என் மலர்
திருப்பூர்
- கோனரிபட்டியில் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- 750 ஏக்கர் நிலத்தை கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதாங்கால் நீர்த்தேக்க அணை கட்டுமான பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 13-வது நாளாக கோனரிபட்டியில் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காத்திருப்பு பந்தலில் விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிச்சை எடுத்து தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் தெரிவிக்கையில்:-
பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
நீதிமன்றம் தீர்ப்பு வந்தும் தாராபுரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு 24 ஆண்டுகளாக இழப்பீட்டு தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். குறைந்தபட்ச முழு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளின் வழக்கை மேல் முறையீடு செய்துள்ளனர்.
மேல் முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்களிடம் பிச்சை எடுத்து பிச்சை எடுத்த காசை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து எங்களது வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் 24 ஆண்டு காலமாக லஞ்சம் எதுவும் கொடுக்காததால் விவசாயிகளை அதிகாரிகள் வஞ்சிப்பதாகவும் இனியாவது பிச்சை எடுத்த காசில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கிறோம் எனக் கூறி ஒவ்வொருவரிடம் பிச்சை எடுத்து பணம் திரட்டி வருகிறோம் என்றனர்.
- ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
- 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மூலனூர்:
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த சில வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-
கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்ேபாது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்வடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
- அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மூலனூரில் நடைபெற்றது.
- இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டார்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி கன்னிவாடி பேரூராட்சி,வடுகபட்டி ,புதுப்பை ,தலையூர் ,ஆகிய பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய்துறை அலுவலர் ஜெய் பீம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை விளக்கி கூறி வரும் காலங்களில் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்.
அதன் பின்னர் மூலனூர் பேரூராட்சி, கன்னிவாடி பேரூராட்சி, வடுகபட்டி, புதுப்பை, புஞ்சை தலையூர் ஆகிய பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளான மொத்தம் 269 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி கீதா, மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி சுரேஷ் மற்றும் மூலனூர் ஒன்றிய கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி , மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு மற்றும் கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி நன்றி கூறினார்.
- வினாடி-வினா எழுத்துத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது.
- வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும்.
திருப்பூர்:
இந்திய தபால் துறை சார்பாக பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற ஊக்கத்தொகை திட்டம் அகில இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதல்கட்டமாக வினாடி-வினா எழுத்துத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்க வருகிற 6-ந் தேதி கடைசிநாளாகும். தகுதியான மாணவ-மாணவிகள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு dotirupur.tn@indiapost.gov.in என்ற இணையதளத்திலும் 0421 2239785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதில் வெற்றி பெற்றவர்கள் தபால் தலை தொடர்பான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் அவர்களுடைய அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இந்த தொகை அவர்களின் 9-ம் வகுப்பு பள்ளி படிப்பு முடியும் வரை வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
- புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 99 பேருக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- 54 கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் கடந்த 2 மாதங்களாக நடத்திய சோதனையில் 384 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்புத் துறை, காவல் துறை அதிகாரிகள் இணைந்து கடந்த 2 மாதங்களாக புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடா்பாக மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனா். இதில் தடை செய்யப்பட்ட 384 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 99 பேருக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடா்ச்சியாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 54 கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் 94404-2322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.
- தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
- ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 2.73 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சி, பல்லகவுண்டன்பாளையத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 29.50 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூா் - நடுப்பட்டி சாலை முதல் அரசு உயா்நிலைப் பள்ளி வழியாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வரை தாா் சாலை மேம்படுத்துதல், தெற்கு சாணாா்பாளையத்தில் ரூ. 26.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் ரூ. 23.84 லட்சம் மதிப்பீட்டில் கோபி - தாராபுரம் சாலை முதல் குடிசை வலவு வரை உள்ள தாா் சாலை மேம்படுத்துதல், காவுத்தாம்பாளையம் ஊராட்சியில் ரூ. 91.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கு தச்சம்பாளையம் முதல் கிழக்கு தச்சம்பாளையம் செல்லும் சாலை வரை தாா் சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட மொத்தம் ரூ. 2.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மொத்தம் 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1,515 மாணவ, மாணவியருக்கு ரூ. 73 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்.கீதா, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனாட்சி, சரவணன், குன்னத்தூா் பேரூராட்சித் தலைவா் ந.பெ.குமாரசாமி, மொரட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- அமைப்பு சாரா தொழிலாளா்கள் பட்டியலில் நிலத் தரகா்களை சோ்க்க வேண்டும்
- நில வழிகாட்டி மதிப்பு உயா்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும்.
அவிநாசி:
நில வழிகாட்டி மதிப்பு உயா்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிலத் தரகா்கள் அவிநாசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு நிலத் தரகா்கள் நலச் சங்க தலைமை செயலாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். அவிநாசி தொகுதி தலைவா் கோபிநாத் வரவேற்றாா்.ஆா்ப்பாட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளா்கள் பட்டியலில் நிலத் தரகா்களை சோ்க்க வேண்டும், நில வழிகாட்டி மதிப்பு உயா்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா்கள் ராஜா (திருப்பூா்), மாணிக்கம் (கோவை), மாவட்ட செயலாளா்கள் ராதாகிருஷ்ணன் (திருப்பூா்), உதயகுமாா் (கோவை), மாவட்ட பொருளாளா்கள் பொன்னுசாமி (திருப்பூா்), சுப்பிரமணி (கோவை), மாநிலக் குழுத் தலைவா் ஸ்ரீதேவிசெல்வராஜ், திருப்பூா் மாவட்டத் துணைத் தலைவா்கள் ஈஸ்வரன், செந்தில்குமாா், மாவட்ட துணை செயலாளா்கள் துரை, தங்கவேல், அவிநாசி செயலாளா் வரதராஜன், பொருளாளா் கதிா்வேல் உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
- தகராறில் 3 பேரும் சோ்ந்து சரத்பாண்டியை குத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
- கொலையாளிகளை தேடி வந்த நிலையில் நரசிம்மபிரவீன், கணேஷ் ஆகியோா் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனா்.
திருப்பூர்:
திருப்பூா், ஓலப்பாளையத்தைச் சோ்ந்தவா் சரத்பாண்டி (வயது 30), பால் வியாபாரி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, சரத்பாண்டியின் நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த நரசிம்ம பிரவீன் (25), கணேஷ் (28), சூரியபிரகாஷ் (30) ஆகியோா் விருந்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளனா்.
இதைத்தொடா்ந்து, சரத்பாண்டி உட்பட 4 பேரும் கடந்த ஆகஸ்ட் 13-ந் தேதி அங்கேரிபாளையத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தியுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சோ்ந்து சரத்பாண்டியை குத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனா். இந்த நிலையில், சரத்பாண்டி உயிரிழந்தாா். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி 3பேரை தேடி வந்த நிலையில் நரசிம்மபிரவீன், கணேஷ் ஆகியோா் அவிநாசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சூா்யபிரகாஷை போலீசார் தேடி வருகின்றனா்.
- தி.மு.க. நிர்வாகிகள்,பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தபட்டது.
மங்கலம்:
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்புத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அக்ரஹாரப்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எம்.செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளிக்குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதி அப்துல்பாரி, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் முகமது இத்ரீஸ், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான ரபிதீன், ஜன்னத்துல்பிரதௌஸ், அர்ஜூனன், மசூதாபேகம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
- கட்சியில் கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.
தாராபுரம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனுதாக்கல் செய்தனர்.
அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டம் செல்லும், 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்ததை அடுத்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலை அருகே நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பானுமதி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ் ,நகர துணைச் செயலாளர் நாட்ராயன், நகரப் பொருளாளர் சாமுவேல், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி, முன்னாள் நகரச்செயலாளர் மலை மாரிமுத்து, நகர இளைஞரணி செயலாளர் தினேஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அரசு குமாரன்(போக்குவரத்து), பழனி குமார் (மின்வாரியம்) , வார்டு செயலாளர்கள் ஸ்டுடியோ கார்த்திக் , மார்க்கெட் டேவிட் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+3
- திருப்பூர் மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
- முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி சின்ன முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாநகரில் உள்ள 120 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 26,079 மாணவ மாணவிகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தினை திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். 15 வேலம்பாளையம் அரசு பள்ளியில் மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மண்டல தலைவர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
திருப்பூர்:
மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில நிறுவன தலைவா் வக்கீல் ஈசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை நிலவரத்தை அனுசரித்து ஏற்றுமதிக்காக கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் ஏற்றுமதி செய்ய இயலாமல் மிகக் கடுமையான நஷ்டத்தை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.
பெரிய வெங்காயம் என்பது இந்திய அளவிலான பிரச்னை, உலக அளவிலான சந்தையும் கூட. ஆனால் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தடைகளை விதித்தும், வரிகளை விதிப்பதும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்றுமதி செய்யப்படும்போது கொடுக்கப்படும் எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கு ஒரே எண்ணாக இருந்து வருகிறது. இதை பிரித்து சின்ன வெங்காயத்திற்கு தனி எண்ணை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் 40 சதவீத வரி விதிப்பு சின்னவெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாயை குறைத்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
எனவே, மத்திய அரசு 40 சதவீத வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், பெரிய வெங்காயத்தில் இருந்து சின்ன வெங்காயத்தைப் பிரித்து அதற்கு தனியாக ஏற்றுமதி எண் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் நாளை 26ந் தேதியும், குடிமங்கலத்தில் 28-ந் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






