திருப்பூர் சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை பிடிக்க போலீசார் தீவிரம்

கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர். சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.
திருப்பூர் சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை  பிடிக்க போலீசார் தீவிரம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் மாவட்ட கிளை சிறை உள்ளது. நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த சூர்யா (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர். நேற்று மாவட்ட சிறையில் கைதிகளின் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். இதில் விசாரணை கைதியாக இருந்த சூர்யாவை காணவில்லை. இதையடுத்து போலீசார் சிறை வளாகம் முழுவதும் தேடினார்கள். அப்போது அவர் சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது.

இதுகுறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சூர்யா பச்சை நிற முழுக்கை டி-சர்ட் மற்றும் வெள்ளை நிற லுங்கி அணிந்திருந்தார். வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பிளேட் வைத்துள்ளதால் நொண்டி, நொண்டி நடந்து செல்வார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சூர்யாவின் உருவ படத்தை பதிவிட்டு தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு சமூக வலைதளங்களிலும் மாநகர போலீசார் பதிவிட்டுள்ளனர்.

மாநகரில் சோதனை சாவடிகள் மற்றும் அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவை மத்திய சிறை அதிகாரிகள், திருப்பூர் மாவட்ட சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com