என் மலர்tooltip icon

    வேலூர்

    அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள மின்னல் இந்திராநகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வினியோகிக்கபட வில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அன்வர்திக்கான்பேட்டை மின்னல் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அரக்கோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேல் லூயிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    மேலும் பயன்படுத்த படாமல் இருந்த பைப்லைனை சரிசெய்து தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் குடங்களில் குடிநீர் பிடித்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    சேர்க்காடு அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வாலாஜா:

    சேர்க்காடுவை அடுத்த முத்தரசிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 40). இவருடைய மகன் மணிகண்டன் (18). இவர், சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் அவர், தோல்வி அடைந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (வி‌ஷம்) சாப்பிட்டு விட்டார். தான் 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், பூச்சிக்கொல்லி மருந்தைச் சாப்பிட்டு விட்டேன் எனத் தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

    அவரை குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அருகே 3 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாலாஜா:

    ரணிப்பேட்டை அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 70) குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் சுகுணா (42). மகன் ராஜ்குமார் (35).

    சுகுணாவிற்கு திருமணமாகி சாந்தி வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இவரது வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தால் தாய் சாந்தி வீட்டில் இருந்து ஒயர் மூலம் மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு சுகுணா வீட்டிற்கு சென்ற மின் ஒயரில் திடீரென தீபிடித்து எரிந்து சாந்தியின் குடிசை வீட்டில் தீ பற்றியது காற்று அதிகமாக வீசியதால் தீ அருகில் இருந்த சுகுணா மற்றும் வினோத்குமார் வீடுகளிலும் மளமளவென பரவியது.

    சாந்தியால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இதனால் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். தீ பற்றி எரிவதை கண்டு வெளியே ஓடிவந்த ராஜ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைசெல்வன், மற்றும் போலீசார் சாந்தியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீகாயமடைந்த ராஜ்குமாரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை தீ விபத்து நடந்த வீடுகளை காந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    ஆற்காடு மற்றும் ஆரணியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து இன்று காலை ஆற்காடு அருங்குன்றம் சாலையில் மறியல் செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை சிறைபிடித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ரத்தினகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

    குடிநீர் வழங்காததால் நாங்கள் புதூர், ராமாபுரம், கீழ்குப்பம், அருங்குன்றம், கவரபாளையம், மாலைமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தோம். தற்போது அவர்கள் தண்ணீர் எடுக்ககூடாது என கூறிவிட்டனர். இதனால் குடிக்ககூட தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே குடிநீர் வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து 2 மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ஆரணி அடுத்த மாமண்டூர் காலனியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 போர்வெல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    கடும் வறட்சி காரணமாக 2 போர்வெல்களில் தண்ணீர் வற்றியது. இதனால் ஒரே போர்வெல்லில் இருந்து குடிநீர் வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இன்று காலை ஆரணி செய்யார் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மறியலால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. அப்போது ஆரணி செய்யார் சாலையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் எங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. எனவே எங்களது பஸ்சை மட்டும் விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வழிவிட மறுத்து விட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    இதையடுத்து குடிநீர் வழங்க இன்றே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து சுமார் 2½ மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள மொரசப்பள்ளி ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 38). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 2009-ம் ஆண்டு வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடந்தது. இதற்காக சிவா அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தார்.

    2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி சிவா கட்டுமானப் பணி நடக்கும் பகுதிக்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் வழியாக 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். சிறுமியை பார்த்த சிவா பின்தொடர்ந்து சென்று திடீரென மடக்கி பிடித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். காப்பாற்றுங்கள்... எனச் கூச்சல் போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, சிறுமியின் வாயை பொத்தி, அப்பகுதியில் கிடந்த கல்லில் தலையை மோதினார். பலத்த அடியால் மயக்கமடைந்த சிறுமியின் கழுத்தைப் பிளேடால் அறுத்துக் கொலை செய்து விட்டு, உடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்குள்ள விவசாயக் கிணற்றில் உடலை வீசினார். களைந்த சிறுமியின் உடைகளை அங்கேயே தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கொலை செய்தது சிவா என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக சிவாவுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியின் உடைகளை களைந்து தீ வைத்து எரித்து, தடயங்களை அழிக்க முயற்சி செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சிவா, பலத்த காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    வேலூர் ஆவின் அருகே ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ராணுவ வீரராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

    செல்வராஜ் மீது சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில், சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் தேரை தீ வைத்து எரித்தது, ஒரு வீட்டின் மீது வெடிகுண்டு வீசியது ஆகிய 2 வழக்குகளும், வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்பட 2 வழக்குகளும் உள்ளன.

    அதேபோன்று குடும்ப தகராறில் கே.வி.குப்பத்தில் வசித்து வந்த அவருடைய மாமனார் பெருமாள் வீட்டை தீ வைத்து எரித்தது, கடந்த 2014-ம் ஆண்டு பெருமாளை அடித்து கொலை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திலும் செல்வராஜ் மீது உள்ளது.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு ரவுடியாக வலம் வந்த செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். கடந்த 19-ந் தேதி வேலூர் ஆவின் அலுவலகம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து செல்வராஜை வெட்டிக்கொலை செய்தது. யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    பால்பண்ணை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதில் கொலை நடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி வீச்சு கூட்டாளிகளுக்கும், செல்வராஜிக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். வீச்சு கூட்டாளிகள் விஜயராகபுரத்தை சேர்ந்த யுவராஜ் (23), பிரபு (23), கணேசன் (21), கிரிதரன் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    யுவராஜிக்கும் கொலையுண்ட செல்வராஜிக்கும் மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். சம்பவத்தன்று யுவராஜ் அவரது கூட்டாளிகள் பிரபு, கணேசன், கிரிதரன் ஆகியோருடன் விஜயராகவபுரம் சென்றனர். அங்கு தெருவில் நின்று கொண்டிருந்த செல்வராஜை தாக்கியுள்ளனர். அவர் தப்பி ஓடினர்.

    தேசிய நெடுஞ்சாலையில் ஓடிச் சென்ற அவரை விரட்டி விரட்டி வெட்டினர். பலத்த வெட்டு காயங்களுடன் சாலையை கடந்த செல்வராஜ் ஆவின் வாசல் தரையில் சாய்ந்தார். அவரை விரட்டி வந்தவர்கள் செல்வராஜ் சுய நினைவு இழந்ததையடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ரவுடி வீச்சு கூட்டாளிகள் யுவராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தோட்டப்பாளையம் ஆட்டோ டிரைவரை கடத்தி பாலாற்றில் கொன்று புதைத்த வழக்கு உள்ளது. ரவுடிகள் மோதலால் சத்துவாச்சாரி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் சிக்கி பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் நேற்று மாலை திருப்பத்தூர் காக்கங்கரை இடையேயான தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திருப்பூரை சேர்ந்தவர் உதேஷ்குமார் (33). இவர் நேற்று இரவு ஜோலார்பேட்டை 1-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மேட்டுபாளையம் நோக்கி சென்ற ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நசீயா இவர் இன்று காலை ஆம்பூர் ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தார் அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

    இதுகுறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் எப்படி செய்வது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ தொடர்பாக வாணியம்பாடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #ADMK
    வாணியம்பாடி:

    தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. காட்பாடியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையின்படி வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வாணியம்பாடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு எப்படி பணம் சப்ளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

    தேர்தல் ரத்து அறிவிப்புக்கு முன்னர் பண விநியோகம் குறித்து பேசியுள்ளனர்.

    வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ கோவி. சம்பத்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். தனது பேச்சை மிமிக்ரி செய்து போட்டுள்ளனர். அ.தி.மு.க. சாதனைக்கு ஓட்டு கிடைக்கும். பணம் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தார்.

    இந்த நிலையில் வாணியம்பாடி தாசில்தாரும் தேர்தல் அலுவலருமான முருகன் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் குறித்து பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் மீது புகார் கொடுத்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
    7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக 5 பேர் கும்பலில் ஒருவரை மாணவியின் தந்தை கத்தியால் குத்தினார்.

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருடைய தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    நேற்று இரவு மாணவி மற்றும் அவரது தந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் குமார் உள்பட 5 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை தூக்கி கொண்டு மலை பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. திடீரென கண் விழித்து பார்த்த மாணவியின் தந்தை தூங்கி கொண்டிருந்த மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது இளம்பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடிவந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அங்கு நின்று கொண்டிருந்த குமாரிடம் சென்று தட்டிக்கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் குமார் படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நெக்கினி மலை கிராமத்திற்கு சென்று மரத்தில் கட்டி வைத்திருந்த மாணவியின் தந்தையை மீட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் வேலூர் மாவட்டம் மாநில அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. #Plus2Results
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 714 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 34 ஆயிரத்து 800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18 ஆயிரத்து 664 மாணவர்களில் 15 ஆயிரத்து 59 பேரும், 22 ஆயிரத்து 50 மாணவிகளில் 19 ஆயிரத்து 747 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதம் 85.47 சதவீதம் ஆகும். இதன் மூலம் மாநில அளவில் 32வது இடம். அதாவது கடைசி இடத்தை வேலூர் பிடித்தது. கடந்த ஆண்டு 87 சதவீதம் தேர்ச்சி பெற்று 27வது இடத்தில் இருந்தது.

    தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Plus2Results
    அரக்கோணம் அருகே பெண் கேட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள முருங்கையை சேர்ந்தவர் சந்தானம் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சந்தானம் தனிமையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சந்தானம் நேற்று நடந்த ஊர் திருவிழாவில் மது அருந்திவிட்டு அதே பகுதியை சேர்ந்த சரவணன். என்பவரிடம் குடிபேதையில் உனது பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றுகூறி தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த சரவணன் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் நேற்றிரவு சந்தானம் வீட்டிற்கு சென்று சந்தானத்திடம் தட்டிகேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த கல்லை எடுத்து சந்தானம் தலையில் போட்டார். இதில் படுகாயமடைந்த சந்தானம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து ரமேஷ் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் ரமேஷை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து சரவணன், ரமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்துர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பம் பனந்தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கபடவில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திருப்பத்தூர் பொம்மிக்குப்பம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் பிரச்சனை உள்ளது உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    ×