search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை.
    X
    குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை.

    ஜோலார்பேட்டையில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தை அடையாளம் தெரிந்தது

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தை குறித்து அடையாளம் தெரிந்தது. அக்குழந்தையை தாயே வீசிசென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் ஓம் சக்தி கோவில் அருகே நகராட்சி குப்பைத் தொட்டியில் 11 மாத பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்தது. குழந்தை அழுகுரல் கேட்டு அப்பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண் குப்பை தொட்டியில் பார்த்தபோது குழந்தை கிடந்தது.

    உடனடியாக அவர் குழந்தையை தூக்கினார். எறும்பு மற்றும் கொசுக்கடியால் குழந்தை உடல் முழுவதும் காயம் இருந்தது.

    ஜோலார்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் குழந்தை திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றது யார் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தை ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஆனந்தன், பிரியா தம்பதியின் மகள் பிருத்திகா (11 மாதம்) என்பது தெரியவந்தது.

    பிரியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் மாயமானார். இது பற்றி பிரியாவின் தந்தை முருகன் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பிரியா மற்றும் குழந்தையின் போட்டோவை போலீசில் கொடுத்துள்ளனர்.

    இந்த போட்டோ மூலம் குழந்தை பிருத்திகா அடையாளம் தெரிந்துள்ளது. பிரியா அவரது குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×