
வாணியம்பாடி:
வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் இர்ஷாத் கான் (32). இவரது மனைவி ஷபானா (30). இவர்களுக்கு 5 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இர்ஷாத்கான் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். வெளிநாட்டில் இருந்து வந்தது முதல் குடித்துவிட்டு மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த இர்ஷாத்கான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஷபானா வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார். இர்ஷாத்கான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
குடல் சரிந்த ஷபானா வலியால் அலறி துடித்து கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷபானா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இர்ஷாத்கானை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.