என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரண் அடைந்த நரசிம்மபிரவீன், கணேஷ்.
பால் வியாபாரி கொலை - அவிநாசி கோர்ட்டில் 2பேர் சரண்
- தகராறில் 3 பேரும் சோ்ந்து சரத்பாண்டியை குத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
- கொலையாளிகளை தேடி வந்த நிலையில் நரசிம்மபிரவீன், கணேஷ் ஆகியோா் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனா்.
திருப்பூர்:
திருப்பூா், ஓலப்பாளையத்தைச் சோ்ந்தவா் சரத்பாண்டி (வயது 30), பால் வியாபாரி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, சரத்பாண்டியின் நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த நரசிம்ம பிரவீன் (25), கணேஷ் (28), சூரியபிரகாஷ் (30) ஆகியோா் விருந்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளனா்.
இதைத்தொடா்ந்து, சரத்பாண்டி உட்பட 4 பேரும் கடந்த ஆகஸ்ட் 13-ந் தேதி அங்கேரிபாளையத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தியுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சோ்ந்து சரத்பாண்டியை குத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனா். இந்த நிலையில், சரத்பாண்டி உயிரிழந்தாா். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி 3பேரை தேடி வந்த நிலையில் நரசிம்மபிரவீன், கணேஷ் ஆகியோா் அவிநாசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சூா்யபிரகாஷை போலீசார் தேடி வருகின்றனா்.






