search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர்
    X
    கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர்

    செம்மர கூலி தகராறில் கணவன் கடத்தப்பட்டதை தடுத்த பெண் கொலையில் தி.மு.க. பிரமுகர் கைது

    செம்மர கூலி தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிழக்கத்தி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 28). இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (33), இளையகுமார் (30), பழனி, மற்றொரு பழனி, சென்றாயன், கிருஷ்ணமூர்த்தி, சஞ்சய் ஆகிய 7 பேரை ஆந்திர பகுதிக்கு காட்டில் செம்மரம் வெட்ட அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    அதற்கான கூலியை 7 பேருக்கும் தராமல் சீனிவாசன் இழுத்தடித்து வந்தார். இதனால் கடந்த 3-ந்தேதி கூலி கேட்டு சீனிவாசன் வீட்டுக்கு 7 பேரும் மற்றும் உடன் சிலரும் சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் சீனிவாசனை அவர்கள் காரில் ஏற்றி கடத்த முயன்றனர்.

    வீட்டிலிருந்த சீனிவாசனின் மனைவி சாந்திபிரியா (25), தாய் மல்லிகா (45) சீனிவாசனை கடத்த முயன்றதை தடுத்தனர். அப்போது அவர்களும் தாக்கப்பட்டனர்.

    இதில் மயங்கி விழுந்த சாந்திபிரியா, மல்லிகா ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சாந்தி பிரியா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இளையராஜா, பழனி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் உள்பட 6 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று வேலூர் ஜே.எம்.3 கோர்ட்டில் வெங்கடேசன் என்பவர் இவ்வழக்கில் சரணடைந்தார். அதே வேளையில் ஆலங்காயம் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முனிவேல் (50) என்பவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்பு முனிவேலை கைது செய்தனர். இவர் தி.மு.க. வில் வேலூர் மேற்கு மாவட்ட அவை தலைவராக உள்ளார். பெண் கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×