என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
    • தேசிய அடையாள அட்டை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தததாவது, தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

    அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் 31824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் தனித்துவம் வாய்ந்த 19439 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வங்கி பங்களிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது.

    மன வளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின்கீழ் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்டு செல்போன் வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது பிரிவு திட்டத்தின்கீழ், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் குறைகண் பார்வையுடைய மாணவ, மாணவியர்களுக்கு எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
    • மத்திய அரசு நடைமுறையில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொரடாச்சேரி வட்டாரக்கிளை நிர்வாகிகள் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஈவேரா சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மேனாள் மாநில செயற்குழு உறுப்பினர் வீரசேகரன், மேனாள் நற்பணி தலைவர் அறிவழகன், வட்டாரத் செயலாளர் தேர்தல் ஆணையர் வேதமூர்த்தி, வட்டாரச் செயலாளராக சந்திரமோகன், வட்டாரப் பொருளாளர் யசோதா, வட்டார மகளிர் வலையமைப்பு தலைவர் கார்த்திகாராணி, செயலாளர் யோகப்பிரியா, பொருளாளர் மாலதி ஆகியோர் உரையாற்றினர்.

    கூட்டத்தில் வட்டார துணைத் தலைவர்கள் ஜெய்சங்கர், சாந்தி, துணைச் செயலாளர்கள் மார்க்ரெட் ஹேமலதா, தனலட்சுமி, அகஸ்டின் மகளிர் வலையமைப்பு துணைத்தலைவர்கள் சுபா, லட்சுமி, துணைச் செயலாளர்கள் தமிழ்ப்பிரியா, நல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். அகவிலைப் படியை உடனே வழங்க வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதி்யம் வழங்குவதற்கு தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

    மத்திய அரசு நடைமுறையில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 75 கிலோ புகையிலை ெபாருட்கள் கடத்திவந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து . திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில் 75 கிலோ புகையிலை ெபாருட்கள் கடத்திவந்தது தெரியவந்தது. பின்னர் வாகனங்களில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த முகமது அப்துல் ஹாதர் (வயது63), அவரது மகன் சையது இப்ராஹிம் (37), அகமுடையார் தெருவை சேர்ந்த சரவணன் (39) ஆகியோர் என்பதும், புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்த 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
    • சில பஸ்கள் காலை நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அரசு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகிறது.

    இங்கு கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

    அனைத்து வழித்தடங்களில் இருந்தும் நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    சில நேரங்களில் ஒரு சில வழித்தடங்களில் அதுவும் இயக்கப்படுவதில்லை.

    அதிலும், கூட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மனவெளி, சேங்கனூர், அச்சுதமங்கலம், வடக்குடி ஆகிய நிறுத்தங்களில் சில பஸ்கள் காலை நேரங்களில் நிற்காமல் செல்வதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    இதனால், மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து காலை- மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கராத்தே கலர் பெல்ட் தேர்வு செய்யும் பயிற்சி.
    • தேர்வான மாணவர்களுக்கு கலர் பெல்ட் வழங்கல்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கராத்தே கலர் பெல்ட் தேர்வு செய்யும் பயிற்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பயிற்சியின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் திருஞானம் தலைமையில் நடைபெற்றது.

    இதில், மன்னார்குடி இஷின்ரியு கராத்தே தலைமை பயிற்சியாளர் கியோஷி ராஜகோபால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கலர் பெல்ட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டர்கள் பழனிச்சாமி, சென்சாய் மீனாட்சி சுந்தரம், இனியன், நிகன் அபிராஜ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவமழை எதிர்பார்ப்பை பொறுத்து அமைகிறது.
    • தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதி விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பகுதியாகும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டி, பெருநகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.

    தொழில் கல்வி பயின்றவர்கள் தொழில்கள் மேற்கொள்ளும் முனையும் போது, போதுமான இட வசதிகள், அரசின் சலுகைகள், தொழில் செய்வதற்கான உரிமங்கள் பெறுவதில், தொழில் கூடங்கள் அமைப்பதில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

    விவசாயம் என்பது நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவ மழை எதிர்பார்ப்பைப் பொறுத்து அமைகிறது.

    இப்பகுதி மக்களின் வருமானம் இயற்கை சூழலை ஒத்து அமைந்துள்ளதால், விவசாயம் இல்லாமல் பிற தொழில் மேற்கொள்வதற்கு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் தொழில் கூடங்கள் அமைத்தால் சிறுகுறு தொழில் முனைவோர் பயன்பெறுவதற்கும், தொழில் மேற்கொள்வதற்கும், ஏதுவாக அமையும் என்று கருதுகின்றனர்.

    எனவே, விளைநிலங்கள் பாதிப்பில்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், சிறுகுரு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும் என்று தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நன்னிலம் பகுதியில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
    • விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தை குறித்து பட்டய கல்வி பயில வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரம், விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட பகுதியாகும்.

    நன்னிலம் பகுதியில், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள பகுதியாகும்.

    இங்கு விவசாயத்தை பின்னணியாக கொண்ட பொருளாதாரம் தான் உள்ளது. சிறு தொழில் கூடங்களும் கிடையாது.

    இந்நிலையில், விவசாயிகளின் பிள்ளைகள், தங்கள் குடும்பங்கள் மேற்கொண்டு வரும் விவசாயப் பணியினை, தாங்கள் தொடரும் நிலையில், அது குறித்த கல்விகளை கற்பதற்கு, நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கடினமாக உள்ளது.

    விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தைக் குறித்து பட்டய கல்வி பயில்வதற்கு, வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில், விரிவாக்க கல்வி மையம் நன்னிலம் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை, விவசாய பெருமக்களிடம் இருந்து வருகிறது.

    எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், விவசாய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள், விவசாயக் கல்வியை கற்கும் வகையிலும், நன்னிலம் வட்டாரத்தில், வேளாண் கல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தினார்.
    • மாணவ- மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தரணி வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ.பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தாளாளர் விஜயலெட் சுமி காமராஜ் தலைமை தாங்கினார்.

    பள்ளி நிர்வாகி இளை யராஜா முன்னிலை வகித்தார். சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சாந்த செல்வி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர் மாயக்கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.

    மேலும் பள்ளி மாணவர்களை வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வும், தன்னார்வதிறனை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்.

    இதில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.முடிவில் மெட்ரிக்பள்ளி முதல்வர் அருள் நன்றி கூறினார்.

    • கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.
    • தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேரவை கூட்டம் கொரடாச்–சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார்.

    பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது,

    தஞ்சாவூர் முதல் நாகை வரையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணி நீண்ட வருடங்களுக்கு பின் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனாலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி மற்றும் பல நகரங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. மேலும் தற்போது பெய்த மழையில் பல இடங்களில் சாலை சீர் குலைந்து, குண்டும், குழியுமாக மாறி அபாயகரமான சாலையாக காட்சியளிக்கிறது. தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    ஆகவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி திருவாரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து மேற்கோண்டு மக்கள் பயன்பாட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா மையத்தை எஸ்பி திறந்து வைத்தார் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகமும், வர்த்தக சங்கமும் இணைந்து நகரம் முழுவதும் 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் வரவேற்றார்.

    மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் , வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண்காணிப்பு மையத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்து பேசும்போது :-

    நகர சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

    திருத்துறைப்பூண்டியில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் நிறுத்து வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது .இதில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் இரண்டாகப் பிரிப்பதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நகராட்சி நியாயமான குழு உறுப்பினர் பாண்டியன், ஆணையர் அப்துல் ஹரிஷ், நகராட்சி பொறியாளர் பிரதன் பாபு ,நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வீரசேகரன் , இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • மைதானத்தில் தரம் வாய்ந்த ஓடுதளங்கள், ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும்.
    • மைதானத்தில் பயிற்சி பெற்ற பலர் ராணுவ பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாரத்தில், பழமை வாய்ந்த கல்வி நிறுவனம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகும்.

    இந்த பள்ளி நூற்றாண்டு விழாவை கண்ட பள்ளி ஆகும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருக்கும் பொழுது, விளையாட்டு துறையில் மாவட்ட அளவில் பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் செய்துள்ளது.

    திருவாரூர் மாவட்டத்திலேயே அரசு பள்ளிகளில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியில் தேசிய அளவிலான போட்டிகளில் நடத்தக்கூடிய வகையில், தரம் வாய்ந்த ஓடுதளங்கள், ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இரவு பகல் நேரங்களில் விளையாட்டுப் போட்டியில் நடத்தப்படக் கூடிய வகையில் மின்னொளி வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

    மேலும் விளையாட்டு மைதானம் அனைத்து வகையான வசதிகளும் கொண்ட, விளையாட்டு வீரர்கள் சிறப்பான பயிற்சியை பெறக் கூடிய வகையில், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தரப்பட வேண்டும்.

    நன்னிலம் பகுதியில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் இவ் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று காவல்துறையிலும் ராணுவத்திலும் பணியில் சேர்ந்துபணியாற்றி வருகிறார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் கொண்ட விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையை விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆந்தை பந்தல் அமைத்து எலிகளை இரவு நேரங்களில் கட்டுப்படுத்தலாம்.
    • உளுந்து விதை போன்றவை பற்றிய மானிய விவரங்களை கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் ஆதனூர் கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    பயிற்சியில் விதை சான்று துறை, விதை சான்று அலுவலர் அசோக் கலந்து கொண்டு பேசுகையில், விதை தேர்வு, வயல் பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப் பின் விதையின் ஈரப்பத அளவு போன்றவை பற்றியும் தரமான விதைகளை உற்பத்தி செய்வது குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    மேலும் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பதிவு செய்தல் பற்றியும் மற்றும் விதைகளின் நிலைகள் பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு விளக்கினார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் பேசுகையில், நடப்பு சம்பா தாளடி பருவத்தில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் அதன் மேலாண்மை பற்றியும் மற்றும் எலி ஒழிப்பு மேலாண்மை பறவைக்குடில் ஆந்தை பந்தல் அமைத்து எலிகளை இரவு நேரங்களில் கட்டுப்படுத்தலாம் என்றும் ப்ரோமோ டைலான் மருந்தினை பயன்படுத்தி எலிகளை கட்டுப்படுத்தலாம் என்றும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி ஆத்மா திட்ட செயல்பாடுகள் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் ரவி பேசுகையில், வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பில் உள்ள உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள், உளுந்து விதை போன்றவை பற்றிய மானிய விவரங்களை கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    பயிற்சியில் உதவி விதை அலுவலர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அகல்யா மற்றும் ஆதனூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ் செய்திருந்தார்.

    ×