என் மலர்tooltip icon

    வேலூர்

    தொடர் மழை காரணமாக தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் வெயிலில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமபட்டு வருகின்றனர்.

    வேலூர்:

    கார்த்திகை தீபவிழா 10-ந் தேதி நடைபெறுகிறது. அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். கண்ணமங்கலம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

    படவேடு பகுதியில் கார்த்திகை அகல்விளக்கு, அலாவுதீன் விளக்கு, மேஜிக் விளக்கு மற்றும் மேஜிக் மண்பாண்ட ஜக் உள்பட பல்வேறு வகையான மண்பாண்ட பாத்திரங்கள் செய்து விற்பனை செய்யும் தொழிலாளி தர்மலிங்கம் கூறியதாவது;

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். கார்த்திகை தீபத்துக்கு அகல்விளக்குகள் தயார் செய்து உள்ளோம். ஆனால் தொடர் மழை காரணமாக தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் வெயிலில் காய வைக்க முடியாமல் உள்ளது. 

    தற்போது நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் கடந்த ஏப்ரல் மாதத்தில் சேகரித்து வைத்த மண் கொண்டு அகல்விளக்குகள் தயாரித்தோம்.  மண்பாண்டத்தின் மூலம் தற்போது அலாவுதீன் விளக்கு, மேஜிக் விளக்கு, மேஜிக் தண்ணீர் ஜக்கு, உள்பட பல்வேறு விதமான விளக்குகள் செய்து விற்பனை செய்கிறோம். என்றார். பொதுவாக அகல்விளக்குகள் மூலம் ஏற்றப்படும் தீபம் மன அமைதி, காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அரக்கோணம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாகவேடு காலணியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). 2 பேரும் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். இன்று காலை இருவரும் நெமிலியில் இருந்து நாகவேடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அரக்கோணத்தில் இருந்து நெமிலி நோக்கி வந்த லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி வெங்கடேசனும், விசுவநாதனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி. மனோகரன், தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி-முருகன் உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவர்களுக்கு இன்று 2வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி நளினி இன்று 9-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கருணை கொலை செய்யக்கோரி முருகனும் ஜெயிலில் 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    நளினி-முருகன் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு குறித்து காலை மற்றும் மாலை நேரங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

    2 பேர் உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவர்களுக்கு இன்று 2-வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

    செம்மரக்கடத்தல் தகராறில் கணவனை கடத்த முயன்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பூங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவரது மனைவி சாந்திப்பிரியா (25).

    இவர்கள் இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கோமதி (6) என்ற பெண் குழந்தை உள்ளது.

    சீனிவாசனுக்கு ஒடுகத்தூரை சேர்ந்த அசோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    சீனிவாசன் பூங்குளம் கிராமத்தில் இருந்து அசோகனுக்கு கூலி வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் பூங்குளத்தில் இருந்து கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா, சென்றாயன், சஞ்சய், மற்றொரு பழனி, வெங்கடேசன் ஆகிய 7 பேரை கூலி வேலைக்காக அசோகனிடம் அனுப்பி வைத்தார்.

    அவர்களை அசோகன் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக அழைத்து சென்றார். அங்கு வெட்டப்பட்ட செம்மரங்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து அவற்றை விற்பனை செய்த பின்னர் கூலி வழங்குவதாக கூறி 7 பேரை பூங்குளத்திற்கு அனுப்பி வைத்தார்.

    10 நாட்களாகியும் அவர்களுக்கு கூலி வழங்கவில்லை. இதனால் அவர்கள் 7 பேரும் சீனிவாசனிடம் கூலி வாங்கி தருமாறு வற்புறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சீனிவாசன் அசோகனிடம் பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு தர மறுக்கிறார் என நினைத்து நேற்று இரவு 7 பேரும் சீனிவாசன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.

    அப்போது சீனிவாசனுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. இதில் அவர்கள் 7 பேரும் சீனிவாசனை சரமாரியாக தாக்கி காரில் கடத்தினர்.

    இதைப்பார்த்த சாந்திப் பிரியா மற்றும் சீனிவாசனின் தாய் மல்லிகா இருவரும் அவர்களை தடுத்தனர். அப்போது அவர்கள் சாந்திப்பிரியாவையும், மல்லிகாவையும் சரமாரியாக அடித்து தள்ளிவிட்டனர். இதில் கீழே விழுந்து அவர்கள் படுகாயமடைந்து மயங்கி விழுந்தனர்.

    பின்னர் அவர்கள் சீனிவாசனை காரில் கடத்தி சென்றனர். இதற்கிடையே சாந்திப்பிரியாவின் சத்தம் கேட்டு ஊர்மக்கள் திரண்டு விட்டதால் பயந்துபோன 7 பேர் கும்பல் சீனிவாசனை காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.

    சாந்திப்பிரியா மயங்கி கிடப்பதை பார்த்த உறவினர்கள் அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சாந்திப் பிரியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மல்லிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சாந்திபிரியாவின் தந்தை மணி மற்றும் மாமனார் நாராயணன் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் முன்பகுதியில் ஆலங்காயம்- திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    வாணியம்பாடி டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

    கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஒடுகத்தூர் அருகே மறைத்து வைக்கப்பட்ட 900 கிலோ செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி- முருகன் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய வேண்டும் என்று நளினி பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    அதில் தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி நளினி கடந்த 28-ந்தேதி உண்ணா விரதத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கருணை கொலை செய்யக்கோரி முருகனும் ஜெயிலில் 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    நளினி- முருகன் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு குறித்து காலை மற்றும் மாலை நேரங்களில் பரிசோதனை செய்யப் படுகிறது. அதிகாரிகள் கேட்டு கொண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர். தொடர்ந்து ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பனப்பாக்கத்தில் அரசு ஆண்கள் பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப்களை திருடி சென்று விட்டனர்.

    வேலூர்:

    பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்கனவே லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்களுக்கு 83 லேப்-டாப்களை அங்குள்ள அறிவியல் ஆய்வகத்தில் வைத்திருந்தனர். பள்ளியில் இரவு நேர காவலராக சின்னபொண்ணு என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் அறிவியல் ஆய்வக பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த 13 லேப்-டாப்களை மட்டும் திருடி சென்று விட்டனர். இன்று காலை பள்ளியில் திருட்டு நடந்ததை கண்டு தலைமை ஆசிரியர் ஆதிமூலம் மற்றும் ஆசிரியர்கள் திடுக்கிட்டனர்.

    இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பள்ளியில் லேப்-டாப் இருப்பதை தெரிந்து திருடியுள்ளனர். 13 லேப்-டாப் மட்டுமே திருடு போயிருப்பதால் இதில் ஒருவர் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால் தான் தூக்கி செல்ல முடியாமல் மற்ற லேப்-டாப்களை விட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே ஓடும் ரெயிலில் மேல் படுக்கை சீட்டில் இருந்து தவறி விழுந்து நெல்லையை சேர்ந்த ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

    அரக்கோணம்:

    திருநெல்வேலியை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது 56). ரெயில்வே ஊழியர். இவர் மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேல் படுக்கை சீட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அரக்கோணம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் மேல் படுக்கை சீட்டில் இருந்து எதிர்பாராத நிலையில் காஜாமொய்தீன் ரெயில் பெட்டிக்குள் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கினார்.

    அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    ரெயில் அரக்கோணத்திற்கு வந்ததும் காஜா மொய்தீனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரக்கோணம் பகுதியில் பலத்த மழையால் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

    அரக்கோணம்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அரக்கோணம் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அரக்கோணம் இரட்டை கண் பாலத்தில் மழைநீர் தேங்கியது.

    இந்த பாலத்தின் வழியாக தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. தண்ணீர் தேங்கியதால் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நகராட்சி ஊழியர்கள் 20 பேர் தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது. காவேரிப்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 32.2 மி.மீ. மழை பெய்தது. அரக்கோணத்தில் 21.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    அரக்கோணம் அருகே தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகள் சேதடைந்துள்ளன. அரக்கோணம் அருகே உள்ள அன்வர்தின்காபேட்டையில் 2 வீடுகள், வளர்புரம் கிராமத்தில் 2 வீடுகள், மூதுர், மின்னல், அரக்கோணம் அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் தலா ஒரு வீடுகள் என மொத்தம் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 

    விடுதலை செய்யக்கோரி வேலூர் ஜெயிலில் நளினியும், முருகனும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பல ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று நளினி பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    அதில் தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி நளினி கடந்த 28-ந்தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று 6-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    கருணைக் கொலை செய்யக் கோரி முருகனும் ஜெயிலில் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

    நளினியின் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    வேலூரில் 25 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஓட்டலின் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் ஆரணி ரோட்டில் ஆர்.ஆர். அசைவ உணவகம் என்ற பெயரில் ஒரு சிறிய ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர் அதே பகுதியில் சற்று தள்ளி புதிய உணவகத்தை தொடங்கினார்.

    அந்த புதிய உணவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. சமீப காலமாக புதிதாக உணவகத்தை திறப்பவர்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும் உணவகத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் வித்தியாசமான சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

    அதே பாணியில் இந்த உணவகத்தின் உரிமையாளரும் திறப்பு விழா சலுகையாக பழைய நாணயம் ரூ.25 பைசாவை கொடுத்து அரைபிளேட் பிரியாணி வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

    இதனால் ஓட்டலின் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ரூ.25 பைசாவை கொடுத்து அடித்து பிடித்து பிரியாணி வாங்கி சென்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

    11 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இந்த சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படும் என்று உணவக உரிமையாளர் அறிவித்திருந்தார்.

    அறிவித்த நேரத்திற்கு முன்பே கூட்டம் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்தினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே முதல் 200 பேருக்கு மட்டும் பிரியாணி கொடுத்து விட்டு உரிமையாளர் உணவகத்தை மூடினார்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாணியம்பாடி டவுன் ஜண்டாமேடு பகுதியில் புதிய துணிக்கடை திறப்பு விழா நடந்தது. இதையொட்டி பழைய 5, 10 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள சேலை வழங்கப்படும் என அறிவித்தனர்.

    பழைய 5 மற்றும் 10 பைசா நாணயங்களுடன் ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர். அதில் முதலில் வந்த 100 பேருக்கு மட்டும் ரூ.250 மதிப்புள்ள சேலை வழங்கினர்.

    இந்த சம்பவத்தால் துணிக்கடை முன்பு பரபரப்பாக காணப்பட்டது.
    விடுதலை செய்யக்கோரி வேலூர் ஜெயிலில் நளினியும், முருகனும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பல ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று நளினி பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    அதில் தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார்.

    அதேபோன்று தங்களை கருணைக் கொலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகம் மூலம் சுப்ரீம் கோர்ட்டிலும் நளினி மனுதாக்கல் செய்துள்ளார். அதே கோரிக்கையை வலியுறுத்தி நளினி கடந்த 28-ந்தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று 5-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    கருணைக் கொலை செய்யக்கோரி முருகனும் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர். நளினியின் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் 50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள சவுத் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சஞ்சிவ் மானஷா(வயது48). வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை வீடு திரும்பிய டாக்டர் சஞ்சிவ் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை நடந்த இடம் சத்துவாச்சாரியில் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதி. இங்கு கொள்ளை நடந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். டாக்டர் வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். அப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×