என் மலர்
வேலூர்
வேலூர் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த மைதீன் (43), ஹரிகரன் (24) போலி சி.பி.ஐ. அதிகாரிகளாக வலம் வந்தனர்.
காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த கிருபாகரன். மோட்டார் சைக்கிளில் அங்குள்ள மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் உடையில் டிப்-டாப்பாக வந்த மைதீன், ஹரிகரன் அவரை மடக்கினர். தாங்கள் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் என கூறி அடையாள அட்டையை காண்பித்தனர். இதனால் சந்தேகமடைந்த கிருபாகரன் விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மைதீன், ஹரிகரன் பிடிபட்டனர்.
அவர்கள் இருந்த வீட்டில் போலீஸ் யூனிபார்ம், போலி அடையாள அட்டைகளை கைப்பற்றினர். மேலும் வீட்டில் இருந்து ரூ.4.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மோசடி செய்த பணமா என விசாரணை நடத்தினர். இந்த பணத்துக்கு அவர்கள் கணக்கு காட்டியுள்ளனர். இதையடுத்து பணம் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களது சீருடையில் துப்பாக்கி வைக்கக்கூடிய பவுச் இருந்தது. இதனால் அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீடு முழுவதும் தேடினர். எதுவும் சிக்கவில்லை.
மேலும் விசாரணையில் மைதீன் சமையல் தொழில் செய்து வந்ததும், ஹரிகரன் அவருக்கு உதவியாளராக இருந்து வந்ததும் தெரியவந்தது. பணம் பறிக்கும் ஆசையில் போலீஸ் சீருடை வாங்கி போலி அடையாள அட்டை தயாரித்து ஏமாற்றியுள்ளனர்.
இவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போலீஸ் சீருடையில் இருந்த போட்டோவுடன் பேஸ்புக் முகவரி வைத்துள்ளனர். இதன்மூலம் பலரை ஏமாற்றியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைதீன், ஹரிகரன் இருவரும் பைக்கில் வந்துள்ளனர். அவர்களிடம் ஆவணங்களை கேட்டபோது தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டையை காட்டி சென்றுள்ளனர்.
அவர்கள் பிடிபட்ட பிறகு தான் போலீசாரையே ஏமாற்றி சென்றது தெரியவந்துள்ளது.

2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கு மேலாக போலி சி.பி.ஐ. ஆக வலம் வந்தது தெரியவந்தது. அவர்களிடம் ஏமாந்தவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிழக்கத்தி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 28). இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (33), இளையகுமார் (30), பழனி, மற்றொரு பழனி, சென்றாயன், கிருஷ்ணமூர்த்தி, சஞ்சய் ஆகிய 7 பேரை ஆந்திர பகுதிக்கு காட்டில் செம்மரம் வெட்ட அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அதற்கான கூலியை 7 பேருக்கும் தராமல் சீனிவாசன் இழுத்தடித்து வந்தார். இதனால் கடந்த 3-ந்தேதி கூலி கேட்டு சீனிவாசன் வீட்டுக்கு 7 பேரும் மற்றும் உடன் சிலரும் சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் சீனிவாசனை அவர்கள் காரில் ஏற்றி கடத்த முயன்றனர்.
வீட்டிலிருந்த சீனிவாசனின் மனைவி சாந்திபிரியா (25), தாய் மல்லிகா (45) சீனிவாசனை கடத்த முயன்றதை தடுத்தனர். அப்போது அவர்களும் தாக்கப்பட்டனர்.
இதில் மயங்கி விழுந்த சாந்திபிரியா, மல்லிகா ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சாந்தி பிரியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இளையராஜா, பழனி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் உள்பட 6 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று வேலூர் ஜே.எம்.3 கோர்ட்டில் வெங்கடேசன் என்பவர் இவ்வழக்கில் சரணடைந்தார். அதே வேளையில் ஆலங்காயம் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முனிவேல் (50) என்பவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்பு முனிவேலை கைது செய்தனர். இவர் தி.மு.க. வில் வேலூர் மேற்கு மாவட்ட அவை தலைவராக உள்ளார். பெண் கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர ஆலாசனை கூட்டம் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.
அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சட்ட விதிகளை சரியாக பின்பற்றாமல் 9 மாவட்டங்கள் நீங்கலாக மீதமுள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி அதன் வாயிலாக உள்ளாட்சி நிதியை கபளீகரம் செய்ய துணிந்த அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேலூர் மாவட்டம் உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தலை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி உடனே தேர்தல் நடத்த வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.5 புள்ளிகளுக்கு கீழே சரிந்து இந்திய பொருளாதாரம் தள்ளாடும் நிலைக்கு காரணமாக மத்திய அரசுக்கும், துணைபோகும் அ.தி.மு.க. அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் வேலூர் மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அனைத்து கட்சி அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வியாபாரிகள் சார்பில் கத்தியவாடி சாலை அருகே இருந்து பேரணியாக சென்று தொலைதொடர்பு அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், முத்தவல்லிகள், ஜமாத் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியையொட்டி மேல்விஷாரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆம்பூர் பஸ் நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் வகுப்புக்கு சென்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 11 வயது மகள் அருகே அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். குளிதிகையை சேர்ந்த வினோத் (வயது 30), தொழிலாளி. இவர், நேற்று மாலையில் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்றார்.
மாணவியிடம் உனது தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அதனால் உன்னை அழைத்து வர சொன்னார்கள் என கூறி மாணவியை அழைத்து சென்றார். அப்பகுதியில் உள்ள கானாற்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.
மாணவியை அழைத்து சென்றது குறித்தும், மாணவியின் தந்தைக்கு விபத்து ஏற்பட்டது குறித்தும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விபத்து சம்பவம் எதுவும் நடைபெறாமல் தனது மகளை அழைத்து சென்றது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை தேடி விரைந்து சென்றனர்.
இந்த நிலையில் கானாற்று பகுதியில் மாணவி, வினோத்திடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டுள்ளார். மாணவியின்அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வினோத்திடம் இருந்து மாணவியை மீட்டனர்.
பின்னர் வினோத்தை சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாலாஜா அடுத்த வன்னியவேடு பகுதியை சேர்ந்தவர் அமிர்தம் (60). இவர் கடந்த 9-ந் தேதி வன்னியவேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு அய்யப்ப பூஜையில் கலந்து கொள்ள நடந்து சென்றார்.
வாலாஜா அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அங்கு இருந்த கார் ஒன்று பின்னோக்கி வந்து அமிர்தம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கார்த்திகேயன் (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை மூவேந்தர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது சென்னையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். வெளியே சென்றிருந்த ராணுவ வீரர் மனைவி திரும்பி வந்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.






