என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஊத்துக்குளி:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    இதில் குடியிருக்க இடம் இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உடனே வழங்க வேண்டும், காலி இடம் இருந்தும் சொந்த வீடு கட்ட இயலாத ஏழை மக்களுக்கு ரூ. 10 லட்சம் செலவில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், கிராமப்புறங்களில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் , தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் தொடர்ந்து வேலை வழங்கிட வேண்டும், சட்டபூர்வமான தினக்கூலி ரூ.294-ஐ முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஊத்துக்குளி தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமை தாங்கினார்.கே.எஸ்.கருப்புசாமி, வேலுச்சாமி, நந்தகுமார், நாகராஜ், செல்வன், விஜயன், குமாரசாமி, செல்வி, நடுப்பட்டி பழனிச்சாமி, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ஏ.சண்முகம், எஸ்.கே.கொளந்தசாமி, க.பிரகாஷ், காமராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முடிவில் பழனிச்சாமி நன்றி கூறினார்.

    • 20 வயதான இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அடுத்துள்ள கல்லெறி என்ற ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி சதிஷ்குமார்(40) அங்கு தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

    காங்கேயம்:

    காங்கேயம் அருகேயுள்ள பாப்பினி கிராமத்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அடுத்துள்ள கல்லெறி என்ற ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி சதிஷ்குமார்(40) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து அவர் பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சதிஷ்குமார் தலைமறைவானார்.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் வெள்ளகோவில் அருகேயுள்ள முத்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சதிஷ்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சூரியன் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் செங்குத்தாக அமையும்.
    • 7 மற்றும் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்த செயல்முறை வகுப்பு நடைபெற்றது.

    சூரியன் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் செங்குத்தாக அமையும்.இத்தகைய நாட்களில் நண்பகலில், நம் நிழல் நீளாமல், காலடியின் கீழே அமையும். இந்நாள், நிழல் இல்லா அல்லது பூஜ்ய நிழல்நாள் எனப்படுகிறது.

    இந்த நாளில் வானில் ஏற்படும் வானியல் சார்ந்த அறிவினை மாணவர்கள்அறிந்து கொள்ளும் விதமாகப் பள்ளியில் பயிலும் 7 மற்றும் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பள்ளியின் முதல்வர் பிரமோதினி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனாவுடன் இணைந்து பள்ளியின் அறிவியல் துறையை சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு., சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார்.

    20 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன் அலைக்கழிக்காமல் வங்கிகளில் வழங்க வேண்டும், மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே, தள்ளு வண்டி வழங்கியுள்ளது.

    அது போல் இங்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாலையோர வியாபாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    • புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது
    • இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.

    இதில் பி.காம், பி.காம்(சி.ஏ.), பி.பி.ஏ., பி.எஸ்சி. (சி.டி.எப்) பி.எஸ்சி. சி.எஸ். (ஏ.ஐ.) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கல்லூரியில் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் கல்லூரியில் சிறப்பு கணபதி ஹோமம் பூஜை திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓ.கே.எம்.கந்தசாமி, துணைத்தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பி.வி.எஸ். பி.முருகசாமி, இணைச் செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி, கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்பட அறக்கட்டளை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் இக்கல்லூரி முதல்வர் 20 ஆண்டுகள் கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்தவர். அனுபவமிக்க பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கல்லூரி முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றில் ஊக்குவிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  

    • லட்சுமி கடவுளின் அருளை பெறுவதற்கான வழிபாடாக வரலட்சுமி விரதம் உள்ளது.
    • பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்க, தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றை பெறவும் வரலட்சுமி விரதம் இருந்தனர்.

    திருப்பூர்:

    லட்சுமி கடவுளின் அருளை பெறுவதற்கான வழிபாடாக வரலட்சுமி விரதம் உள்ளது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிகிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்க, தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றை பெறவும் வரலட்சுமி விரதம் இருந்தனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது. இதற்காக அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னி பெண்கள், சுமங்கலி பெண்களை விரத பூஜையில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.

    நோன்பு பதார்த்தங்களாக பச்சை அரிசி இட்லி, பருப்பு சேர்த்த குழம்பு, ரசம், கறிவகைகள், வடை, சர்க்கரை பொங்கல், பாசிபருப்பு பாயாசம், தேங்காய், பச்சைமிளகாய் உப்பு சேர்த்த பச்சடி, கார கொழுக்கட்டை உள்ளிட்ட பதார்த்தங்களை தயாரித்து வழிபாட்டில் வைத்தனர்.

    இதுதவிர லட்சுமி கடவுளுக்கு மிகவும் பிடித்த பதார்த்தமாக இருந்து வரும் கோசம்பரி தயார் செய்து படையலாக படைத்தனர். எளிமையான முறையில் வரலட்சுமி வழிபாடு செய்ய சிலர் ஐந்து வகையான பழங்கள், ஐந்து வகை மலர்கள் ஆகியவற்றை லட்சுமி கடவுள் முன் சமர்ப்பித்து, லட்சுமி தேவியின் துதிப்பாடலை பாடி வழிபட்டனர்.

    இதேப்போல் திருப்பூரில் உள்ள கோவில்களிலும் வரலட்சுமி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    திருப்பூர்:

    தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும் கட்சி கொடிகளை ஏற்றியும், ஏழை எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல், பொருளாளர் காளியப்பன், அவைத்தலைவர் சரவணகுமார் ஆகியோருடன் துணை செயலாளர் ஏ .எஸ். அக்பர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தொடர்ந்து பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து பாண்டியன் நகரில் பகுதி செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் கொடியினை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் பொட்டு காளியப்பன், மாவட்ட பொருளாளர் ராயபுரம் பா. ஆனந்த், வெள்ளியங்கிரி, பிரபு, வசந்த், யுவராஜ், கிட்டுசாமி உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும் விஜயகாந்தின் 71 -வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    • கடைமடை பகுதியாக உள்ள வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதிக்கு, தண்ணீர் வந்து சேர்வதில்லை
    • கிளை வாய்க்காலில் குப்பை, இறந்த கோழிகள் வீசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காங்கயம்:

    பி.ஏ.பி., பாசன திட்டத்தில் கடைமடை பகுதியாக உள்ள வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதிக்கு, தண்ணீர் வந்து சேர்வதில்லை என்ற விவசாயிகளின் தொடர் ஆதங்கம் எதிரொலியாக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் சுல்தான்பேட்டை துவங்கி பொங்கலூர், காங்கயம், வெள்ளகோவில் வரை விரிவான கள ஆய்வு நடத்தினர்.

    இதில் காங்கயத்தில் கால்வாயின் இருபுறமும் திடக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. கால்வாய் மற்றும் கரையோரங்களில் மதுபாட்டில், பிளாஸ்டிக் பை அடைந்து கிடப்பதால் நீர்வழித்தடம் தடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக கால்வாயில் திறந்து விடப்படுகிறது. பல ஆண்டுகளாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள், கால்வாயில் வெளியேற்றப்படுவதால், நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது என அறிக்கை சமர்ப்பித்தனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பாசனத்தில் விதிமீறல்களை சரி செய்து 4வது மண்டலத்துக்கு குறைந்தபட்சம் 10 சுற்று தண்ணீர் பாசனத்திற்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காண்டூர் கால்வாய் அடைப்பு நீக்க நடவடிக்கை எடுப்பது,அடுத்து வரும் 4வது மண்டலத்துக்கு அரசாணை பெறும் போது நீர் வளத்துறையின் செலவினம், நீர் பரிமாற்ற இழப்பு ஆகியவற்றை கருத்துருவில் தெளிவாக குறிப்பிட்டு நீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பது.

    கிளை வாய்க்காலில் குப்பை, இறந்த கோழிகள் வீசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பது, காலாவதியான பாசன சபை வாக்காளர் பட்டியலை சரி செய்வது, கிளை வாய்க்கால் பராமரிப்பு, கால்வாய் ஓரம் கம்பிக்கட்டி, கான்கிரீட் தடுப்பு அமைப்பது, பரம்பிக்குளம், சோலையாறு அணை பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர், முதன்மை பொறியாளர் ஆகியோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதை கண்டித்து, வெள்ளக்கோவில் கிளை (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தினர் கூட்டத்தை புறக்கணித்தனர்.

    தங்களது கோரிக்கையை முன்வைத்து பட்டினி போராட்டம் நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளனர்.

    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல உறுப்பினர் தேர்தல் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
    • தேர்தலில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் 91 பேர் வாக்கு அளிக்க உள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் குமாஸ்தாக்கள் சேமநல உறுப்பினர் தேர்தல் திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் .அதற்காக 18 பேர் போட்டிட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் எம்.பழனிசாமி தேர்தல் அதிகாரியாகவும் வக்கீல் பாலகுமார் தேர்தல் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வழக்கறிஞர் அணி செயலாளர் பத்மநாபன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த தேர்தலை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ரகுபதி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த தேர்தல் இன்று மாலை வரை நடைபெறுகிறது.

    இதில் வெற்றி பெறும் நபர்கள் சேம நல நிதி கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் பணியாற்றும் 91 பேர் வாக்கு அளிக்க உள்ளனர்.

    • பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
    • வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு.

    தாராபுரம்:

    பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளவர்களாக கருதி பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் இடைநிற்றல் தழுவியோருக்கான சிறப்பு கணக்கெடுப்பு இம்மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.வழக்கமாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 1ந் தேதி வரை நடத்த வேண்டும்.

    இதற்கு பிறகும் பள்ளிகளில் சேராதவர்களை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்திலும், இடைநிற்றல் இன்றி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் பள்ளிக்கு தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தவர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவர்கள் இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளதால் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு கணக்கெடுப்பு திட்டத்தின் வாயிலாக உரிய மாணவர்களின் வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு செய்யப்படாத மற்றும் குறைந்த வரி விதிப்பு செய்த கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    மாநகராட்சி பகுதியில் வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் பெருமளவு உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் நிர்வாகத்துக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.ஏராளமான கட்டிடங்கள் குறைந்த வரி விதிப்பு செய்தும், வரி விதிப்பே செய்யாமலும் பயன்பாட்டில் உள்ளது. இரு வார்டுகளில் நடத்திய ஆய்வில் 309 சதவீதம் அளவு வரி விதிப்பில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. வருவாய் பிரிவினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தங்கள் பகுதியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து இதனை சரி செய்து, முறையான வரி விதிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கால அவகாசம் இம்மாத இறுதி வரை வழங்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    உரிமையாளர்கள் தாமாகவே முன் வந்து அதற்கு முன்னதாக உரிய வரிவிதிப்பு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் கட்டமாக வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கான வரி விதிப்புகள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக தற்காலிக மற்றும் வணிகரீதியான மின் இணைப்புகள் பெற்ற கட்டிடங்கள் குறித்த விவரங்கள் மின் வாரியம் மூலம் பெறப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அனைத்து கட்டிடங்களும் ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என்றார்.

    • அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
    • வனத்துறை சார்பில் வனப்பகுதியை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள ஊதியூர் காப்புக்காட்டில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை தென்பட்டது. நாமக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.அவ்வப்போது காட்டில் இருந்து வெளியே வரும் சிறுத்தை அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள், வளர்ப்பு நாய், பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு உள்ளிட்ட விலங்குகளை அடித்து, தூக்கி சென்ற சம்பவம் அவ்வப்போது நடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையை ஒட்டியிருந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதியை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வைத்து, சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கூண்டும் வைக்கப்பட்டது. அவ்வப்போது கேமராவில் சிக்கிய சிறுத்தை கூண்டுக்குள் அகப்படவில்லை.

    தற்போதைய நிலை குறித்து காங்கயம் வனத்துறையினர் கூறியதாவது:-

    ஊதியூர் காப்புக்காடு வளம் நிறைந்த காடாக இருப்பதால் சிறுத்தை அங்கேயே தங்கிவிட்டது. முள்ளம்பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்கினங்களை சிறுத்தை அடித்து உணவாக்கி கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.கடந்த 42 நாளாக கேமராவில் சிறுத்தை அகப்படவில்லை. இந்த காப்புக்காடு வளம் நிறைந்தது என்பது இதன் வாயிலாக தெரிய வருகிறது.சிறுத்தை வெளியே வராமல் அப்பகுதியை தனது வாழ்விடமாக்கிக் கொண்டிருக்கலாம்.அல்லது தான் வந்த வழியே வெளியே சென்றிருக்கலாம். இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

    தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×