என் மலர்
திருப்பூர்
- பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது
- உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.
திருப்பூர்:
உடுமலையை அடுத்த எலையமுத்தூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான காரீப் பருவத்திற்கான முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது.
உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி வரவேற்புரை ஆற்றியதுடன் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தார்.
பயிற்சியில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களையும், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும், கோடை உழவு செய்யும் முறை மற்றும் பயன்கள் பற்றி கூறினார். மேலும் குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரவல்ல கோ (எஸ்) -32 ரக சோளத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விதை, வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் விதை நேர்த்தி, உரச் செலவை குறைத்து இயற்கை முறையில் உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், மகசூலை அதிகரிக்க தானிய நுண்ணூட்டம் இடுதல் பற்றியும் விரிவாக கூறினார்.
- தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்பி வருகிறது.
- வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன.
திருப்பூர்:
தமிழ்நாடு வணிகத்துறை சார்பில் அனைத்து வணிக சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் சைமா சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் கலந்து கொண்டு 2 மனுக்களை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் வழங்கினார். அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்துறையினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்புவதும், அதன் அடிப்படையில் வரவு, செலவு செய்வதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறையின் போது சாய ஆலைகள் செலுத்த வேண்டிய வாட் வரிக்கு ஏன் டி.டி.எஸ். பிடித்தம் செய்து கட்டவில்லை என்று கூறி அபராதத்துடன் கட்டுமாறு அறிக்கை அனுப்பப்படுகிறது.
வாட் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சாய ஆலைகளிடம் இருந்து வரி வசூலிக்க வாய்ப்பு இருக்கும்போது பின்னலாடை நிறுவனங்களிடம் கேட்பது நியாயமான ஒன்றல்ல. மேலும் வணிக வரித்துறை உத்தரவின்படி டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டியதில்லை என்று ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்கத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எங்களது சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய அறிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வியாபார பரிவர்த்தனைகளில் வரி நிலுவை உள்ளதாக அனுப்பப்படும் அனைத்து அறிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் பாரம்பரியமிக்க தொழிலை இதுபோன்ற சிரமங்களில் இருந்து மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு மனுவில், பனியன் தொழிலில் வெளி மாநில விற்பனைக்கான சி படிவம் சமர்ப்பித்து 1 சதவீத வரி செலுத்தும் ஆணை நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது சி படிவம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. இந்த சூழலில் 1 சதவீத வரி செலுத்தி கணக்கு முடித்த உறுப்பினர்களுக்கு கூட 2002-2003-ம் ஆண்டு அதாவது 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்குகள் குறித்து கேட்பு அறிக்கைகள் வருகின்றன. வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன.
எனவே 1 சதவீத வரி கட்டிய எங்களது சங்க உறுப்பினர்களின் கணக்கை ஏற்றுக் கொள்ளவும், 10 ஆண்டுகளுக்கு மேலான கணக்குகளுக்கு கேட்பு அறிக்கை அனுப்புவதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர்:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூர கல்வி முறையில் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட்., உள்ளிட்ட அனைத்து பாட, மாத தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 28ந் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேணடும்.தொலைதூர கல்வி தேர்வு சார்ந்த விபரங்களை https://sde.b-u.ac.in/SSS/OLP/ என்ற பல்கலை க்கழக இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
- சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
திருப்பூர்:
இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு வாடிக்கையாளர் உள்ளனர். தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
இந்தியன் ஆயிலின் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளம், மிஸ்டு கால், வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றின் வாயிலாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் சில நேரங்களில், வேலை நிமித்தம் காரணமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இதனால் சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதை தவிர்க்க தற்போது, சிலிண்டர் பதிவு செய்வது குறித்து நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
அந்த எஸ்.எம்.எஸ்.,-ல் கடைசி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட தேதி மற்றும் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டிய மிஸ்டு கால் எண், இணையதள, 'லிங்க்' ஆகியவையும் அனுப்பப்படுகிறது.
- இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது.
- சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை.
உடுமலை:
சின்ன வெங்காய ஏற்றுமதி முடங்கி கிடப்பதைத் தவிா்க்க அதற்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த வெள்ளக்கோவில் ஆா். பி. சாமி கூறியதாவது:-
இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதில் வெங்காயம் என்பது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் ஒன்றாகவே உள்ளது. பெரிய வெங்காயம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை ஏற்றத் தாழ்வு என்பது இந்திய அளவிலான பிரச்னையாகும்.
ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து, ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ்நாட்டு சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
ஏற்றுமதி செய்யப்படும் போது கொடுக்கப்படும் குறியீட்டு எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் குறைந்தபட்ச உற்பத்திச் செலவு 30 ரூபாயாகும். விவசாயிகள் கிலோ ரூ. 45க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய ஏற்றுமதி வரி விதிப்பு கிலோவுக்கு 20 ரூபாயைக் குறைத்துள்ளது.
சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. நஷ்டத்துக்கு நிவாரணமும் இல்லை. அப்படியிருக்க வரி விதிக்க எவ்வித தாா்மீக உரிமையும் கிடையாது. கஷ்டப்படும் விவசாயிகளைக் கண்டு கொள்ளாமல், நுகா்வோரை மட்டுமே அரசு கருத்தில் கொள்கிறது.
ஏற்றுமதி தரத்தில் சந்தை நிலவரத்தை அனுசரித்து கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் வியாபாரிகளும் தவித்து வருகின்றனா்.
எனவே, வரி விதிப்பை ரத்து செய்வதுடன், சின்ன வெங்காயத்துக்கு தனியாக ஏற்றுமதி குறியீட்டு எண்ணையும் விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.
- கோவிலுக்கு பக்தா்கள் பசுக்களை தானமாக தருவது தொன்றுதொட்டு நடைபெறுகிறது.
- புனிதமான பசுவை ஒரு பொருளாகக் கருதி இந்து சமய அறநிலையத்துறை அதனை கசாப்புக்கு விற்கும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.
திருப்பூர்:
பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய பசுக்களைப் பராமரிக்க ஒவ்வொரு கோவிலிலும் கோசாலை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கோவிலுக்கு பக்தா்கள் பசுக்களை தானமாக தருவது தொன்றுதொட்டு நடைபெறுகிறது. பசுக்களைப் பராமரித்து அதில் கிடைக்கும் பசுவின் பால், தயிா் ஆகியவற்றை அபிஷேகத்துக்கு பயன்படுத்தி வந்தனா். நாள்தோறும் கா்ப்பகிரகத்தில் சுவாமி அறைக் கதவு திறக்கும்போது பசு தரிசனம் நடைபெற வேண்டும். பல கோவில்களில் பசுவை பராமரிக்க ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஏராளமான மேய்ச்சல் நிலங்கள் இருக்கின்றன.
ஆனால் இந்து சமய அறநிலையத் துறை அதனை சரியாக பராமரிப்பதில்லை. புனிதமான பசுவை ஒரு பொருளாகக் கருதி இந்து சமய அறநிலையத்துறை அதனை கசாப்புக்கு விற்கும் கொடூரமும் அரங்கேறி வருகிறது. இதனை இந்து முன்னணி தட்டிக் கேட்டதால் பசுவை மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு இலவசமாக தந்ததாக கணக்குக் காட்டியுள்ளனா்.
ஆகவே ஒவ்வொரு கோவிலிலும் பக்தா்கள் தானமாகக் கொடுத்த பசுவைப் பராமரிக்க தனி கோசாலை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் அவினாசி சாலை எஸ்.ஏ.பி.சந்திப்பு ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத்பாண்டி (வயது30), பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி விட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து சரத்பாண்டியின் நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த நரசிம்ம பிரபு(25), கணேஷ் (30) மற்றும் சுள்ளான் பிரபு (25) ஆகியோர் பார்ட்டி வைக்குமாறு சரத்பாண்டியை வலியுறுத்தினர்.
நண்பர்களின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த 13-ந்தேதி சரத்பாண்டி, நரசிம்மபிரபு, கணேஷ், சுள்ளான் பிரபு ஆகிய 4 பேரும் அங்கேரிபாளையம் பிரிவு சுடுகாட்டிற்கு மது குடிக்க சென்றனர். அங்கு 4 பேரும் அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது போதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான்பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் சரத்பாண்டியை குத்திவிட்டு தப்பி சென்றனர்.
இதில் ரத்த வௌ்ளத்தில் மிதந்த சரத்பாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாண்டி நேற்று இரவு இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான் பிரபு ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின் மயங்கி விழுந்தார்.
- ஸ்டாலின் உயிரிழப்புக்கு மது போதை காரணமா?அல்லது புரோட்டா காரணமா? என்பது குறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்குப் பிறகு தெரிய வரும்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி ஆர். ஜி. புதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஸ்டாலின் (வயது 27). இவர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை சேகரித்து பெரியபட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் வேலை செய்து வந்தார்.
இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. சம்பவத்தன்று ஸ்டாலின் தன்னுடன் வேலை செய்யும் நண்பர் சிவக்குமார் என்பவருடன் துங்காவி பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் அங்குள்ள கடையில் புரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது குடிப்பதற்கு ஐஸ் வாட்டர் வேண்டும் என்று கேட்டு வாங்கி குடித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கணியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டாலின் உயிரிழப்புக்கு மது போதை காரணமா?அல்லது புரோட்டா காரணமா? என்பது குறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்குப் பிறகு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால் அதன் வோ்களில் ஒன்றாக அறிவியல் விளங்குவது அவசியம்.
- நவீன உலகின் சவால்களை எதிா்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.
திருப்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம், வாஷி நகரில் செயல்பட்டு வரும் நவி மும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழா்கள் தற்போது உலகமெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனா். அவ்வாறு புலம்பெயா்ந்து வாழ்ந்து வரும் தமிழா்கள், தமது பிள்ளைகள் தமிழ் பயில ஊக்குவித்து வருகிறாா்கள்.
புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் பிள்ளைகள் தாம் எதற்காகத் தமிழ்மொழியைக் கற்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவும், தமிழை கற்பதால் அடையக்கூடிய நன்மைகள் என்ன என்பதையும் ஆசிரியா்கள் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அதற்கு பொருத்தமான பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், கற்பித்தல் மையங்கள் அமைத்துத் தர வேண்டும்.
நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால் அதன் வோ்களில் ஒன்றாக அறிவியல் விளங்குவது அவசியம். நவீன உலகின் சவால்களை எதிா்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.
புலம் பெயா் நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளால் இதற்கு அளப்பரிய பங்களிப்பை நல்க முடியும். அதற்கான வழிகாட்டலை மூத்த தலைமுறையினா் அவா்களுக்கு வழங்குதல் அவசியம்.
பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் தமிழை வளா்க்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
- கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.
பல்லடம்
பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து வியாபாரிகள் பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் திருடன் சிக்கவில்லை. இதையடுத்து கடைக்காரர்கள் கடைகளுக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். சம்பவத்தன்று இரவு பேன்சி கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் சுமார் ரூ.2.500 மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது, அதில் ஒரு வாலிபர் கடைகளில் புகுந்து திருடுவது தெரிய வந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் கொண்ட நபர் மார்க்கெட் பகுதிக்கு வந்தார்.
அவரை வியாபாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது அவர் கடைகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து பேன்சி கடை நடத்தி வரும் நாகராஜன் (வயது59) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் அவன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி புத்தி பதார் என்பவரது மகன் ராஜு என்கிற சிந்தாமணி (வயது 28) என்பது தெரிய வந்தது.
அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வீடு அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
- ஈஸ்வரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 52). நேற்று அவர் வீடு அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தட்டி கேட்ட பழனியம்மாளை அந்த வாலிபர் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த பழனியம்மாள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் பழனியம்மாளை தாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற ஈஸ்வரன் (வயது 37) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






