என் மலர்tooltip icon

    வேலூர்

    கலவை பஸ் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை நைனார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது58). இவரது மனைவி குட்டி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். சந்துரு கலவை பஸ் நிலையத்தில் போண்டா, பஜ்ஜி கடை வைத்து இருந்தார்.

    நேற்றிரவு சந்துரு இயற்கை உபாதைக்காக கலவை போலீஸ் நிலைய சுற்று சுவர் அருகே சென்றார். பின்னர் அங்குள்ள ஹைமாஸ் விளக்கில் இருந்து சந்துரு மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சந்துரு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சந்துரு மனைவி குட்டி கலவை போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து சந்துரு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தை குறித்து அடையாளம் தெரிந்தது. அக்குழந்தையை தாயே வீசிசென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் ஓம் சக்தி கோவில் அருகே நகராட்சி குப்பைத் தொட்டியில் 11 மாத பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்தது. குழந்தை அழுகுரல் கேட்டு அப்பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண் குப்பை தொட்டியில் பார்த்தபோது குழந்தை கிடந்தது.

    உடனடியாக அவர் குழந்தையை தூக்கினார். எறும்பு மற்றும் கொசுக்கடியால் குழந்தை உடல் முழுவதும் காயம் இருந்தது.

    ஜோலார்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் குழந்தை திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றது யார் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தை ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஆனந்தன், பிரியா தம்பதியின் மகள் பிருத்திகா (11 மாதம்) என்பது தெரியவந்தது.

    பிரியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் மாயமானார். இது பற்றி பிரியாவின் தந்தை முருகன் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பிரியா மற்றும் குழந்தையின் போட்டோவை போலீசில் கொடுத்துள்ளனர்.

    இந்த போட்டோ மூலம் குழந்தை பிருத்திகா அடையாளம் தெரிந்துள்ளது. பிரியா அவரது குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை அருகே சென்னை வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பொன்னேரி மலையடிவாரத்தில் உள்ள வாணி ஏரி அருகே கிணற்றில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னை சைதாபேட்டையை சேர்ந்த வேணுகோபால், அவரது மனைவி நேற்றிரவு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட வாலிபர் தங்களுடைய மகனாக இருக்கலாம் என தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

    எங்களுடைய மகன் சரவணன் (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் விஜய் (23) ஆகியோர் ஜோலார்பேட்டை பகுதியில் கோழி கூண்டு செய்து தரும் பணியை டெண்டர் எடுத்து செய்து வந்தனர். கடந்த 2 வாரங்களாக பொன்னேரி மலையடிவாரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர்.

    தினமும் சரவணன் எங்களிடம் செல்போனில் பேசி வந்தார். கடந்த புதன் கிழமை முதல் தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ஜோலார்பேட்டையில் கிணற்றில் வாலிபர் பிணம் கிடப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள் பரவியது. அந்த படம் எங்களுடைய மகன் உருவத்தை ஒத்திருந்தது.

    விஜயிடம் சரவணன் எங்கே இருக்கிறார் என்று கேட்டோம். அவர் நான் சென்னைக்கு வந்து விட்டேன். எனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்பலாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகமடைந்த நாங்கள் விஜயை பிடித்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றனர்.

    திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த பிணத்தை பார்த்த அவர்கள் சரவணன் உடல் தான் என உறுதிப்படுத்தினர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் விஜயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த புதன்கிழமை சரவணன், விஜய் இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விஜய் சென்னை சென்றுவிட்டார்.

    இதனால் விஜய்தான் சரவணனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    வாணியம்பாடி நெக்னாமலையில் 60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் தொழிலாளியின் பிணத்தை மலைக்கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் சுமார் 1,200 அடி உயரம் கொண்டது. இந்த மலை மீது 150 குடும்பங்கள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த மலை கிராமத்திறகு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லை. அதேபோல் மருத்துவ வசதி, மின்சார வசதி என்று எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் கண்டிராத நிலையில் உள்ளனர்.

    இங்கு 5-ம் வகுப்பு வரை மட்டும் ஒரு பள்ளி உள்ளது. அதிலும் 3 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் வருவதாக கூறுகின்றனர்.

    இதனால் அங்குள்ள வாலிபர்களும் சென்னை, பெங்களூரு என்று வேலை தேடி சென்று விடுகிறார்கள். இப்படி வஞ்சிக்கப்பட்டு வரும் மலைக்கிராம மக்கள் தினமும் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் நெக்னாமலையை சேர்ந்த சேட்டு என்பவரது மகன் முனுசாமி என்கிற ரஜினி (வயது 27). என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் குழந்தைகளுடன் கோவையில் தங்கி சென்டரிங் தொழில் செய்து வந்தார்.

    நேற்று கோவையில் கட்டிடத்திற்கான சென்டரிங் பிரிக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கி ரஜினி இறந்தார்.

    அவரது உடலை சொந்த ஊரான நெக்னாமலைக்கு நேற்று அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். அப்போது மலைக் கிராமமான நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லாததால் ரஜினியின் உடலை டோலி கட்டி மலை மீது தூக்கி சென்றனர்.

    கணவர் இறந்த சோகத்தில் மனைவி அனிதா மலை மீது நடக்க முடியாத நிலையில் மயங்கி விழுந்தார்.அவரையும் மற்றொரு டோலி கட்டி மலைக்கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

    திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் நெக்னாமலை கிராமத்திற்கு சாலை, மின்சார வசதி, மருத்துவ வசதி என்று செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலூர் மார்க்கெட்டில் வெங்காயம் விலை அதிரடியாக குறைந்து கிலோ ரூ.50க்கு விற்பனையானது.

    வேலூர்:

    வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 டன் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் விற்பனைக்கு வந்தது.

    சில வாரங்களாக 20 டன் அளவில்தான் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக 1 கிலோ ரூ.200 வரை விற்பனையாகி அனைத்து தரப்பு மக்களையும் சிரமத்துக்குள்ளாக்கியது.

    இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட் லாங்கு பஜாரில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் தலைமையில் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

    வெங்காயம் வரத்து மற்றும் விலை நிர்ணயம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து வேலூர் மார்க்கெட்டில் வெங்காயம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    நேற்று காலை வெங்காய மூட்டை மேலும் ரூ.1500 முதல் ரூ.2500 வரை குறைந்தது. முதல் தரம் மூட்டை ரூ.6 ஆயிரத்துக்கும், நடுத்தரம் ரூ.5 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இதனால் 1 கிலோ வெங்காயம் தரம் அடிப்படையில் ரூ.100, ரூ.120, ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இன்று மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 50 கிலோ மூட்டை ரூ.3,600 வரை விற்பனையானது. இந்த விலை குறைவால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

    சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.80க்கு விற்பனையானது. ஒரே நாளில் அதிரடியாக விலை குறைந்ததால் பொதுமக்கள் அதிகளவில் வெங்காயம் வாங்கி சென்றனர். இன்று விற்பனை களைகட்டியது.

    இன்று மார்க்கெட்டில் கத்தரிக்காய் (கிலோ) ரூ.30, தக்காளி ரூ.20, பீன்ஸ் ரூ.50, அவரைக்காய் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.25, கேரட் ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது.

    முருங்கைக்காய் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்று கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது.

    வாணியம்பாடி அருகே இன்று காலை ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    வாணியம்பாடி:

    ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). இன்று காலை வாணியம்பாடி செல்லும் அரசு பஸ்சில் சென்றார். அதே பஸ்சில் ஆம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பயணம் செய்தார்.

    வாணியம்பாடி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெகன் மறைத்துவைத்திருந்த தாலியை எடுத்து இளம்பெண் கழுத்தில் கட்டமுயன்றார்.

    இதனால் திடுக்கிட்ட இளம்பெண் கூச்சலிட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் வாலிபரை மடக்கி பிடித்து இளம்பெண்ணை மீட்டனர். மேலும் ஜெகனை அடித்து உதைத்தனர்.

    பஸ் வாணியம்பாடி வந்ததும் அங்கிருந்த போலீசாரிடம் ஜெகனை பயணிகள் ஒப்படைத்தனர். போலீசார் ஜெகனை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அவர் தாலிகட்ட முயன்ற இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜெகன் இளம்பெண்னை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை குப்பை தொட்டியில் வீசப்பட்ட 7 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் ஓம் சக்தி கோவில் அருகே நகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது.

    இன்று அதிகாலை 5 மணியளவில் குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை அழுத சத்தம் கேட்டது. அப்பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் குப்பைத் தொட்டியில் சென்று பார்த்தார். அங்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்தது.

    உடனடியாக குழந்தையை அவர் தூக்கினார். எறும்பு மற்றும் கொசுக்கடியால் குழந்தை உடல் முழுவதும் காயம் இருந்தது.

    குழந்தையை அவர் ஜோலார்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

    பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் அண்ணா சாலையில் இன்று காலை திருவண்ணாமலை பஸ்சில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
    வேலூர்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது.

    அண்ணாசாலையில் திருப்பதி தேவஸ்தானம் அருகே வந்தபோது திடீரென பஸ் என்ஜீனில் தீ பற்றி புகை மண்டலம் ஏற்பட்டது. இதனால் திடுக்கிட்ட டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வேகமாக இறங்கினர். புகை அதிகமாக வந்ததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அண்ணாசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.
    வேலூர்:

    நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெங்காயம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

    வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 டன் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் விற்பனைக்கு வந்தது.

    சில வாரங்களாக 20 டன் அளவில்தான் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக 1 கிலோ ரூ.200 வரை விற்பனையாகி அனைத்து தரப்பு மக்களையும் சிரமத்துக்குள்ளாக்கியது. பெரும்பாலான ஓட்டல்களில் வெங்காயம் சேர்க்காமல் மாற்று உணவுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.

    வெங்காயம் வரத்து மற்றும் விலை நிர்ணயம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து வேலூர் மார்க்கெட்டில் வெங்காயம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    நேற்று முன்தினம் 50 கிலோ மூட்டை ரூ.8500க்கு விற்பனையானது. நேற்று ரூ.1000 குறைந்து ரூ.7500க்கு விற்பனையானது. இதனால் நேற்று கிலோ ரூ.160க்கு விற்பனை செய்தனர்.

    இன்று காலை வெங்காய மூட்டை மேலும் ரூ.1500 முதல் ரூ.2500 வரை குறைந்தது. முதல் தரம் மூட்டை ரூ.6 ஆயிரத்துக்கும், நடுத்தரம் ரூ.5 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இதனால் 1 கிலோ வெங்காயம் தரம் அடிப்படையில் ரூ.100, ரூ.120, ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கூறுகையில்:-

    கடந்த சில வாரங்களாக முன்பு வந்ததை விட 4ல் ஒரு பங்குதான் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவே இந்த திடீர் விலை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளது.

    மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 2020ம் ஆண்டு பொங்கலுக்கு பிறகு புதுசரக்கு வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கவில்லை. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். வெங்காயம் பதுக்கி வைத்தால் எடை குறையும். மேலும் அழுகிவிடும். இதனால் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்.

    தற்போது வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விலை குறைந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகாதீபத்தையொட்டி வேலூரில் இருந்து 81 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு சென்றனர்.
    வேலூர்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    மகாதீபத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாதீபத்தை காணவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கூட்டநெரிசலை சமாளிக்கவும், மலையை சுற்றி வரும் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி செயின்பறிப்பு மற்றும் வழிப்பறி போன்ற குற்றசம்பவங்களை தடுக்கவும் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    அதேபோன்று மகாதீபத்தின்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீவிபத்து, கூட்டநெரிசல் உள்ளிட்ட சம்பவங்களில் பக்தர்களை பாதுகாக்கவும், மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட உள்ளனர். அதன்படி வேலூரில் இருந்து மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில் 25 சிறப்பு மீட்பு கமாண்டோ வீரர்கள் உள்பட 81 தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள், ஒரு அவசரக்கால மீட்புஊர்தி ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் திருவண்ணா மலைக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.

    வடமேற்கு மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சத்தியநாராயணன் தலைமையில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 321 தீயணைப்பு வீரர்கள், 11 தீயணைப்பு வாகனங்கள், ஒரு தண்ணீர் லாரி, 2 அவசரக்கால மீட்புஊர்திகளுடன் திருவண்ணாமலையில் வருகிற 11-ந் தேதி வரை பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தீயணைப்புத்துறை உயர்அதிகாரி தெரிவித்தார்.

    இதேபோன்று திருவண்ணாமலையில் மகாதீபத்தையொட்டி குற்றசம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து 1,500 போலீசார் பல்வேறு கட்டங்களாக திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். இவர்களும் வருகிற 11-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    வேலூர் பெண்கள் சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி இன்று வாபஸ் பெற்றார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஜெயிலிலும், அவருடைய மனைவி பெண்கள் ஜெயிலிலும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    முருகனின் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதாக அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். ஜெயில் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் முருகன் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

     முருகன்

    அதைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் தங்களை கர்நாடகா அல்லது வேறு மாநிலத்தில் உள்ள ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று நளினி கோரிக்கை விடுத்தார்.

    மேலும் தங்களுக்கு விடுதலை கிடைக்காததால் கருணைக்கொலை செய்யக்கோரியும் கடந்த மாதம் 28-ந்தேதி நளினி மனு கொடுத்தார்.

    அன்று முதல் தொடர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் 10-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். முருகன் 8-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

    தொடர் உண்ணாவிரதம் காரணமாக இருவரின் உடல் நிலையும் மோசமானது. இதனால் அவர்களுடைய உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றினர். அதைத் தொடர்ந்து 3-வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

    மேலும் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் 64 கிலோ எடை இருந்த முருகனின் உடல் எடை தற்போது 20 கிலோ குறைந்து 44 கிலோ இருப்பதாக அவருடைய வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

    இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி  இன்று வாபஸ் பெற்றார்.

    ஆண்கள் சிறையில் இருந்த முருகன் கேட்டுக்கொண்டதை அடுத்து, நளினி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

    வேலூரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் இருந்த 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாநகரில் உள்ள கடைகள், குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

    இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் உணவுப் பொருள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், இளங்கோவன், சுரேஷ் பழனிசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூர் கே.எம்.செட்டிதருவில் உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், தட்டுகள், ஸ்பூன்கள், தெர்மாக்கோல் தட்டுகள் உள்பட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் அந்த குடோனுக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த மற்றொரு கடையில் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×