என் மலர்
திருப்பூர்
- பகுதியை சேர்ந்த சிலர் உணவு கொடுத்து வந்துள்ளனர்
- யாரோ மர்ம நபர்கள் நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.
திருப்பூர்:
திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ஜே. ஜே. நகரில் 20க்கும் மேறபட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான நாய்கள் சுற்றி வருகின்றன.
அவற்றிக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் உணவு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 10க்கும் மேற்பட்ட நாய்கள் திடிரென்று வாந்தி எடுத்தபடி உயிரிழந்த்தாக கூறப்படுகிறது. அதே போல் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளும் இறந்து கிடந்துள்ளன. இது அந்த பகுதி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது; -எங்கள் பகுதியில் நிறைய தெருநாய்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய்கள் அங்கேங்கே வாந்தி எடுத்தப்படி சுருண்டு விழுந்து இறந்தது. யாரோ மர்ம நபர்கள் நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.
இது குறித்து விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால், பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
- பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அவ்வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கணபதி நகர் மற்றும் செட்டிபாளையம் ரோடு பொதுமக்கள், எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து அளித்த மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது; - பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையால், பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அந்த வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிப்படுகின்றது. எனவே அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.மேலும் மது கடையை அகற்றக்கோரி வரும் ஆகஸ்ட் 8ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
எனவே அந்த மதுபான கடையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.
- அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும்
- மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார்
பல்லடம்:
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு குறித்து சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்லடம் நகராட்சி ஆணையாளர், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பல்லடம் வட்டார பகுதியில் அதிக விபத்துக்கள் நேரும் இடங்களை பார்வையிட்ட அவர் இதுகுறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பல்லடம் அரசு மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களை பார்வையிட்ட அவர் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வுப் பணிக்கு வந்த சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே தாலுகா அலுவலகத்தில் இருந்த பழைய குப்பைகளை தீ வைத்து எரித்தனர். அதில் பொது மக்களின் மனுக்களும் இருந்ததாக சிலர் கூறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுகள் குறித்து பல்லடம் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
- மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் சுற்றுப்பாதை முழுமையாக புதிதாக செப்பனிடுதல் பணிகள் இருந்தாதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
- அடிவாரத்தின் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்திலும், மலைமீது அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரசத்தி பெற்றது. இந்த மலைக்கோவிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் முதல் மலைக்கோவிலுக்கு மேலே செல்லும் சுற்றுப்பாதை முழுமையாக புதிதாக செப்பணிடப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வந்ததால் மலைப்பாதையில் எந்த வாகனங்களையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பக்தர்கள் அனைவரும் படியிலேயே ஏறிச்சென்றனர். வயதானவர்கள் பலரும் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவரோடு போடும் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு திருக்கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் அதிகம் பேர் வந்ததால் மலைப்பாதை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
இதனால் அடிவாரத்தின் நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்திலும், மலைமீது அமைந்துள்ள வாகன நிறுத்தும் இடங்களிலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.
- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளின் விவரங்களை பட்டியலிட்டனர்
- மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை செப்பனிடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக அதிகாரிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளின் விவரங்களை பட்டியலிட்டனர். அதன்படி சாலைப்பணிகள் செப்பனிடுவது, தார் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி பகுதியில் வேகமெடுத்துள்ளது. இதுகுறித்து மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-
திருப்பூர் மாநகரில் மொத்தம் 402 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.207 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரம் நிதி அரசிடம் கோரப்பட்டது. அதற்கான நிர்வாக அனுமதி கிடைத்து டெண்டர் விடப்பட்டு படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 168 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.
இந்த பணிக்காக ரூ.228 கோடி திட்டமிடப்பட்டு அரசிடம் நிதிஉதவி கோரப்பட்டது. தற்போது முதல்கட்டமாக ரூ.40 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அதில் ரூ.11 கோடியே 38 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
- மதியம் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
பல்லடம்,ஆக.3-
பல்லடம் அருகே உள்ள பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மனைவி அனிதா (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை இவர் பள்ளிக்கு சென்று விட்டார். மதியம் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவர் மீது கார் மோதியது.
- அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லடம்:
பல்லடம்அருகே உள்ள கொடுவாய் சக்தி விநாயகபுரத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மனைவி முத்தம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று கொடுவாய் கடைவீதிக்கு வந்துள்ளார்.
அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கப்படுகிறது.
- ரூ.16.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகம் சீரமைப்பு என பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைத்தல், அவிநாசி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பழங்கரை ஊராட்சியில் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் பெரியாயிபாளையம் சாலை முதல் காமராஜா் நகா் 7-ஆவது வீதி வரை கான்கிரீட் சாலை, ரூ.16.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகம் சீரமைப்பு என ரூ.58.28 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கண்டப் பணிகளை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பஆய்வு செய்தாா். மேலும், வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, அவிநாசி வட்டாட்சியா் சுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா், உதவி பொறியாளா்கள் செந்தில்குமாா், மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- தற்போது புத்தகம் வாசிப்போர் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருவதை காண முடிகிறது.
- அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலகம் அமைத்துத் தரும்படி மாவட்ட மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பூர்:
திருப்பூரில் மாவட்ட மைய நூலகம் அமைத்து தரும்படி திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் கோரியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க. செல்வராஜ் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்திற்கு என விரிவுபடுத்தப்பட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மாவட்ட மைய நூலகம் என்பது இதுவரை இல்லாத நிலையே உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளும் மாணவர்கள் குறிப்பெடுக்கவோ, அமர்ந்து படிக்கவோ அல்லது புதுப்புது புத்தகங்கள் சம்பந்தமாக விவாதிக்கும் வாசகர் வட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவோ தற்போது திருப்பூரில் உள்ள நூலகங்களில் போதிய இட வசதி இல்லை.
திருப்பூரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் புத்தக கண்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வுகளால் தற்போது புத்தகம் வாசிப்போர் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருவதை காண முடிகிறது.
எனவே திருப்பூர் மாவட்ட மைய நூலகம் ஒன்று அமைத்து தருவீர்கள் என்ற எதிர்பார்ப்போடு கல்வியாளர்களும், மாணவர்களும் புத்தகம் வாசிப்போரும் இருந்து வருகின்றனர். அந்த எதிர்பா ர்ப்பினை நிறைவேற்றிடும் வகையில், திருப்பூரில் கலைஞர் பேருந்து நிலையத்தின் எதிர்புறம் உள்ள மார்க்கெட் வளாகத்தில், 1953 இல் அமைக்கப்பட்ட காந்தி நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் அமைந்துள்ள இடம் 18 சென்ட் பரப்பளவு கொண்டது. இதனை புனரமைத்து, கட்டிடத்தை விரிவாக்கம் செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலகம் அமைத்துத் தரும்படி மாவட்ட மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- 438 கடைகள் மாநகராட்சி மூலமாக வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
- தெரிவித்தனர். வாடகை பாக்கியை விரைந்து கடைக்காரர்கள் செலுத்தி சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்க்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் ஏலம் விடப்பட்டு கடைக்காரர்கள் வாடகை செலுத்தி வருகிறார்கள். 438 கடைகள் மாநகராட்சி மூலமாக வாடகையினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாடகையினங்கள் ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் உள்ளவர்கள் நிலுவைத்தொகையை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது.
மேலும் நிலுவை வாடகைத்தொகையை விரைந்து செலுத்துமாறு கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அவகாசம் வழங்கியது. அதன்பிறகும் அவர்கள் வாடகையினங்களை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அதிகப்படியான வாடகை தொகை செலுத்தாத கடைகளை பூட்டி 'சீல்' வைக்க மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன்படி துணை ஆணையாளர் பாலசுப்பிரம ணியம், உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை முதல்கட்டமாக திருப்பூர் அவினாசி ரோடு பாரதியார் வணிக வளாகத்தில் உள்ள 22 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். அந்த கடைகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.
மாநகரில் மொத்தம் 169 கடைகளுக்கு வாடகை பாக்கியாக ரூ.10½ கோடி நிலுவை உள்ளது. அந்த கடைகளை பூட்டி சீல் வைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். வாடகை பாக்கியை விரைந்து கடைக்காரர்கள் செலுத்தி சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்க்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
- அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வாரம் 1000 ரூபாய் வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் 28 வாரம் பணம் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் 29 -வது வாரம் 9 பேர் பணம் செலுத்தி ஒருவர் உடல்நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதம் தர வேண்டிய 600 ரூபாய் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து சிவானந்தம் என்ற வசூல் செய்யும் நபர் இரவு 12 மணிக்கு பெண்களை நடுரோட்டில் பிடித்து வைத்து பணம் கட்டவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஒன்று கூடி தனியார் வசூல் செய்யும் நபரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர் இதனையடுத்து தனியார் நிறுவன ஊழியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
- இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வதுதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சரவணன் தனது மனைவியின் மகளான 19 வயது இளம்பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். நேற்று தற்செயலாக செல்போனை அந்தப் பெண் பார்த்தபோது தனது மகளின் குளியல் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பெண்ணின் தாயார் அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






