி சாலையில் வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    அவரை சோதனை செய்தபோது அவரிடம் 1½ அடி நீளமுள்ள 2 கத்திகள் இருந்தன. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

    அவர் நாகர்கோவிலை சேர்ந்த செல்வம் (33) என்பது தெரியவந்தது. இவருக்கு இந்த மோதல் சம்பவத்தில் தொடர்பு உள்ளது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #petrolbombing

    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்ற தொழிலாளியை வாலிபர் வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 50), தீர்த்திகிரி (52) கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தனர். அரசு கழிவறைகள் கட்டும் பணியில் ஒன்றாக ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று முருகன் கட்டிட வேலைக்கு செல்லாமல் வெள்ளக்குட்டையில் கட்சி கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட தீர்த்தகிரி அவரை தட்டிக் கேட்டார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் படுகாயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆண்கள் வார்டில் தனிதனியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை தீர்த்தகிரியை பார்க்க அவரது மகன் மோகன் (24) வந்தார்.

    தந்தையை பார்த்து விட்டு ஆத்திரமடைந்த அவர் ஆண்கள் வார்டில் புகுந்து படுக்கையில் படுத்திருந்த முருகனை கத்தியால் வெட்டினார். அவரது தலை, கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதனைக் கண்ட நோயாளிகள் கூச்சலிட்டனர். இதனால் மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயமடைந்த முருகனுக்கு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் புகுந்து தொழிலாளி வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று காலை முருகனின் உறவினர்கள் வெள்ளக்குட்டை பஸ் நிறுத்தத்தில் திரண்டு சாலை மறியல் செய்தனர். தப்பி ஓடிய மோகனை கைது செய்ய கோரி கோ‌ஷமிட்டனர்.

    இதனால் ஆலங்காயம்- வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.

    வேலூரில் கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbombing

    வேலூர்:

    வேலூர் பாபுராவ்தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28). இவர்கள் இருவரும் நேற்று இரவு 7.30 மணியளவில் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இதில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறினர்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே காரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் நண்பர்கள், ஆதரவாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்களுடன் அப்பகுதிக்கு நடந்து சென்றனர்.

    தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி தெருவில் சென்றபோது திடீரென 20-க்கும் மேற்பட்டோர் எதிரே வந்து மதுபாட்டில், பீர்பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை கோகுல் தரப்பினர் மீது வீசினர்.


    கோகுல் தரப்பினர் பதிலடியாக அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட எதிர்தரப்பினர் உருட்டுக்கட்டையுடன் கோகுல் தரப்பினரை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல், தமிழ்மணி தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கோகுல் மற்றும் சிலர் அப்பகுதியில் உள்ள ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.செல்வத்துக்கு சொந்தமானதும், தற்போது தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்தனர்.

    விடுதி காவலாளி நுழைவு வாயில் இரும்பு கேட்டை பூட்டினார். பின்னர் அவர் டாக்டர்கள் அனைவரையும் அறைக்குள் செல்லும்படி கூறிவிட்டு விடுதியின் நுழைவு கதவிற்கும் பூட்டு போட்டார்.

    கோகுலை துரத்தி வந்த கும்பல் இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே வந்தனர். பின்னர் கதவை திறக்கும்படி காவலாளியிடம் கூறினர். ஆனால் அவர் திறக்காததால் விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை கற்கள், கட்டைகளால் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் அடித்து துவம்சம் செய்தனர்.

    விடுதி காவலாளி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் விடுதியை அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.

    சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், விடுதி காவலாளி, அங்கு தங்கியிருந்த டாக்டர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து தங்கும் விடுதி அறையில் பதுங்கியிருந்த கோகுல் உள்பட 4 பேரை போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    ஜி.ஜி.ரவியின் மகன்களுடன் நாகர்கோவிலை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்களை பாதுகாவலராக வைத்திருப்பதாக ஜி.ஜி.ரவின் மகன்கள் கூறியுள்ளனர்.

    நாகர்கோவிலை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மீது தென் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் தோட்டப்பாளையத்துக்குள் புகுந்துள்ளனர்.

    காரில் குண்டுகளை வீசி, விடுதியை சூறையாடியது ரவுடி குப்பனின் கும்பல் என தெரியவந்துள்ளது. அவர்கள் தரப்பில் யாரையும் போலீசார் பிடிக்கவில்லை. அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

    முதலில் தாக்குதல் தொடங்கியது யார்? தோட்டப்பாளையத்தில் மது காலி பாட்டில்களுடன் கும்பல் தயாராக இருந்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #petrolbombing

    கடவுள் இல்லை என்று மார்தட்டிக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் சாமி கும்பிடும் நிலை எங்களிடம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். #edappadipalanisamy #mkstalin

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

    இந்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மூலம் தமிழகம் செழிக்க உள்ளது. நாட்டிற்கு நிலையான வலிமையான பிரதமர் தேவை. அப்படிபட்ட பிரதமர் வருவதற்கு ஏ.சி.சண்முகம் வெற்றிபெற வேண்டும்.

    தமிழகத்தில் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.

    வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் தனது சொந்த செலவில் தொகுதி மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பேன்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 100 பேர் என 600 மாணவர்களுக்கு அவரது கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி அளிப்பேன் என உறுதியளித்துள்ளார்.

    அ.தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. படிக்கின்ற மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறோம்.

    மருத்துவ துறையில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. காப்பீடு திட்ட தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18 ஆயிரம் உதவிதொகை, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குற்றங்களை கண்டு பிடிக்க முடியாமல் கடவுளை விமர்சனம் செய்துள்ளார்.

    அவருக்கு சாமி மேல் நம்பிக்கை இல்லை என்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று விழுந்து விழுந்து சாமி கும்பிடுகின்றனர்.

    கடவுள் வழிபாடு தனி மனித சுதந்திரம். மு.க.ஸ்டாலின் கடவுளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம்.

    உங்களை போல் கடவுள் இல்லை என்று மார்தட்டிக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் சாமி கும்பிடும் நிலை எங்களிடம் இல்லை. நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். அந்தந்த மதங்களை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறது.

    நான் ஏதோ கொலை செய்து விட்டேன், கொள்ளையடித்து விட்டேன் என மு.க.ஸ்டாலின் பேசுகிறார். கொடநாட்டில் நடந்த கொள்ளையை கண்டு பிடித்தது. அ.தி.மு.க. அரசு.


    அதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தது தி.மு.க. இதன் மூலம் அந்த கொள்ளையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    அந்த சந்தேகத்தின் மீது அம்மாவின் அரசு விசாரணை மேற்கொள்ளும்.

    மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்களை கண்டு பிடிக்க முடியாது.

    ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் ஊழல்.

    மத்தியில் நிலையான ஆட்சி தேவை. நாட்டின் பாதுகாப்பு கருதி. அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து ஆற்காடு, ராணிப்பேட்டையில் அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

    மக்களுக்கு சேவை செய்வதற்காக அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்துள்ளோம்.

    அ.தி.மு.க. அரசு பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகிறது. அவற்றுக்கு தீர்வு கண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்ளும் சக்தி எங்களுக்கு உள்ளது.

    ஜெயலலிதா மறைந்தபோது ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க பார்த்தார். சட்டமன்றத்தில் டேபிள் மீது ஏறி நின்று நடனமாடினார்கள். புத்தகங்கள் மற்றும் சபாநாயகர் மைக்கை பிடுங்கி வீசினார்கள். இவர்களா மக்களை காப்பாற்ற போகிறார்கள்.

    பொங்கலுக்கு ரூ.1000 வழங்கினோம். ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தோம். இதனை தி.மு.க. கோர்ட்டுக்கு சென்று தடுத்து நிறுத்த பார்க்கிறார்கள். ஏழைகளுக்கு பணம் கொடுப்பது என்ன தவறு. தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 100 நாள் வேலைதிட்டம் 200 நாட்களாக மாற்றப்படும்.

    15 ஆண்டு மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனைகளை தீர்க்கவில்லை. புதிய திட்டங்கள் கொண்டு வரவில்லை. 2 ஏக்கர் இலவச நிலம் தருவேன் என்கிறார்கள். ஆனால் நில அபகரிப்பு செய்தார்கள். ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கொண்டுவந்து நிலங்களை மீட்டு கொடுத்தார்.

    இஸ்லாமிய மக்களுக்கு அரணாக இருந்து பாதுகாப்பது அ.தி.மு.க. அரசு. மதிப்பூதியம் ரூ.20 ஆயிரம், நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி, சந்தன கூடு விழாவுக்கு சந்தனம், ஆகியவற்றை ஜெயலலிதா அரசு வழங்கி வருகிறது.

    முத்தலாக் சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க. எம்.பிக்கள் குரல் கொடுத்தனர். இதனால் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

    எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு துணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். #edappadipalanisamy #mkstalin

    தி.மு.க. கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #dmk

    ஆற்காடு:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து ஆற்காடு பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு தெளிந்த நீரோடை, அதனை அள்ளி பருகலாம். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைத்துள்ள கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை ஆகும்.

    அ.தி.மு.க.வில் சாமானியர்கள் கூட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி, நான் டாக்டராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும், பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையும் ஒத்த கருத்துகள் உடையது. தேர்தல் அறிக்கையில் உள்ள கருத்துக்களை நிறைவேற்றுவார்கள். நான் அவர்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பேன்.

    பா.ம.க.வின் தேர்தல் அறிக்கைகளை தி.மு.க.வினர் காப்பி அடித்துள்ளனர். நாங்கள் தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்பதற்காக பல நல்ல திட்டங்களை கூறியிருக்கிறோம். மாணவர்களின் கல்வி கடன் மற்றும் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் கூறியிருக்கிறோம்.

    மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவோம். தற்போது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். ஆனால் 18 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்கள். எதையும் செய்யவில்லை. இவர்கள் போராடியது எல்லாம் தங்கள் கட்சிக்கு மத்தியில் நல்ல இலாகா வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். நமது பிள்ளைகள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறோம்.

    நூறாண்டுகளில் காங்கிரஸ் கட்சிதான் வாரிசு அரசியலை வளர்த்து வருகிறது. அதேபோல் இங்குள்ள குடும்ப அரசியலை மக்கள் வெறுத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தனர். அண்ணா ஏழையாக கட்சியை தொடங்கினார். ஏழையாகவே மறைந்தார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று ஏழைகளை ஒழிக்கிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியும், அ.தி.மு.க.வும் இணைந்து செயல்படுவதற்கு மாம்பழம் தான் சாட்சி, இரட்டை இலைதான் சாட்சி. அனைவரும் இணைந்து செயல்படுவோம். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சிகள். ஆனால் எதிரணியில் இருப்பவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ramadoss #dmk

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவன் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத் தியது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வரதலாம்பள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் இவரது மகன் திலக்ராஜன் (வயது 10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    திலக்ராஜன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    ஆட்டோ டிரைவருடன் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். மாந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது நிலை தடுமாறி திலக்ராஜன் கீழே விழுந்தார். ஆட்டோவின் பின் சக்கரம் திலக்ராஜன் மீது ஏறி இறங்கியது.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு திலக்ராஜன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் சாலை போகுகுவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் வட்டம், முதலைமேடு மற்றும் ரெட்டியூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வரவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று வாணியம்பாடி- திருப்பத்தூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில்:-

    எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக வரவில்லை. அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீருக்காக நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர்  எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் கூடுதல் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை டிராக்டர்கள் மூலம் தினம்தோறும் உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கபடும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் சாலை போகுகுவரத்து பாதிக்கப்பட்டது.
    ×