search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வேனில் தீயணைப்பு வீரர்கள் புறப்பட்டு சென்றபோது எடுத்தபடம்.
    X
    வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வேனில் தீயணைப்பு வீரர்கள் புறப்பட்டு சென்றபோது எடுத்தபடம்.

    மகாதீபத்தையொட்டி வேலூரில் இருந்து 81 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு பயணம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகாதீபத்தையொட்டி வேலூரில் இருந்து 81 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு சென்றனர்.
    வேலூர்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

    மகாதீபத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாதீபத்தை காணவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கூட்டநெரிசலை சமாளிக்கவும், மலையை சுற்றி வரும் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி செயின்பறிப்பு மற்றும் வழிப்பறி போன்ற குற்றசம்பவங்களை தடுக்கவும் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    அதேபோன்று மகாதீபத்தின்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீவிபத்து, கூட்டநெரிசல் உள்ளிட்ட சம்பவங்களில் பக்தர்களை பாதுகாக்கவும், மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட உள்ளனர். அதன்படி வேலூரில் இருந்து மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில் 25 சிறப்பு மீட்பு கமாண்டோ வீரர்கள் உள்பட 81 தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள், ஒரு அவசரக்கால மீட்புஊர்தி ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் திருவண்ணா மலைக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.

    வடமேற்கு மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சத்தியநாராயணன் தலைமையில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 321 தீயணைப்பு வீரர்கள், 11 தீயணைப்பு வாகனங்கள், ஒரு தண்ணீர் லாரி, 2 அவசரக்கால மீட்புஊர்திகளுடன் திருவண்ணாமலையில் வருகிற 11-ந் தேதி வரை பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தீயணைப்புத்துறை உயர்அதிகாரி தெரிவித்தார்.

    இதேபோன்று திருவண்ணாமலையில் மகாதீபத்தையொட்டி குற்றசம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து 1,500 போலீசார் பல்வேறு கட்டங்களாக திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். இவர்களும் வருகிற 11-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    Next Story
    ×