search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    பொங்கல் பரிசுத் தொகுப்பு கூடுதலாக 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ. 1,000 இந்த ஆண்டு 10 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    ஆற்காடு:

    வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா ஆற்காட்டில் நடந்தது.

    அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டு, விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    கூட்டுறவுத் துறை பல்வேறு சிறப்புகளை மக்களுக்கு செய்து வருகிறது.

    இந்தியாவிலேயே 27 விருதுகளை தமிழக கூட்டுறவுத் துறை பெற்றுள்ளது. மத்தியத் தொகுப்பில் அரிசியை விலைக்கு வாங்கி, தமிழக மக்களுக்கு விலையில்லா அரிசி 20 கிலோ முதல் 40 கிலோ வரை ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

    கோப்புப்படம்


    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ. 1,000 இந்த ஆண்டு 10 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

    அதிக பயிர் கடன் வழங்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 88 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ. 46ஆயிரத்து 773 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால், அந்த கடனுக்குரிய வட்டியை அரசே செலுத்துகிறது.

    வேலூர் மண்டலத்தில் இதுவரை 6 லட்சத்து 9 ஆயிரத்து 244 விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்று இருந்தன.

    தற்போது புதுமையான திட்டங்களை தந்து, நவீனமயமாக்கி தனியார் வங்கிகளுடன் போட்டியிடும் நிலை உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ரூ. 54 ஆயிரம் கோடி வைப்புத் தொகை உள்ளது.

    தற்போது சிறுவணிகக் கடன் ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனை மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தலாம்.

    மேலும் வீட்டு அடமானக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றை அதிகப்படுத்தி உள்ளோம். இன்று 23 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் வருமான வரி கட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளன.

    தற்போது 75 ஆயிரத்து 866 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. அரசு எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் 8 மட்டுமே இருந்த நிலையில், தற்போது 36ஆவது விற்பனை நிலையம் ஆற்காட்டில் திறக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 12 நிலையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×