என் மலர்tooltip icon

    வேலூர்

    காட்பாடியில் உள்ள அம்மன் கோவிலில் புகுந்து 150 கிலோ ஐம்பொன் சாமி சிலையை கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

    வேலூர்:

    காட்பாடி வள்ளிமலை சாலையில் வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு முன்பு 150 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை செய்து வைத்தனர்.

    கோவிலை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதி மக்கள் கோவிலில் விழா நடத்தி வருகின்றனர். தினமும் பூஜைகள் செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்வதற்காக கோவில் திறந்தே இருக்கும். இரவு நேரங்களிலும் பூட்டுவதில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த 150 கிலோ ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி சிலை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. கொள்ளைபோன சிலையின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காட்பாடியில் வெளியூர் கும்பல் தங்கிருந்து கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குட்டையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்து ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி 28 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    கொள்ளை கும்பல் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    ஜோலார்பேட்டை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    உடல் நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியாக புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 12-ந்தேதி பேரறிவாளன் பரோலில் வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளார்.

    பேரறிவாளன் தங்கியுள்ள வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. தங்கவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 35 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பேரறிவாளனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இன்று காலையிலும் காய்ச்சல் அதிகரித்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் திலீபன் ஜோலார்பேட்டையில் நடத்தி வரும் கிளீனிக்கில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பேரறிவாளனுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்தனர்.

    டெங்கு காய்ச்சல்

    மேலும் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேரறிவாளனின் ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

    ரத்த பரிசோதனை முடிவை பொருத்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    பேரறிவாளன் அவரது தந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டின் அருகே சுகாதார பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பேரறிவாளன் வீடு அமைந்துள்ள பகுதியில் முழு சுகாதார பணிகள் செய்யப்பட்டது. அவரது வீட்டை சுற்றி பிளீச்சிங் பவுடர், நோய் தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் டெங்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    ஜோலார்பேட்டையில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் பயணிகளிடம் நகை திருடிய வாலிபரை கைது செய்தனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயில்களில் நகை பணம் செல்போன் ஆகியவை திருடப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஒன்றாவது பிளாட்பாரத்தில் ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாலிபர் பள்ளிகொண்டா இந்திரா நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஓடும் ரெயில்களில் பயணிகளிடம் திருடியது தெரியவந்தது. கடந்த மே மாதம் பெங்களூரு செல்லும் ரெயிலில் கிருஷ்ண கிஷோர் என்பவரிடம் ஒரு பவுன் தங்க நகை மற்றும் பிப்ரவரி மாதம் பெங்களூரு ரெயிலில் குல்திப் என்பவரிடம் ஒரு பவுன் தங்க நகை, காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் செல்போன் திருடியது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 பவுன் நகை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    வாலாஜாவில் உதவி கலெக்டர் பிடித்து ஓப்படைத்த மாட்டை மிரட்டல் விடுத்து ஓட்டிசென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பல்வேறு விபத்துகள் நடந்து வருகிறது.

    இதனால் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது.

    இது குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்திடம் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் உதவி கலெக்டர் களத்தில் இறங்கினார்.

    நேற்று முன்தினம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 9 மாடுகளை பிடித்து நகராட்சியில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதில் காகிதக்காரத் தெருவை சேர்ந்த பால் வியாபாரி பிரகாஷ் (30) என்பவர் நகராட்சி அலுவலகம் வந்து அதிகாரிகளை திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்து, அங்கிருந்த தனது மாட்டை அவிழ்த்து ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து வாலாஜா நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாவூத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே பணிமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பணிமனையில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பணிமனையில் பழுதான சரக்கு ரெயில் பெட்டிகளை பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ரெயில் பெட்டிகளில் தேய்ந்து பழுதான உதிரிபாகங்களை வெல்டிங் மூலம் அகற்றியபோது, வெல்டிங் கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.

    இதையடுத்து அங்கிருந்த 100க்கும் மேற்பட்டோர் பணிமனையில் இருந்து வெளியேறினர்.

    இதுகுறித்து ஒப்பந்த ஊழியர்கள் தலைமைக் கண்காணிப்பாளர் ஜான்சன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று, தீயை அணைத்தனர். தீப்பிடித்த சிலிண்டரை அங்குள்ள தண்ணீர் தொட்டியில் அழுத்தினர்.

    இதனால் ரெயில்வே பணிமனையில் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18-ந் தேதி அவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் 18-ந்தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

    சிறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி 20 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை கடந்த 6-ந்தேதி முருகன் கைவிட்டார். இதையடுத்து நளினியுடன் சந்திக்க அனுமதியளித்தனர்.

    தனி சிறை வேண்டாம். ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறு முருகன் சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சிறை போலீசாரிடம் முருகன் நேற்று முன்தினம் மனு அளித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதைத் தொடர்ந்து இன்று 3-வது நாளாக முருகன் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    ஆம்பூர் அருகே உள்ள வங்கியில் பணம் கட்ட வரிசையில் நின்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி விஜயா (வயது 56). இன்று காலை ஆம்பூர் பஜார் வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தை செலுத்துவதற்காக விஜயா ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றார். வங்கியில் கூட்டம் அதிகளவில் இருந்தது. அவர் பணத்தை செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் விஜயாவின் பையிலிருந்த ரூ.50 ஆயிரத்தை நைசாக எடுத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியேறிவிட்டார். வங்கியில் செலுத்த பணத்தை பையில் தேடியபோது பையிலிருந்த பணம் மாயமானது கண்டு விஜயா அதிர்ச்சி அடைந்தார். அங்கு நின்றவர்களிடம் விசாரித்தார். யாரும் தெரியாது என்று கூறினர்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பெண் ஒருவர் விஜயாவின் பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவத்தை வைத்து அவரை தேடி வருகின்றனர்.
    வாணியம்பாடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் இர்ஷாத் கான் (32). இவரது மனைவி ‌ஷபானா (30). இவர்களுக்கு 5 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இர்ஷாத்கான் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். வெளிநாட்டில் இருந்து வந்தது முதல் குடித்துவிட்டு மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த இர்ஷாத்கான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ‌ஷபானா வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார். இர்ஷாத்கான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    குடல் சரிந்த ‌ஷபானா வலியால் அலறி துடித்து கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ‌ஷபானா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இர்ஷாத்கானை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளியில் கடன் தொல்லையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அடுத்த தேக்குலபாளையத்தை சேர்ந்தவர் நாகமணியப்பா (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (30). இவர்களுக்கு ‌ஷர்ஷிதா (8) என்ற மகள் உள்ளார்.

    நாகமணியப்பாவுக்கு கடன் தொல்லை இருந்ததால் மகளை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு கணவன் மனைவி இருவரும் கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளியில் தங்கி கூலி வேலைசெய்து வந்தனர். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்து மகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்தபோது கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியில் இருந்த கணவன் மனைவி இருவரும் பொம்மனஹள்ளிக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று காலை நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து பொம்மனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவும், அவரது தந்தையின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
    ஜோலார்பேட்டை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    உடல் நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியாக புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மாத பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது குயில்தாசனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று காலை புழல் ஜெயிலில் இருந்த பேரறிவாளனை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் ஆயுதப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    பேரறிவாளன் தங்கியுள்ள வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. தங்கவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 35 போலீசார் 24 மணி நேரமும் அவரது வீட்டின் முன்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுவாக பரோலில் வரும் கைதிகள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது.

    பேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதியை சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நவம்பர் 23, 24-ந் தேதிகளில் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அவரது தந்தை குயில்தாசனின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது.

    ரத்த சம்பந்த உறவினர்கள் மட்டுமே அவரை சந்திக்கலாம். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஒரு மாத பரோல் டிசம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது.



    வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் மெத்தனமாக ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள் 50 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு 900-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த மாதம் 480 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது.

    இந்த மாதத்தில் 142 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் இறந்துள்ளனர்.

    இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 910 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை செய்தனர்.

    டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சரியாக செய்யாத தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

    அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தற்காலிக பணியாளர்கள் 50 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் மெத்தனம் காட்டியது தெரியவந்தது.

    இதனையடுத்து மாவட்டம் முழுவதும் 50 பேரை பணிநீக்கம் செய்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அவர்களுக்கு பதிலாக புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரே நாளில் தற்காலிக பணியாளர்கள் 50 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    வேலூர்:

    வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ் லைன், கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண் பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், கிராமங்களிலும் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×