என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் தந்தை அடித்துக் கொலை - தாய் மாமன் கைது

    வேலூர் அருகே மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் தந்தையை அடித்துக் கொலை செய்த தாய் மாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் மோட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45). கார் டிரைவர். இவரது மனைவி ரோசி (35). இவர்களுடைய மகளுக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதற்காக உறவினர்கள் வந்திருந்தனர்.

    ரோசியின் அண்ணன் சதுப்பேரியை சேர்ந்த ஜோசப் (54) தாய்மாமன் சீர்செய்ய குடும்பத்தினருடன் வந்திருந்தார். மதியம் விழா முடிந்தது. மாலையில் உறவினர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மோகன்ராஜ் குடிபோதையில் ஜோசப் மற்றும் அவருடைய குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை ஜோசப் தட்டிக் கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோசப் விறகுக்கட்டையால் மோகன்ராஜை தாக்கினார். கீழே விழுந்த மோகன்ராஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. மயங்கி சரிந்த மோகன்ராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் பற்றி மோகன்ராஜின் மனைவி ரோசி வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோசப்பை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×