search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் நீதிமன்றம்"

    வேலூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள மொரசப்பள்ளி ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 38). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 2009-ம் ஆண்டு வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடந்தது. இதற்காக சிவா அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தார்.

    2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி சிவா கட்டுமானப் பணி நடக்கும் பகுதிக்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் வழியாக 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். சிறுமியை பார்த்த சிவா பின்தொடர்ந்து சென்று திடீரென மடக்கி பிடித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். காப்பாற்றுங்கள்... எனச் கூச்சல் போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, சிறுமியின் வாயை பொத்தி, அப்பகுதியில் கிடந்த கல்லில் தலையை மோதினார். பலத்த அடியால் மயக்கமடைந்த சிறுமியின் கழுத்தைப் பிளேடால் அறுத்துக் கொலை செய்து விட்டு, உடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்குள்ள விவசாயக் கிணற்றில் உடலை வீசினார். களைந்த சிறுமியின் உடைகளை அங்கேயே தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கொலை செய்தது சிவா என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக சிவாவுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியின் உடைகளை களைந்து தீ வைத்து எரித்து, தடயங்களை அழிக்க முயற்சி செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சிவா, பலத்த காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்து 3 வயது சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த பெண்ணுக்கு வேலூர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள டோபிகானா பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 35) மெக்கானிக். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு தீபக், தினேஷ், ஸ்ரீநாத் என்ற 3 மகன்கள் உண்டு. முரளிக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு சுமதி(30) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இந்த சம்பவம் முரளியின் மனைவி சுமதிக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர், தனது கணவருடனான பழக்கத்தை விட்டுவிடுமாறு சுமதியை கண்டித்துள்ளார். இதனால் முரளி அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இதன் காரணமாக முரளியின் மனைவி சுமதி மீது அந்தப்பெண் ஆத்திரமடைந்தார். மேலும் அவரை பழிவாங்க திட்டமிட்டார்.

    24.10.2014 அன்று முரளியின் இரண்டாவது மகன் தினேஷ்(வயது 3) வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அவனை முரளியின் கள்ளக்காதலி சுமதி தனது வீட்டுக்கு கடத்திச்சென்றார். அங்கு சிறுவன் தினேசின் கை, கால்களை கட்டி, வாயையும் கட்டினார். தொடர்ந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தார். பின்னர் சிறுவனின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் பீரோவில் மறைத்துவைத்து விட்டார். அதில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க மிளகாய் பொடியை தூவினார்.

    இந்த நிலையில் மகனை காணாததால் முரளி மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சிறுவன் தினேசை கொலைசெய்தது பற்றி சுமதி தனது உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டார். உடனே போலீசார் சுமதியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சிறுவன் தினேஷ் கொலை செய்யப்பட்டு பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், சுமதியை கைதுசெய்தனர்.

    இந்த வழக்குவிசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி எஸ்.குணசேகர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். சிறுவனை கொலை செய்ததற்காக சுமதிக்கு 10 வருடமும், கொலையை மறைத்ததற்காக 3 வருடமும் சிறைத்தண்டனை விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார்.
    குடியாத்தம் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    குடியாத்தம் சாம்பரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 23) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்டோவில் பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு ஆம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அழிஞ்சிகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23). ராஜா (25). உதயவாணன் (22). தென்னரசு (23) ஆகிய 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சார்லஸ் ஓட்டிச் சென்ற ஆட்டோ அவர்கள் மீது லேசாக உரசியபடி நிற்காமல் சென்றுள்ளது.

    சார்லஸ் ஆட்டோ பயணியை ஆம்பூரில் இறக்கி விட்டு குடியாத்தம் திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோ உரசியபடி சென்ற ஆத்திரத்தில் இருந்த 4 பேரும் ஆட்டோ அந்த வழியாக வந்ததை கண்டு வழிமறித்து சார்லசை உருட்டு கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

    இதில் பலத்த காயமடைந்த சார்லஸ் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். குற்றவாளிகள் தினேஷ், ராஜா, உதயவாணன், தென்னரசு ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் அ.கோ. அண்ணாமலை வதாடினார்.
    ஆம்பூர் அருகே டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தில் கைதான 40 பேரை வேலூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அவர் இன்று தீர்ப்பளித்தார். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைதான 40 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறினார்.

    இதையடுத்த கைதான 40 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
    சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    வேலூர்:

    ஆம்பூர் ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்த சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை சதீஷ்குமார் கடத்தி சென்று கற்பழித்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயிலில் இருந்து சதீஷ்குமாரை அழைத்து வரப்பட்டு, மகளிர் கோர்ட்டு நீதிபதி செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா வாதாடினார்.

    குற்றம் நிரூபனமானதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சதீஷ்குமாருக்கு 2 பிரிவுகளில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    இதையடுத்து, சதீஷ்குமார் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    ×