search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
    X
    பேரறிவாளன் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

    பேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதி - வீட்டில் போலீஸ் பாதுகாப்பு

    பேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவும், அவரது தந்தையின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
    ஜோலார்பேட்டை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    உடல் நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியாக புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மாத பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது குயில்தாசனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று காலை புழல் ஜெயிலில் இருந்த பேரறிவாளனை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் ஆயுதப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

    பேரறிவாளன் தங்கியுள்ள வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. தங்கவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 35 போலீசார் 24 மணி நேரமும் அவரது வீட்டின் முன்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுவாக பரோலில் வரும் கைதிகள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது.

    பேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதியை சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நவம்பர் 23, 24-ந் தேதிகளில் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அவரது தந்தை குயில்தாசனின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது.

    ரத்த சம்பந்த உறவினர்கள் மட்டுமே அவரை சந்திக்கலாம். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஒரு மாத பரோல் டிசம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது.



    Next Story
    ×