என் மலர்
திருப்பூர்
- உடல் நிலை பாதித்து இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரேத பரிசோதனை முடிவில் புலி எப்படி இறந்தது என்பது குறித்த காரணங்கள் தெரியவரும் என அமராவதி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகம் கல்லாபுரம் சுற்று கழுதகட்டி ஓடை பகுதியில் இன்று காலை புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு 9வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதன் வாயில் காயங்கள் இருந்தது. அந்த புலி எப்படி இறந்தது என்று தெரியவில்லை. உடல் நிலை பாதித்து இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக வனத்துறையினர் உயிரிழந்த புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் புலி எப்படி இறந்தது என்பது குறித்த காரணங்கள் தெரியவரும் என அமராவதி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 2 மாதத்தில் 11 புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் புலிகள் இறப்பு குறித்து தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி சென்றனர். இந்தநிலையில் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மற்றொரு புலி உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.
- மண்டபங்களில் கடை போடுவதால் விற்பனை பாதிக்கப்பட்டு தொழிலை விட்டே சொல்லுமளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.
உடுமலை
மடத்துக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிகமாக (தீபாவளி வரை) ஜவுளிக்கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.இதற்கு வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மடத்துக்குளம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் துணிக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து மடத்துக்குளம் தாசில்தார் செல்வியை சந்தித்து மனு அளித்தனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.வணிக ரீதியான பொருட்களை மண்டபங்களில் வைத்து விற்பனை செய்வதற்கான அனுமதி எதுவும் இல்லாமல் சில வெளியூர் வியாபாரிகள் தீபாவளி சமயத்தில் கடைகள் அமைக்கின்றனர். இவர்கள் அரசுக்கான விற்பனை வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட எந்த வரியினங்களையும் செலுத்தாமல் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.இதனால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாதம்தோறும் வாடகை, ஆள் சம்பளம் உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்து வியாபாரிகள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்களில் நடைபெறும் விற்பனையை நம்பி காத்திருக்கின்றனர்.இதற்கென பெருமளவில் கொள்முதலும் செய்துள்ளனர்.ஆனால் மண்டபங்களில் கடை போடுவதால் விற்பனை பாதிக்கப்பட்டு தொழிலை விட்டே சொல்லுமளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.ஆண்டுதோறும் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.பேரூராட்சியில் முறையான அனுமதி பெற்று, ஜி.எஸ்.டி. பில் போட்டு கடை நடத்தினால் அவர்களும் வியாபாரி என்ற முறையில் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.எனவே மண்டபங்களில் தற்காலிக கடை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது'என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் கடை அமைப்பதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- திருமூர்த்தி அணையில் இன்றைய நீர்மட்டம் 35. 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 603 கன அடியாக உள்ளது.
- உடுமலை அருகே உள்ள மற்றொரு அணையான அமராவதி அணை 90 அடி உயரம் கொள்ளளவு கொண்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி., தொகுப்பு அணைகளின் கடைசியாக உள்ள இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
5 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் உடுமலை நகரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன.
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக கான்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.
திருமூர்த்தி அணையில் இன்றைய நீர்மட்டம் 35. 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 603 கன அடியாக உள்ளது. பிரதான கால்வாயில் 417 கன அடி, கால்வாயில் 65 கன அடி , நல்லாற்றில் 50 கன அடி, குடிநீருக்கு 21 கன அடி என மொத்தம் 555 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் உடுமலை அருகே உள்ள மற்றொரு அணையான அமராவதி அணை 90 அடி உயரம் கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதேபோல கல்லாபுரம்- ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2000 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகின்றன.
தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும். அமராவதி அணை நீர்பாசன வசதி பெற மட்டுமின்றி கரூர் வரையிலான அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் தேவை ஆகியவற்றையும் நிறைவேற்றி வருகிறது. இந்த அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அமராவதி அணையில் இன்றைய நீர்மட்டம் 61.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 86 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், திருமூர்த்தி- அமராவதி அணைகள் நிரம்பவில்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தான் அணைகள் நிரம்பும். எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
- காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- ரூ. 62.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி தற்போது 36 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
காங்கயம்,அக்.22-
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு முத்தூா் - காங்கயம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொடுமுடியில் தலைமை நீரேற்று நிலையம், அருகில் இச்சிப்பாளையம் சுத்திகரிப்பு நிலையம், அடுத்து திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் மேட்டுக்கடை, வாலிபனங்காடு, பச்சாபாளையம் நீருந்து நிலையங்கள், காங்கயம் அய்யாசாமி நகா் காலனி நீா் விஸ்தரிப்பு நிலையம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
1998 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, 2013 ல் விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டம் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் மற்றும் 1,790 ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு தினசரி 40.45 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட வேண்டும். 25 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள இத்திட்ட கான்கிரீட் குழாய்களில் தொடா்ந்து நீா்க்கசிவு ஏற்படுவதால் நிா்ணயிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை.
இதையடுத்து ரூ. 62.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி தற்போது 36 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இப்பணிகளின் அனைத்து நிலைகளையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டாா்.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் செல்லமுத்து, மேற்பாா்வைப் பொறியாளா் மதியழகன், நிா்வாகப் பொறியாளா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
- ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். டெண்டர் முறையில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.35-க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் 63 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 2 ஆயிரத்து 52 தேங்காய்களும், 21 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.1.40-ம், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.6.85-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 4 டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 65-க்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.
- ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
- எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
திருப்பூர்,அக்.22-
ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நிலையில் ஏற்றுமதியாா்கள் செலுத்தும் வரியின் செலவை ஈடுகட்டும் வகையிலும் டியூட்டி டிராபேக் போன்ற சலுகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏற்றுமதி வா்த்தகத்தில் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும், ஏற்றுமதியான சரக்குக்கு சுங்கத் துறை டியூட்டி டிராபேக் வழங்கி வருகிறது. இந்நிலையில், பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி வழங்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோா் வலியுறுத்தி வந்தனா். இதனிடையே, ஏற்றுமதி செய்யப்படும் காட்டன் டி-சா்ட்டுகளுக்கு 2.1 சதவீதமாக இருந்த டியூட்டி டிராபேக்கை தற்போது 3.1 சதவீதமாகவும், செயற்கை நூலிழை ஆடை டி-சா்ட்டுகளுக்கு 3 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகளுக்கு 2.1 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும் டிராபேக் சலுகையை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் அக்டோபா் 30 -ந்தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு திருப்பூா் ஏற்றுமதியாளா்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. இதன் மூலமாக சா்வதேச சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளிக்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பாக அமையும்.
இதற்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ஜவுளித் துறை செயலாளா் ரக்ஷனா சா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றாா்.
- நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.
- வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கிறிஸ்டின் ராஜ் (வயது 27). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென்று அவரை வழிமறித்து பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அதில் ஒருவர் கத்தியை எடுத்து கிறிஸ்டின் ராஜன் கழுத்தில் காயப்படுத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து வீரபாண்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவிடம் கிறிஸ்டின் ராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்போர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 19), சூர்யா (19) மற்றும் கவுதம் (22) என்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டின் ராஜை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு கத்தியால் காயப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திமுக., அரசு செயல்பட்டு வருகிறது.
- பாஜக தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திருப்பூர்,அக்.22-
இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஜனநாயகத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திமுக., அரசு செயல்பட்டு வருகிறது. அரசும், அரசு ஊழியா்களும், ஆளும்கட்சியும் சா்வாதிகார மனப்பான்மையில் செயல்படுகின்றனா். பாஜக., மாநிலத்தலைவா் அண்ணாமலை வீட்டின் முன்பாக நிறுவப்பட்ட கொடிக் கம்பம் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளது. இதனை எதிா்த்து ஜனநாயக ரீதியில் போராடிய பாஜக., நிா்வாகிகள், தொண்டா்கள் என 110 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். என் மண், எண் மக்கள் நடைப்பயணத்தின் இணை அமைப்பாளா் அமா்பிரசாத் ரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். பாஜக தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ளவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
- திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- .இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர்-வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் மஞ்சள், நீல நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டை, காப்பி நிற பேண்ட் அணிந்துள்ளார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- காயமடைந்த 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- நிர்மல் தாஸ் (வயது 28), பிரஞ்சநாதன் தாஸ் (26), சூர்யா (24), ரஞ்சன் தாஸ் (25) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ள நூல் மில்லில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த நிர்மல் தாஸ் (வயது 28), பிரஞ்சநாதன் தாஸ் (26), சூர்யா (24), ரஞ்சன் தாஸ் (25) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓலப்பாளையம் அருகே உள்ள ஒரு நூல் மில்லில் இவர்கள் நான்கு பேரும் வேலை செய்து வந்ததாகவும், அப்போது மில்லின் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடிக்கடி மில்லில் இருந்து பணம் மற்றும் மின் மோட்டார்கள் காணாமல் போவதாக கூறி, இந்த 4 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர். சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- டாக்டர்.பாலமுரளி,டாக்டர்.பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
இந்திய மருத்துவ சங்கம், திருப்பூர் டெக்ஸ் சிட்டி கிளை, திருப்பூர் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போலீசாருக்கான மருத்துவ முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் பல்லடம் வனாலயத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் டெக்ஸ் சிட்டி கிளை தலைவர் டாக்டர் ஏஜாஸ் அன்சாரி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா,மருத்துவ சங்கப் பொருளாளர் டாக்டர். சுந்தரமூர்த்தி, மருத்துவ சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் இந்த பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில்:- எங்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும் முதலில் அழைப்பது போலீசாரைத்தான். எனவே போலீசார் முறையான முதலுதவி சிகிச்சையை தெரிந்து வைத்துக் கொண்டால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். அதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் முறை, அவர்களுக்கு அளிக்க வேண்டிய உடனடி முதலுதவி சிகிச்சை ஆகியவற்றை, இது குறித்து பயிற்சி பெற்ற போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தால், பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்பு எளிதில் குணம் அடைய வாய்ப்புகள் அதிகம்.
எனவே போலீசார் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சியை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த பயிற்சி முகாமில் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கத்தை செய்து கான்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரண தருவாயில் உள்ளவரை காப்பாற்றுவது, பெரிய விபத்துக்களில் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது,பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் முதலுதவி சிகிச்சை பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், டாக்டர்.பாலமுரளி,டாக்டர்.பிரபலதா மற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
- 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர்.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. திருப்பூர் சகோதயா கூட்டமைப்பில் உள்ள 23-க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருந்து 250-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் வர்ணிகாஸ்ரீ, மகிமிதா ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் ஐஸ்வர்ய லட்சுமி, ஸ்வேதா ஜோடி முதலிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரித்விக் முதலிடம் பெற்றார். 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் கவுஷிக் குகன் 2-ம் இடம் பெற்றார்.
முன்னதாக தொடக்க விழாவுக்கு ஏ.வி.பி.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் ஜி.பவன்குமார், திருப்பூர் யூரோலைன் ஏற்றுமதி நிறுவன மேலாண்மை இயக்குனர் மெய்நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி, பொருளாளர் லதாகார்த்திகேயன், முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா, பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ, ஸ்ரீமுருகன் நிட்ஸ் ஏற்றுமதி நிறுவன தலைவரும் முன்னாள் திருப்பூர் மாமன்ற உறுப்பினருமான பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். உடற்கல்வி ஆசிரியர் ஞானசுந்தரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






