என் மலர்
வேலூர்
வேலூரில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. அதைத் தொடர்ந்து இரவில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய கொட்டியது.
இடைவிடாது பெய்த பலத்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், காவேரிப்பாக்கம், ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர் பகுதியில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 78 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வேலூர், காட்பாடி, 54 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் விடிய விடிய பரவலாக மழைபெய்து வருகிறது. ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சாத்தனூர் அணை, போளூர், வெம்பாக்கம் பகுதியில் மழை கொட்டியது.
அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 78 மி.மீ மழை கொட்டியுள்ளது.
சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 94.25 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் குப்பநத்தம், செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி விடுதலை தாமதம், பரோல் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கருணை கொலை செய்யக்கோரி பிரதமருக்கு ஒரு பக்க மனுவை எழுதி, சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆண்டாளிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடுத்து விட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நளினி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு மேகம் மந்தமாக காணப்பட்டது. இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.
இன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் சில தனியார் பள்ளிகள் திறந்திருந்தன. இதனால் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர்.
மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை அணைக்கு 138 கனஅடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 94 அடியாக உள்ளது.
இதேபோல் குப்பநத்தம், செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தந்தையின் சிகிச்சைக்காகவும், சகோதரி மகள் திருமணத்துக்காகவும் 30 நாள் நிபந்தனைகளுடன் கூடிய பரோலில் கடந்த 12-ந்தேதி வெளியில் வந்தார்.
தற்போது ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ள அவர் தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பேரறிவாளன் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். உடன் போலீசார் சென்றனர். அங்கு குயில்தாசனுக்கு 1 மணி நேரம் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதனை தொடர்ந்து பேரறிவாளன் தந்தையுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தை நேற்று முதல் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.
இதற்கிடையே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவியது.
இந்த தகவலை உறுதிபடுத்திக் கொள்ள சிறைத்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் ஜெயில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிகாரிகளிடம் நளினி மனு அளித்துள்ளார். ஆனால் அதில் உள்ள தகவலை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
கருணைக்கொலை செய்யக்கோரி தான் அவர் மனு அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த மனு குறித்து, நளினியின் வக்கீல் புகழேந்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த தகவல் எனக்கும் வந்துள்ளது. ஆனால் உண்மையா? என தெரியவில்லை. இதுபற்றி ஜெயில் அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர்.
ஓரிரு நாட்களில் நளினியை சந்திக்க உள்ளேன் என்றார். வக்கீல் புகழேந்தி ஜெயிலுக்கு வந்து நளினியை சந்தித்து பேசிய பின்னர் தான் முழுமையான தகவல் வெளிவரும்.
திருப்பத்தூர் மாவட்டம் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர்கபில் ஆகியோர் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது சம்பந்தமாக பலதரப்பட்டவர்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது.
ஜெயலலிதா அரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் நான் கடந்த சுதந்திர தின விழா உரையில் இம்மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க இன்று திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி உள்ளது.
திருப்பத்தூர் நகரம் ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை என 2 பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி. ஜவ்வாது மலை இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள் நீரோடைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதன் ஒரு பகுதி ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமிர்தி உயிரியல் பூங்காவும் சுற்றுலா தலங்களாக இயங்கி வருகிறது.
ஆம்பூர், வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் அன்னியச் செலாவணி அதிக மீட்டு தருவதோடு மட்டுமல்லாமல் இங்கு மக்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை போன்ற இடங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1790- ஆம் ஆண்டிலேயே திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், சித்தூர், வடஆற்காடு மாவட்டங்களுடன் சேர்ந்து பயணித்தது. தற்போது புதிய மாவட்டமாக உதயமாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரம். திருப்பத்தூர் நகர வட்டத்தின் பரப்பளவு 17.98 சதுர கிலோமீட்டர் இந்த மாவட்டத்தில் மக்கள் தொகை 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 வருவாய் நிர்வாகத்தை பொருத்தமட்டில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என இரண்டு வருவாய்க் கோட்டங்களும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நாட்றாம்பள்ளி ஆகிய 4 வட்டங்களும் 15 உள்வட்டங்கள், 195 வருவாய் கிராமங்கள் உள்ளன.

புதிதாக மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவரும், சில எதிர்ப்பாளர்களும் ஒரு பொய்யான கருத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
தி.மு.க. ஆட்சியில் தான் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டதாக ஒரு பொய்யான தகவலை எதிர்க்கட்சி தலைவர் பரப்பி வருகிறார். ஆனால் ஜெயலலிதா இருந்தபோது சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறோம்.
2011-ம் ஆண்டு முதல் இன்று வரை ரூ.688 கோடி மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கி உள்ளோம்.
சுயதொழில் செய்து சொந்த காலில் நிற்க கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த திட்டம் எல்லாம் சிந்தாமல் சிதறாமல் கிராமப்புறத்தில் இருக்கின்ற ஏழை விவசாயி பெண் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார மேம்பாடு அடையச் செய்து வருகிறது.
நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 7 ஆயிரம் கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இன்று புதிய மாவட்டம் தொடங்கிவைக்கப்பட்டு 7,977 பயனாளிகளுக்கு ரூ.94.37 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளன.
சத்தியத்தாய் வழியில் செல்லும் இந்த அரசில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வந்து சேரும். கிராம மக்கள் குறைகளை தெரிவிக்க முதல்-அமைச்சர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதியோர் உதவி தொகை 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என அறிவித்தோம். இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கியதை போல் இந்த ஆண்டு 10 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். நாளை சென்னை கோட்டையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றளவு 30 கிலோ மீட்டர் குறுகிய வட்டத்துக்குள் உள்ளது. இதன் மூலம் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் மக்கள் குறைகளை எளிதாக போக்கவே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2 மாவட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. இது வரலாற்று சாதனையாகும்.
மற்ற மாவட்டங்கள் தொடக்க விழா நடந்த போது வெயில் சுட்டெரித்தது. ஆனால் இன்று தட்பவெட்ப நிலை மாறியுள்ளது. குளுமையாக புதியமாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, வேலூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இரு இடங்களில் பிரம்மாண்ட தொடக்க விழா நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா இன்று காலை திருப்பத்தூர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
ரூ.94 கோடியே 37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் ரூ.89 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.184 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், தொடக்க விழா நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது-. திருப்பத்தூரில் விழா நடக்கும் இடத்தில் 1000 போலீசார், ராணிப்பேட்டையில் 1000 போலீசார் மற்றும் முதலமைச்சர் செல்லும் பாதைகளில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராணிப்பேட்டையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., தலைமையில் முகம்மது ஜான் எம்.பி., சம்பத் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். விழாவையொட்டி திருப்பத்தூர், ராணிப்பேட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவும், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய 3 தாலுகாக்களை உள்ளடக்கி வேலூர் வருவாய் கோட்டமாகவும், மற்றொரு கோட்டமாக குடியாத்தம் கோட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 3 தாலுகாக்கள் உள்ளடக்கி வருகிறது.
இதேபோல் புதிதாக பிரிக்கப்படும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ராணிப்பேட்டை கோட்டத்தில் ஆற்காடு, வாலாஜா ஆகிய தாலுகாக்கள் வருகின்றன. புதிதாக அரக்கோணம் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரக்கோணம், நெமிலி தாலுகாக்கள் இடம் பெறுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் கோட்டத்தில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய தாலுகாக்கள் இடம் பெறுகிறது. புதிதாக வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாகிறது. இதில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலுகாக்கள் இடம் பெறுகிறது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக சிவன் அருள், போலீஸ் சூப்பிரண்டாக விஜயகுமார், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டாக மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா ஆற்காட்டில் நடந்தது.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு, விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கூட்டுறவுத் துறை பல்வேறு சிறப்புகளை மக்களுக்கு செய்து வருகிறது.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ. 1,000 இந்த ஆண்டு 10 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.
அதிக பயிர் கடன் வழங்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 88 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ. 46ஆயிரத்து 773 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால், அந்த கடனுக்குரிய வட்டியை அரசே செலுத்துகிறது.
வேலூர் மண்டலத்தில் இதுவரை 6 லட்சத்து 9 ஆயிரத்து 244 விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்று இருந்தன.
தற்போது புதுமையான திட்டங்களை தந்து, நவீனமயமாக்கி தனியார் வங்கிகளுடன் போட்டியிடும் நிலை உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ரூ. 54 ஆயிரம் கோடி வைப்புத் தொகை உள்ளது.
தற்போது சிறுவணிகக் கடன் ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனை மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தலாம்.
மேலும் வீட்டு அடமானக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றை அதிகப்படுத்தி உள்ளோம். இன்று 23 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் வருமான வரி கட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளன.
தற்போது 75 ஆயிரத்து 866 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. அரசு எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் 8 மட்டுமே இருந்த நிலையில், தற்போது 36ஆவது விற்பனை நிலையம் ஆற்காட்டில் திறக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 12 நிலையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜோலார்பேட்டை:
திருவனந்தபுரத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூருக்கு செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்றுவிட்டு காட்பாடி நோக்கி புறப்பட்டது.
ஆம்பூரை கடந்து குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்ததில் சிறிய பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த கற்கள் ரெயில் என்ஜினில் சிக்கி தூள் தூளாக நொறுங்கி சிதறியது. பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை அந்த இடத்திலேயே நிறுத்தினார்.
இந்த தண்டவாளத்தையொட்டி எதிர்திசையில் ரெயில்கள் செல்ல மற்றொரு தண்டவாளம் உள்ளது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அந்த தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்தது. அந்த தண்டவாளத்திலும் இதுபோன்று கற்கள் வைக்கப்பட்டிருந்தன. சரக்கு ரெயிலில் அந்த கற்களும் தூள்தூளாக நொறுங்கியது. இதனால் சரக்கு ரெயிலும் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து என்ஜின் டிரைவர்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 20 நிமிடம் கழித்து ரெயில்கள் அந்த இடத்திலிருந்த மெதுவாக புறப்பட்டு சென்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோன்று அந்த பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக குடியாத்தம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போல் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டுள்ளது. பாறாங்கற்களை வைத்து தப்பியவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கச்சேரி தெருவை சேர்ந்தவர் ரித்திக்ஷா ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி கயல்விழி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
தம்பதியின் மகன்கள் வீரம், கவுரவ்ஷா (வயது 6). இரண்டாவது மகன் கவுரவ்ஷா அங்குள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். நேற்று காய்ச்சலின் தீவிரம் அதிகமானது.
இதனையடுத்து வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுரவ்ஷா இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மர்ம காய்ச்சல் அந்த பகுதியில் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. பொது மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் மோட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45). கார் டிரைவர். இவரது மனைவி ரோசி (35). இவர்களுடைய மகளுக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதற்காக உறவினர்கள் வந்திருந்தனர்.
ரோசியின் அண்ணன் சதுப்பேரியை சேர்ந்த ஜோசப் (54) தாய்மாமன் சீர்செய்ய குடும்பத்தினருடன் வந்திருந்தார். மதியம் விழா முடிந்தது. மாலையில் உறவினர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது மோகன்ராஜ் குடிபோதையில் ஜோசப் மற்றும் அவருடைய குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை ஜோசப் தட்டிக் கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோசப் விறகுக்கட்டையால் மோகன்ராஜை தாக்கினார். கீழே விழுந்த மோகன்ராஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. மயங்கி சரிந்த மோகன்ராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி மோகன்ராஜின் மனைவி ரோசி வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோசப்பை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






