என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் குட்டை பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராமன் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவரது மகன் ஆறுமுகம் (வயது57) ,கூலித் தொழிலாளி. நேற்று இவர் அவரது உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மொபட்டில் சித்தம்பலம் - ஆலூத்து பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடைந்தவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது
    • விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.

    பல்லடம்

    விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம்புதூரில் கடந்த 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து விநாயகர் சிலைகள் தயாரிப்பு குழுவினர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 400 சிலைகள் தயாரித்தோம். இந்த ஆண்டுக்கான சிலைகள் தயாரிப்பு பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.இங்கு இது வரை 150சிலைகள் மட்டுமே வடிவமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.3 அடி முதல் 16 அடி வரையிலான சிலைகள் ரூ.3500 முதல் ரூ.34 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் கிழங்கு மாவு, பேப்பர் தூள் மூலம் தயாரித்து வாட்டர் பெயிண்டிங் அடித்துள்ளோம். விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.

    மேலும் மூலப் பொருட்கள் விலை உயர்வு,தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் விநாயகர் சிலைகள் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.14.18லட்சம்.இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

    அவினாசி:

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரத்தில் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 5525 மூட்டைகள் பருத்தி வந்திருந்தது. இது கடந்த வாரத்தை காட்டிலும் 450 மூட்டைகள் குறைவு. இதில் ஆர்சிஎச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6500 முதல் ரூ 7552 வரையிலும், மட்டரகப்பருத்தி குவிண்டால் ரூ.2000 முதல் ரூ.3500 வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.14.18லட்சம்.இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது.
    • தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து வண்ணம் தீட்ட உள்ளதால் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

    அவினாசி

    அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் உள்ள தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இதில் சிறிய ரக மீன்கள் குளத்திற்குள் செத்து மிதக்கின்றன. இந்த தெப்பகுள தண்ணீர் துர்நாற்றத்துடன் கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் ஆறாய் ஓடுகிறது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீரை மிதித்து கொண்டுதான் கோவிலுக்குள் செல்ல வேண்டியுள்ளது.

    இதை கோவில் நிர்வாகத்தினர் கண்டும் காணாமல் இருப்பது பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதுடன் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்:- கோவில் கும்பாபிஷேகத்திற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து வண்ணம் தீட்ட உள்ளதால் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அதில் சிறிது தண்ணீர் கசிகிறது. கூடிய விரைவில் நீர் இறைக்கும் பணி முடிந்து விடும் மேலும் நீர் கசியாமல இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

    • 6-ந் தேதி, அடுத்த மாதம் 2-ந் தேதி தாம்பரத்தில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூருவுக்கு சென்றடையும்.
    • 27-ந் தேதி, அடுத்த மாதம் 3-ந் தேதி இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

    திருப்பூர்:

    ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம்-மங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 26-ந் தேதி, அடுத்த மாதம் 2-ந் தேதி தாம்பரத்தில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூருவுக்கு சென்றடையும். இந்த ரெயில் சேலத்துக்கு இரவு 9.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 10.35 மணிக்கும், திருப்பூருக்கு 11.28 மணிக்கும், கோவைக்கு 12.37 மணிக்கும் செல்லும்.

    இதுபோல் வருகிற 27-ந் தேதி, அடுத்த மாதம் 3-ந் தேதி இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும். இந்த ரெயில் கோவைக்கு காலை 6.27 மணிக்கும், திருப்பூருக்கு 7.13 மணிக்கும், ஈரோட்டுக்கு 8 மணிக்கும், சேலத்துக்கு 9.02 மணிக்கும் வந்து செல்லும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை ) மின்விநியோகம் இருக்காது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்

    திருப்பூர்,ஆக.24-

    பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், எல்லப்பாளையம்புதூா் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம், ஒலப்பாளையம். 

    • தற்போது காய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது.
    • கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த அலகுமலையில் பழமை வாய்ந்த அகிலாண்ட விநாயகா் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை ஒட்டியுள்ள பெரிய வேப்பமரம் தற்போது காய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மரம் முறிந்து விழுந்தால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைவதுடன், மின்கம்பங்களும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

    அதே வேளையில், கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆகவே, கோவில் முன் உள்ள காய்ந்த வேப்ப மரத்தை உடனடியாக அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    • கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்.
    • சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.

    திருப்பூர்:

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் துறை அமைச்சா் சக்கரபாணியிடம் வலியுறுத்தியுள்ளதாக உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து தெரிவித்தாா்.

    இது குறித்து அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம், கள் இறக்க அனுமதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக, டெல்லி சென்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் கைலாஷ் செளத்ரியை சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து திண்டுக்கல்லில் தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணியை சந்தித்து மனு அளித்தோம்.

    அப்போது அவா், சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்கி அரை லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.25க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தரும் ஆதரவின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறினாா். அமைச்சரின் இந்த பதில் தென்னை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றாா்.

    கட்சி சாா்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக திருப்பூா் மாவட்டம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் ஆகஸ்ட் 31 வரை தொடரும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், அடுத்த மாதம் சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும். இதற்கிடையே 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி கூறியுள்ளாா். அமைச்சரின் இந்த அறிவிப்பை வெறும் கண் துடைப்பாகவே கருதுகிறோம்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக ரூ.30க்கு ஒரு லிட்டா் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றாா்.

    • தமிழ் சங்கத்தின் கட்டிட புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்ப ட்டுள்ளது.
    • மூத்த தலைமுறையினா் அவா்களுக்கு வழங்குதல் அவசியம்.

    திருப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம், வாஷி நகரில் செயல்பட்டு வரும் நவி மும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்ப ட்டுள்ளது.

    இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கற்பித்தல் மையங்கள்

    உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழா்கள் தற்போது உலகமெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனா்.அவ்வாறு புலம்பெயா்ந்து வாழ்ந்து வரும் தமிழா்கள், தமது பிள்ளைகள் தமிழ் பயில ஊக்குவித்து வருகிறாா்கள்.

    புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் பிள்ளைகள் தாம் எதற்காகத் தமிழ்மொழியைக் கற்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவும், தமிழை கற்பதால் அடையக் கூடிய நன்மைகள் என்ன என்பதையும் ஆசிரியா்கள் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அதற்கு பொருத்தமான பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், கற்பித்தல் மையங்கள் அமைத்துத் தரஎவேண்டும்.

    சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்

    நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால் அதன் வோ்களில் ஒன்றாக அறிவியல் விளங்குவது அவசியம்.நவீன உலகின் சவால்களை எதிா்கொ ள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.

    புலம் பெயா் நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளால் இதற்கு அளப்பரிய பங்களிப்பை நல்க முடியும். அதற்கான வழிகாட்டலை மூத்த தலைமுறையினா் அவா்களுக்கு வழங்குதல் அவசியம்.

    பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் தமிழை வளா்க்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.

    அவிநாசி:

    அவிநாசி செம்பியநல்லூா் ஊராட்சி முத்தம்மாள் நகரை சோ்ந்த லட்சுமணன் மகள் சரண்யா (வயது 25), வக்கீல். இவருக்கும் திருப்பூரை சோ்ந்த கட்டடப் பொறியாளா் சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் வசித்து வந்த சரண்யா, கடந்த ஜூலை மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், சப்-கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.இதற்கிடையில், இவ்வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவிநாசி சிஐடியூ., கட்டட கட்டுமான தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய சரண்யாவின் மாமனாரான திருப்பூா் கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணி (65), இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அங்காளம்மன் நகரைச் சோ்ந்த லாவண்யா (26), இவரது கணவா் மெளலி சங்கா்(28) ஆகியோரை போலீசார் இரவு கைது செய்தனா்.

    தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.

    • வெளியூருக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
    • 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

    திருப்பூர்

    திருப்பூா், செல்லம் நகரை சோ்ந்தவா் ரவி (வயது 48). பின்னலாடை நிறுவன தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8 ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 2022 அக்டோபா் 25 ந்தேதி வெளியூருக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

    இது குறித்து தெற்கு மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி தாயாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீசாா் போகசோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பளித்தாா். இதில் ரவிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    ×