என் மலர்
திருப்பூர்
- கொலை நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- 3 பேரையும் கம்பி அல்லது கட்டையால் தாக்கியிருக்காலம் என தகவல் வெளியாகி உள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வ சிகாமணி(வயது 76). விவசாயி. இவரது மனைவி அலமேலு(70).இவர்களது மகன் செந்தில்குமார்(48).
இன்று காலை தெய்வசிகாமணி வீட்டின் வெளியேயும், செந்தில்குமார், அலமேலு வீட்டிற்குள்ளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்த சவரத்தொழிலாளி ஒருவர் உடனே இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தது. மேலும் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதனால் நள்ளிரவு அங்கு வந்த கொள்ளையர்கள் 3 பேரையும் அரிவாளால் வெட்டிக்கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய்,கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் வரை மோப்பம்பிடித்தப்படி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலை சம்பவம் நடந்த பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி உள்ளனரா? என்று தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளையர்கள் தப்பித்து செல்லாமல் இருக்க திருப்பூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தி போலீசார் அனுப்பி வைக்கின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்று நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் மீது சந்தேகம்
கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணிக்கு சேமலை கவுண்டம்பாளையத்தில் 15 ஏக்கரில் நிலம் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் உள்ளது. எனவே தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.
இந்தநிலையில் நிலம் மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாமா என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தெய்வசிகாமணி தென்னந்தோப்பில் தொழிலாளர்கள் சிலர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தாசில்தார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை.
- கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி க்குட்பட்ட 55-வது வார்டு பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 192 குடும்பங்கள் 38 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு , வீடு இல்லாமல் வாழ்விடத்திற்காக குடி பெயர்ந்தவர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 38 ஆண்டு காலமாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நல சங்கம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற பட்டுக்கோட்டையார் நகர் பகுதி பொதுமக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தாசில்தார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது.
- அதானி சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
அதானி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமதாசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. அவதூறாக பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
- துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு அருள்ஜோதி நகர் பகுதியில் சாலை போடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளதால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் அப்பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் மாத கணக்கில் அள்ளப்படாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்டபோது அவர் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கவுன்சிலரை கண்டிக்கும் விதமாகவும், உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்றக்கோரியும் கார்மேகம் என்பவர் அப்பகுதியில் தேங்கி இருந்த சாக்கடை கால்வாயில் இறங்கி சாக்கடை கழிவுகளை கைகளால் வாரி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- விவசாயிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கிபாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று 3-வது நாளாக தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இன்று விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், உண்ணாவிரத பந்தலில் கருப்புக் கொடி ஏற்றியும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது " சாலையோரமாக எண்ணெய் குழாய்களை கொண்டு செல்லும்படி போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எண்ணெய் குழாய் அமைப்பதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் எண்ணெய் குழாய்களை சாலையோரமாக பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
- கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
பல்லடம்:
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
இந்தநிலையில் எரிவாயு குழாய் திட்டத்தை விளை நிலங்களில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களுடன் மீண்டும் புதிதாக எரிவாயு குழாய்களை ஐ.டி.பி.எல். நிறுவனம் அமைத்து வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாது என்றும், இந்த திட்டத்தைச் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையம் கிராமத்தில் நேற்று விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோரும், கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
- பனியன் உற்பத்தியாளர்களும் ஆர்டருக்கு ஏற்றவாறு ஆடைகளை அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.
திருப்பூர்:
சேலம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 48). இவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இணையதளம் மூலம் ஜவுளி ஆர்டர் தேவைப்படுவதாக திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டார்.
இதைத்தொடர்ந்து திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் விசாரித்தபோது, சாம்பிள் ஆடைகளை பார்த்து தேர்வு செய்து பாலமுருகன் ஆர்டர் கொடுத்துள்ளார்.
திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்களும் ஆர்டருக்கு ஏற்றவாறு ஆடைகளை அனுப்பி வைத்தனர். சிலருக்கு ஆர்டர் கொடுத்த தொகையில் பாதியளவு பணம் கொடுத்து வர்த்தகம் செய்ததாக தெரிகிறது.
இவ்வாறு திருப்பூரில் உள்ள பல பனியன் உற்பத்தியாளர்களிடம் கோடிக்கணக்கில் ஆடைகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் பாலமுருகன் திருப்பூர் வந்தபோது, அவரால் பாதிக்கப்பட்ட பனியன் உற்பத்தியாளர்கள் அவரை பிடித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆடை வாங்கிக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. முதல்கட்டமாக 5 உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். பாலமுருகனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வருகிறார்கள்.
- விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் திருப்பூர் நோக்கி வருவதற்காக தயாராகினர்.
- வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கடந்த 2 மாதத்தில் 200 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதனைத்தொடர்ந்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்க அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து காங்கேயம் பகவதிபாளையம் அருகே ஏராளமான விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் திருப்பூர் நோக்கி வருவதற்காக தயாராகினர். அவர்களை மாநகர எல்லையிலேயே தடுத்து நிறுத்துவதற்காக திருப்பூர் மாநகர எல்லை பகுதிகளான பொல்லிகாலிபாளையம், காசிபாளையம், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
- விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர்.
பல்லடம்:
மத்திய அரசின் கெயில் நிறுவனம் கடந்த 2011ல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக எரிகாற்று குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இதையடுத்து பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிகாற்று குழாய் பதிக்கப்பட்டது. இது குறித்து தாமதமாக விழிப்புணர்வு பெற்ற விவசாயிகள் எரிகாற்று குழாய் திட்டத்தை விளை நிலங்களில் அமைக்க கூடாது என கூறி தொடர்ந்து கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கெயில் திட்டத்தை சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார். தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களுடன் மீண்டும் புதிதாக எரிகாற்றுக்குழாய்களை கெயில் நிறுவனம் அமைத்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும் விவசாய நிலங்களில் எக்காரணம் கொண்டும் எரிகாற்று குழாய்களை அமைக்க கூடாது. கெயில் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் இ.மெயில் மூலம் பள்ளி அலுவலக இ.மெயிலுக்கு குறுந்தகவல் வந்தது.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யாரென்று தெரியவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வார இறுதி விடுமுறை நாட்கள் முடிந்து வழக்கம் போல் இன்று காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் இ.மெயில் மூலம் பள்ளி அலுவலக இ.மெயிலுக்கு குறுந்தகவல் வந்தது.
அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் நல்லூர் உதவி கமிஷனர் விஜய லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக பள்ளி மைதானத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தனர்.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பள்ளி வகுப்பறைகள், அலுவலகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை மெட்டல் டிடெக்டர், மோப்பர் நாய் மூலம் சோதனை மேற்கொண்டனர். பள்ளி வாகனங்களை வெளியே நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இருப்பினும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யாரென்று தெரியவில்லை. இ.மெயில் முகவரியை வைத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர். அண்மைக்காலமாக தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது வழக்கமாகியுள்ளது. எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடைக்கான உரிமம் முடிவடைந்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
- போலீசார் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அமர்ஜோதி லே அவுட் வெங்கடாசலபுரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இருப்பினும் அந்த கடை அகற்றப்படவில்லை.
அங்கு மது அருந்துபவர்கள் வீட்டின் முன்பு சிறுநீர் கழிப்பது, பாட்டில்களை உடைப்பது என அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே நட முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், கடைக்கான உரிமம் முடிவடைந்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து நேற்றிரவு திடீரென கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் சிறிது நேரம் மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மத்திய போலீசார் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- புளிய மரத்தில் இளைஞர் ஒருவர் பிணமாக தொங்குவதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்-குமரலிங்கம் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் இளைஞர் ஒருவர் பிணமாக தொங்குவதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் சாளரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த மார்ச் மாதம் ராஜவாய்க்கால் கரையில் சாமிதுரை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
எனவே விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






