search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் மோதல்
    X

    வேலூரில் கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் மோதல்

    வேலூரில் கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbombing

    வேலூர்:

    வேலூர் பாபுராவ்தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28). இவர்கள் இருவரும் நேற்று இரவு 7.30 மணியளவில் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இதில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறினர்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே காரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் நண்பர்கள், ஆதரவாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்களுடன் அப்பகுதிக்கு நடந்து சென்றனர்.

    தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி தெருவில் சென்றபோது திடீரென 20-க்கும் மேற்பட்டோர் எதிரே வந்து மதுபாட்டில், பீர்பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை கோகுல் தரப்பினர் மீது வீசினர்.


    கோகுல் தரப்பினர் பதிலடியாக அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட எதிர்தரப்பினர் உருட்டுக்கட்டையுடன் கோகுல் தரப்பினரை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல், தமிழ்மணி தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கோகுல் மற்றும் சிலர் அப்பகுதியில் உள்ள ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.செல்வத்துக்கு சொந்தமானதும், தற்போது தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்தனர்.

    விடுதி காவலாளி நுழைவு வாயில் இரும்பு கேட்டை பூட்டினார். பின்னர் அவர் டாக்டர்கள் அனைவரையும் அறைக்குள் செல்லும்படி கூறிவிட்டு விடுதியின் நுழைவு கதவிற்கும் பூட்டு போட்டார்.

    கோகுலை துரத்தி வந்த கும்பல் இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே வந்தனர். பின்னர் கதவை திறக்கும்படி காவலாளியிடம் கூறினர். ஆனால் அவர் திறக்காததால் விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை கற்கள், கட்டைகளால் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் அடித்து துவம்சம் செய்தனர்.

    விடுதி காவலாளி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் விடுதியை அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.

    சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், விடுதி காவலாளி, அங்கு தங்கியிருந்த டாக்டர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து தங்கும் விடுதி அறையில் பதுங்கியிருந்த கோகுல் உள்பட 4 பேரை போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    ஜி.ஜி.ரவியின் மகன்களுடன் நாகர்கோவிலை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்களை பாதுகாவலராக வைத்திருப்பதாக ஜி.ஜி.ரவின் மகன்கள் கூறியுள்ளனர்.

    நாகர்கோவிலை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மீது தென் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் தோட்டப்பாளையத்துக்குள் புகுந்துள்ளனர்.

    காரில் குண்டுகளை வீசி, விடுதியை சூறையாடியது ரவுடி குப்பனின் கும்பல் என தெரியவந்துள்ளது. அவர்கள் தரப்பில் யாரையும் போலீசார் பிடிக்கவில்லை. அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

    முதலில் தாக்குதல் தொடங்கியது யார்? தோட்டப்பாளையத்தில் மது காலி பாட்டில்களுடன் கும்பல் தயாராக இருந்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #petrolbombing

    Next Story
    ×