என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டம் வாலாஜாவில் அழுது கொண்டிருந்த குழந்தையை துணியால் அமுக்கி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டம் வாலாஜா திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் மனைவி அம்மு என்கிற பவித்ரா (வயது 22). இவரது மகள்கள் ரம்யா (3), மவுலிகா (1½). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பவித்ரா குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார்.

    காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. நேற்று இரவு குழந்தை மவுலிகா அழுதுகொண்டே இருந்தது. அதனை சமாதானம் செய்ய பவித்ரா முயன்றுள்ளார். அழுகை நிறுத்தாததால் துணியால் குழந்தையின் வாயை அமுக்கியுள்ளார்.

    அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மவுலிகா மயங்கியது. இதனால் திடுக்கிட்ட பவித்ரா குழந்தையை தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் அதியமான் இது பற்றி வாலாஜா போலீசில் புகார் அளித்தார். போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து பவித்ராவை கைது செய்தனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வார்டு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆதார், ரேசன் கார்டுகளை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 58-வது வார்டு அரியூர் விசுவநாதன் நகர் தற்போது வார்டு மறுவரையறை செய்யப்பட்டு 59-வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதி மக்கள் வாக்களிக்க சித்தேரிக்கு செல்ல வேண்டியிருக்கும். அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் 58-வது வார்டில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பகுதி 59 வார்டிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 40க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆதார் அட்டை, ரேசன் கார்டு மற்றும் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றை தரையில் வீசினர்.

    மேலும் தரையில் அமர்ந்து பதாகைகளை ஏந்தியபடி கோ‌ஷம் எழுப்பினர்.

    கலெக்டர் அலுவலக பொது மேலாளர் முரளி, தாசில்தார் பாலாஜி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

    அரியூர் ஊராட்சியில் இருந்தபோது நாங்கள் எங்கள் பகுதியில் வாக்களித்து வந்தோம் மாநகராட்சியில் சேர்க்கப் பட்ட பின்னர் 58-வது வார்டில் இணைத்தார்கள்.

    தற்போது வார்டு மறுவரையரை செய்யப்பட் டதால் 59 வார்டில் சேர்த்துள்ளனர். இதனால் வாக்களிக்க சித்தேரி செல்ல வேண்டியுள்ளது.

    இது எங்களுடைய உரிமையை பறிப்பதாக உள்ளது என்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    பொதுமக்கள் போராட்டத்தை அறிந்த சத்துவாச்சாரி போலீசார் விரைந்து வந்து அவர்களை வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் சத்துவாச்சாரி சாலை செங்கையம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையொட்டி சாலை கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடக்கிறது. அம்மன் சன்னதி முன்பும் கோவிலுக்கு வெளியே உள்ள சிங்கத்தின் வாய் வழியாக காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல்கள் வைக்கபட்டுள்ளன.

    நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள காணாறு வழியாக உள்ளே புகுந்தனர். அம்மன் காலடியில் உள்ள சிலையை தூக்கி வந்து சாமி சன்னதியில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் சிங்கத்தின் வாய்வழியாக காணிக்கை செலுத்தும் உண்டியலை பின்பக்கமாக உடைக்க முயற்சி செய்துள்ளனர். அதனை உடைக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் உண்டியல்கள் உடைக்க பயன்படுத்திய சிலையை உண்டியல் அருகே வீசி விட்டு சென்றுவிட்டனர். இன்று காலை கோவிலில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    இது பற்றி சத்துவாச்சாரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் எதுவும் கொள்ளை போகவில்லை என போலீசார் தெரிவித்தனர். திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எப்போதும் ஆள்நட மாட்டம் உள்ள இந்த பகுதியில் கொள்ளை கும்பல் புகுந்து உண்டியலை உடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலூர் மாவட்டம் காட்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளை போன 108 கிலோ ஐம்பொன் சிலை தண்டவாளம் அருகே மீட்கப்பட்டது.
    வேலூர்:

    காட்பாடி வள்ளிமலை சாலையில் வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு முன்பு 108 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை செய்து வைத்தனர்.

    கடந்த 14-ந்தேதி இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 108 கிலோ ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.

    கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே கொள்ளை போன 108 கிலோ ஐம்பொன் சிலையை திருட்டு கும்பல் வீசி சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சிலையை மீட்டு கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். ஐம்பொன் சிலை கிடைத்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் பரவசமடைந்தனர்.

    ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து தண்டவாளத்தில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலம் நேருநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு 2 ஆழ்துளை கிணறுகள் மூலம்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின்மோட்டார்கள் பழுதானதாக கூறப்படுகிறது.

    இதனால் நேருநகர் பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்படுகிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் திரண்டுவந்து திருப்பத்தூர்- புதுப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் வட்டாரவளர்ச்சி அலுவலர் முருகேசன் மற்றும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.
    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள கதிரிமங்கலம் நேருநகர் பகுதியில் 2 போர்வெல்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக போர்வெல் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது பற்றி பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலிகுடங்களுடன் திரண்டனர்.

    அவர்கள் திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். புதிய போர்வெல் அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    காட்பாடி அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு கம்மவார் தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது62). 2017-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது மோகன்தாஸ் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். வீடு திரும்பிய சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

    சிறுமியை பரிசோதித்த பெற்றோர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தனர். இதுபற்றி திருவலம் போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த வழக்கு காட்பாடி மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன் தாசை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் மோகன்தாசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார். கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை என்று தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
    விபத்தில் மூளைச்சாவு அடைந்த போளூர் பர்னிச்சர் கடை உரிமையாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
    ஆரணி:

    போளூர் ஹவுசிங் போர்டு எதிரில் பர்னிச்சர்  கடையை நடத்தி வந்தவர். ஜெகன் (வயது 25). இவர் நேற்று முன்தினம் போளூரில் இருந்து ஆரணி ராட்டினமங்கலம் ரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பைக்கில் வந்தார். முள்ளிப்பட்டு சேவூர் பைபாஸ் சாலை அருகே  சென்ற போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட  அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் அங்கு ஜெகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. பின்னர் தாயார் கோதாவரி, சகோதரி பிரியா ஆகியோரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து மருத்துவக்குழுவினர் கண்கள், கல்லீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உடனடியாக உடல் உறுப்பு தேவையானவர்களுக்கு பொருத்தினர்.

    ஓச்சேரி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சென்னை பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆற்காடு:

    சென்னை திருவேற்காடு கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு வியாபாரி. இவரது மனைவி சித்ரா (வயது 42). கணவன் மனைவி இருவரும் வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இன்று காலை பைக்கில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    ஓச்சேரி அடுத்த சித்தஞ்சி கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது இவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி இருவரும் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த சேட்டுவை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் சிறையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன், இன்று தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18-ந் தேதி அவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

    இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த முருகன், தனி சிறை வேண்டாம் என்றும் ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறும் சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர். எனவே, தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றக்கோரி முருகன் கடந்த 11-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 

    அவரது உண்ணாவிரதம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இன்று அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறினர். மேலும் நீதிமன்றம் தெரிவித்த கருத்தையும் தெரிவித்தனர். இதையடுத்து முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

    ஏற்கனவே சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த மாதம் 18-ம் தேதியில் 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
    கே.வி.குப்பம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    கே.வி.குப்பம் அருகே உள்ள முருங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் சத்தியராஜ் (வயது18).

    தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த மகேந்திரன் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி மாணவர் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் இன்று 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவரது வக்கீல்கள் முருகனை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18-ந் தேதி அவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் 18-ந்தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

    சிறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி 20 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை கடந்த 6-ந்தேதி முருகன் கைவிட்டார். இதையடுத்து நளினியுடன் சந்திக்க அனுமதியளித்தனர்.

    தனி சிறை வேண்டாம். ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறும் அல்லது புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று முருகன் சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சிறை போலீசாரிடம் முருகன் 11-ந் தேதி மனு அளித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதைத் தொடர்ந்து இன்று 5-வது நாளாக முருகன் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் முருகனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்க கோரி முருகனின் உறவினர் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறைத்துறை அதிகாரிகள், முருகனை அவரது மனைவி நளினி மற்றும் அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும்.

    நிர்வாகக் காரணங்களுக்காக சிறைச்சாலையின் மற்றொரு பகுதிக்கு முருகனை மாற்றியுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    எனவே, அதில் கோர்ட்டு தலையிட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தண்டனையை அதிகாரிகள் தளர்த்திக் கொள்ள வேண்டும்.

    இனிவரும் காலங்களில் முருகன் சிறைக்குள் இதுபோன்ற உண்ணாவிரதம் இருக்க கூடாது என மனுதாரர் அவரது வக்கீல்கள் அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

    ஆனால் முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது தொடர்பாக அவரது வக்கீல்கள் முருகனை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    ×