என் மலர்
செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் சாலை போகுகுவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் வட்டம், முதலைமேடு மற்றும் ரெட்டியூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வரவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று வாணியம்பாடி- திருப்பத்தூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில்:-
எங்கள் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக வரவில்லை. அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீருக்காக நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் கூடுதல் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை டிராக்டர்கள் மூலம் தினம்தோறும் உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கபடும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் சாலை போகுகுவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






