என் மலர்
வேலூர்
ஆம்பூர்:
வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து வேலூருக்கு குட்கா கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.
ஆம்பூர் பெத்லகேம் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் டவுன் போலீசார் இன்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரும், லாரியும் சேர்ந்து வந்தன. அதன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
போலீசார் கார், லாரியை மடக்கி சோதனையிட்டனர். காரில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த வியாபாரிகள் 3 பேர் இருந்தனர். தொடர்ந்து லாரியில் சோதனையிட்டனர். அதில் அட்டை பெட்டிகளில் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சமாகும். லாரி டிரைவர் சேலத்தை சேர்ந்த சுரேஷ்குமார், கிளீனர் சரவணன் ஆகியாரிடம் விசாரித்தனர்.
அவர்களுடன் காரில் வந்த வேலூர் வியாபாரிகள் கவுஸ், பயாஸ், இப்ராகிம் ஆகியோர் பெங்களூரில் இருந்து வேலூருக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.லாரியுடன் குட்கா வியாபாரிகள் வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இவர்களுக்கு குட்கா சப்ளை செய்தது யார்? அங்கிருந்து எங்கெல்லாம் குட்கா சப்ளை செய்யப்படுகிறது என்பது குறித்து 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutkha
வேலூர்:
கோடை காலத்தில் வேலூர் மாவட்டத்தில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களிலேயே சராசரியாக 100 டிகிரி கொளுத்தும் வெயில் தற்போது மேலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வேலூரில் கடந்த 4 நாட்களாக 103.1 டிகிரி, 104 டிகிரி, 104.5 டிகிரி என தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த ஆண்டின் உச்ச கட்டமாக 111.7 டிகிரி வெயில் கொளுத்தியது.
காலை 10 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வாகனங்களில் சென்றவர்கள் அனல் காற்றை தாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர். அவர்கள் துணியால் போர்த்திக்கொண்டு சென்றனர். ரோடுகளில் கானல் நீராய் தெரிந்தது.
வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் பார், இளநீர், நுங்கு விற்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெயிலுக்கு இதமாக ஏதாவது ஒரு குளிர்பானத்தை குடித்து சமாளித்தனர்.
பகல் முழுவதும்தான் வெயில் வாட்டி வதைக்கிறது என்றாலும் இரவிலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் தூங்கமுடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. அக்னிக்கு முன்பாகவே வேலூரில் 111.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வெயில் அளவு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. வேலூர் மக்களை அச்சுறுத்தும் இந்த கடும் வெயிலுக்கு கோடை மழைதான் ஆறுதலாக இருக்க முடியும். அதனால் கோடை மழை பொழியுமா? உடலுக்கும் உள்ளத்துக்கும் குளிர்ச்சி கிடைக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்று காலையிலும் வெயிலில் தாக்கம் அதிகரித்தது. தொடர்ந்து நேரம் செல்ல செல்ல வெயில் சுட்டெரித்தது. #SummerHeat
வேலூர்:
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கண்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த கார் நிலைதடுமாறி நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்த 2 வாலிபர்கள் உடல் நசுங்கி இறந்தனர். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்தார். காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த வாலிபரை 108 ஆம்புலன்சு மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டது. சிகிக்சை பெற்று வரும் வாலிபர் சுயநினைவில் இல்லை. இதனால் அவர்கள் யார் என்பது தெரியவில்லை, முதற்கட்ட விசாரணையில் பலியானவர்கள் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் மது குடித்துவிட்டு கார் ஓட்டி வந்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர் அருகே உள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது.
வாலாஜாவை சேர்ந்த சரவணன் (வயது 21), சதீஷ் (16) ஆகியோர் இன்று காலை அங்கு பணியில் இருந்தனர். அவர்கள் பட்டாசு பெட்டிகளை வேனில் இருந்து இறக்கி குடோனுக்குள் வைத்தனர்.
அப்போது பட்டாசுகள் உரசி திடீரென வெடித்தன. குடோன் முழுவதும், தீப்பொறி ஏற்பட்டு அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. இதில் சரவணன், சதீஷ் இருவரும் மாட்டிக் கொண்டனர். அவர்களது உடலில் தீ பற்றியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து தீயை அனைத்தனர். இந்த விபத்தில் உடல் கருகிய சதீஷ் சம்பவ இடத்தில் இறந்தார்.
சரவணணை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் தொரப்பாடி ஆசாத் ரோட்டை சேர்ந்தவர் சேட்டு இவரது மனைவி சாயினா (வது 25). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள காந்திஜி 3-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சாயினாவிடம் முகவரி விசாரிப்பது போல் அவர் அணிந்திருந்த நகையை கழட்டி கொடுக்கும் படி மிரட்டினர். அதிர்ச்சியடைந்த சாயினா உயிருக்கு பயந்து தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை கழட்டி கொடுத்தார்.
செயினை வாங்கி கொண்ட அந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது சாயினா கத்தி கூச்சலிட்டார் அதற்குள் அந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து சாயினா பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
வேலூரில் இது போன்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்திற்கும் தொழிலாளர் தினமான நாளை (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மதுபான பார்கள், ஓட்டல்களில் உள்ள பார்களில் விற்பனை செய்தால் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மதுக்கூட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு வேலூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்துள்ளனர்.
ஜோலார்பேட்டை அருகே உள்ள நாராயணபுரம் எம்.எம்.எம். ரெட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 55). தொழிலதிபர். இவர் தனது குடும்பத்தோடு நேற்று முன்தினம் மைசூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். 4 பீரோக்களில் இருந்த 65 பவுன் தங்க நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள், வைர கம்மல்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
நேற்று காலை ஜோதீஸ்வரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டியிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜோதீஸ்வரனுக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து ஜோதீஸ்வரன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பத்தூர் டி.எஸ்.பி.தங்கவேலு, ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தது பார்வையிட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கபட்டு சோதனை செய்யபட்டது. தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது.
வாக்கு எண்ணிக்கை நடக்காததால் தேர்தல் விதி அமலில் உள்ளது. இதனால் மீண்டும் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டத்தில் 39 பறக்கும் படைகள் சோதனை நடத்தி வருகின்றன.
திருப்பத்தூர் பெங்களூர் ரோட்டில் நள்ளிரவு பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது பசலிகுட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (34) என்பவர் காரில் வந்தார். காரை சோதனையிட்ட போது உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது.
அதனை பறிமுதல் செய்து திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூரில் பறக்கும்படைசோதனையில் சிக்கிய ரூ.3½ லட்சத்துடன் அதிகாரிகள்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை 46 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த கல்வியாண்டில் அரக்கோணம், சுவால் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது.
இதையடுத்து நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரக்கோணத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ராவணன், தனது மகள்களான பூந்தளிர், பூந்துளிர் ஆகிய இரட்டை பெண் குழந்தைகளை நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் 2-ம் வகுப்பில் சேர்த்தார். அப்போது அவரது மனைவி பூங்குழலி உடனிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனது இரட்டை பெண் குழந்தைகள் ஏற்கனவே அரக்கோணத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களை அங்கிருந்து மாற்றி சுவால் பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் 2-ம் வகுப்பில் சேர்த்துள்ளேன்.
அரசு பள்ளியில் படிப்பதன் மூலமாக மனம், அறிவு வளர்ச்சி அதிகரிக்கும். இப்பள்ளியில் எனது பிள்ளைகளை சேர்ப்பத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். என்றார்.
வேலூர்:
தமிழகத்திலும் இத்தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து தமிழகத்தில் தேவாலயங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்ற பயங்கரவாதியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டம் வேலூர் மாவட்டம். இங்கும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வருகின்றனர்.
வேலூரில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். நோயாளிகள் போர்வையில் நாசவேலையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் சோதனை செய்ய காவல்துறை சார்பில் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 30 குழுக்களை சேர்ந்த போலீசார் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
5 குழுவினர் வேலூர் மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதி போலீசாரும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய சுற்றுலா தலமான ஏலகிரிமலையில் உள்ள தங்கும் விடுதிகளை ஒரு குழுவினரும், ஆம்பூர், காட்பாடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தலா ஒரு குழுவினரும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் மற்றும் ஆந்திர எல்லை பகுதியிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ் நிலையம், தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களை கண்காணித்து வருகின்றனர்.
சந்தேகப்படும் படியாக யாராவது நடமாடினால் அது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். #SrilankanBlasts
வேலூர்:
தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க வேலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
காட்பாடியில் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் 3 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பின்னர் பறக்கும் படையினர் சோதனைப்பணியை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 39 பறக்கும் படையினர் மீண்டும் இன்று முதல் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு போல ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லபடும் பணம் பொருட்கள் பறிமுதல் செய்யபடும். இந்த சோதனை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அமலில் இருக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையால் வியாபாரிகள் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் அதற்காக தான் இந்த வாகன சோதனை நடத்தப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 24 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் சோதனை செய்து வருகின்றனர். #LokSabhaElections2019
வேலூர்:
வேலூர் தெற்கு போலீசார் நேற்று முன்தினம் அண்ணாசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தினர்.
விசாரணையில், அவர் வேலூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 27) என்பதும், வாகனத்தின் சைலன்சரை அதிக சத்தம் வரும் வகையில் மாற்றி அமைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






