என் மலர்
திருவாரூர்
- தற்போது அரசு நெல்லிற்கு பிறகு பருத்தி, காய்கறி மற்றும் தானிய பயிர்களை சாகுபடி செய்ய கூறி வருகிறது.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடைகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி மட்டுமே பிரதானமாக உள்ளது. நெல்லுக்கு பிறகு உளுந்து, பச்சைபயிறு, பசலி, துவரம்பருப்பு போன்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த சாகுபடி குறைந்துவிட்டது.
இதனால் விவசாயத்தில் கிடைக்கும் உபரி வருமா னங்களும் குறைந்துவிட்டது.
இதற்கு காரணம் கட்டுப்பாடு இல்லாமல் ஆடு, மாடுகள் சாகுபடி நிலங்களில் மேய்வது தான். தற்போது அரசு நெல்லிற்கு பிறகு பருத்தி, காய்கறி மற்றும் தானிய பயிர்களை சாகுபடி செய்ய கூறி வருகிறது.
இதுபோன்ற நல்ல வேளாண் திட்டங்களை செயல்படுத்தி விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடைகளை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி. எனவே அரசு முன்பு செயல்படுத்திய கால்நடை பட்டிகளை மீண்டும் வருவாய்துறை கட்டுப்பாட்டில் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- வருகிற 5-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதம்.
திருவாரூர்:
ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பழைய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு புதிய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் நியமன முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
அகவிலைப்படி மத்திய அரசு வழங்கிய அதே தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.
இவை அனைத்தும் தமிழக பட்ஜெட்டில் தமிழக முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற மார்ச் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
- இந்த ஆண்டு 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
- தாளடி சாகுபடியில் மட்டும் 2.70 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு 1.50 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி பணியிலும் அதேபோன்று 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே குறுவை நெல் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 2022 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இதுவரை 4.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முது நிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் மட்டும் 2.70 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிக ளிடமிருந்து அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்யப்பட்ட வருவதாக தெரிவித்தார்.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு யாரேனும் ஊழியர்கள் கையூட்டு பெற்றால் அது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
- சமுதாய வளர்ச்சிக்கான இளையோர் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.
- பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்.
திருவாரூர்:
திருவாரூரில் தலைமைத்தும் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான இளையோர் பயிற்சி கடந்த 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற்றது. இப்பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழினையும், விளையாட்டுக் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்வில், நேரு யுவ கேந்தராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் ராஜகுமார், பொருளாளர் பாலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 500-க்கும் மேற்பட்டோ பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்தனர்.
- இரவு முழுவதும் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனை பிரார்த்தித்து சென்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆதிரங்கம்சேகல் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், பெரியதம்பிரான்இருளன் , பெரியநாயகி ஆகிய காவல் தெய்வங்களுக்கு மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மருளாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பால்குட ங்கள் எடுத்தனர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி மேளதாளத்துடன் பால்குடம் புறப்பட்டு கோவிலின் தீர்த்த குளத்தை வளம் வந்து கருவறையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவடைய வேண்டி இரவு முழுவதும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனை பிரார்த்தித்து சென்றனர்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் மருளாளிகள் அறக்கட்ட ளை சார்பில் தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
- மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால், குளங்களில் வெங்காய தாமரைகளைச்செடி ஆக்கிரமித்து நீர்நிலைகளையும், மீன்வளத்தையும், சுற்றுசூழலையும் பெருமளவில் பாதிக்கிறது. முன்பு கழிவு நீரில் மட்டுமே வளர்ந்த இந்த செடிகள்.
தற்போது ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
இதனால் பாசன மதகுகளில் அடைத்துக்கொண்டு பாசனத்திற்கு பெரிய இடையூராக உள்ளது.
நீர் நிலைகளை இடைவெளி இல்லாமல் மூடிவிடுவதால் ஆக்ஸிஜன் குறைந்து நன்னீர் மீன் இனங்கள் உட்பட அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, கோடைகாலங்களில் மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாமல் நீரை ஆவியாக்கிவிடுகிறது.
எனவே மாவட்ட அளவில் வெங்காய தாமரை அகற்றும் பணியை மக்கள் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
ஒரு செடி கிடந்தாலும் மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.
இச்செடிகளை ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்படும் நுண்ணுரம் தயாரிப்பு மையங்கள் மூலமும், அல்லது நிழலான பகுதிகளில் மூடாக்கு அமைத்து பஞ்சகவ்யா மூலம் எளிதாக மக்க வைத்து விவசாயிகளுக்கு வழங்க முடியும். எனவே தனி கவனம் எடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன்.
- மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன.
திருவாரூர்:
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியில், சிவனை வழிபட்டால், ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதைத்தொடர்ந்து, திருவாரூரில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றன.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில், விடங்கர், மூலவர் வன்மீகநாதர், அசலேஸ்வரர், விஸ்வகர்மேஸ்வரர், இந்திரன் பூஜீத்த லிங்கம், கமலாம்பாள், சப்தமாதர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷகமும், தீபாரதனையும் நடைப்பெற்றன.
பிரதோஷம் முடித்தவுடன் முதல் கால பூஜைகள் நடந்தேறின.
பின்னர், இரவு 11 மணியளவில் 2 ஆம் கால பூஜையும் நடைபெற்றன.
மேலும், கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீகமல முனி சித்தர் லிங்கத்துக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவாரூர் பகுதியில் உள்ள அனைத்து சிவத்தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
- முத்துப்பேட்டையில் திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
- விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் வருகை தந்தார்.
பின்னர் வருடாவருடம் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவா னோடை சிவன்கோவில், பின்னர் ஊர்வலம் செல்லும் பாதையான தர்கா, சிவராமன் ஸ்தூபி, பதற்றம் நிறைந்த ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், புது பள்ளிவாசல், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலை, செம்படவன்காடு, சிலை கரைக்கும் பாமணி ஆற்று படித்துறை ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் லகூன் செல்லும் பாதை, மற்றும் படகுத்துறை ஆகியவைகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் வந்து அங்கு ஆய்வு செய்து அங்கிருந்த கோப்புகளையும் ஆய்வு நடத்தினார்.
அப்போது தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜெயசந்திரன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ேமாட்டார் சைக்கிளில் கிராம நிர்வாக அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறியதில் கீழே விழுந்தில் ஜெயபால் பலத்த காயம் அடைந்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 58) .
விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்காடு கிராம நிர்வாக அலுவலகம் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலகம் அருகே சற்றுதூரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறியதில் கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ஜெயபால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சை க்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபால் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் சதிஷ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- 50 நாட்களுக்கு ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.
திருவாரூர்:
தஞ்சாவூா்,திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடு துறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது . இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு:-
ஓட்டுநருக்கு உண்டான கல்வித் தகுதி ,பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.
தேர்வு முறையானது எழுத்து தேர்வு , தொழில்நுட்ப தேர்வு , மனிதவளத்துறை நேர்காணல் , கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு ,சாலை விதிகளுக்கான தேர்வு அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மருத்துவ உதவியாளரு க்கான தகுதிகள் பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் பிஎஸ்சி ஜுவாலஜி, பாட்னி பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் .
மாதம் ஊதியம் ரூ.15,435(மொத்த ஊதியம்) . நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு , மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை , மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு.
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் . மேலும் விவரங்களுக்கு 7397701801 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
இங்குள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரி ஒன்று வந்தது. லாரியை திருத்துறைப்பூண்டி உப்பூக்கார தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 53) ஓட்டி வந்தார்.
கொள்முதல் நிலையத்தில் லாரியை நிறுத்திவிட்டு தான் ஏற்றி வந்த சாக்குகளை இறக்க லாரியின் பின்பகுதி கதவை சுப்பிரமணியன் திறந்து விட்டார்.
அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.
- பெண்ணின் சொந்த ஊரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் சேர்ப்பேன்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த திருமக்கோட்டை பள்ளிவாசல் அருகில் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட தேவிஸ்ரீ (வயது 45) என்ற வடமாநில பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.
இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரைபடி, திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பக மீட்பு குழுவினர் இயக்குனர் சவுந்தர்ராஜன், சமூக பணியாளர் சக்தி பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரவணன், உதவியாளர் ஜெய்சரண் ஆகியோர் அப்பகுதிக்கு நேரடியாக சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர்.
அப்போது மாவட்ட கவுன்சிலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனேசன், தன்னார்வலர் அகமது ஆகியோர் சென்றனர்.
பின்னர், திருமக்கோட்டை போலீஸ் நிலையத்தில் உரிய பதிவு பெற்று, மாவட்ட மனநல மருத்துவர் புவனேஸ்வரியை சந்தித்து பரிசோதனை செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில்:-
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உணவு அளித்து மனநல சிகிச்சை கொடுத்து பெண்ணின் சொந்த ஊரை போலீசார் உதவியுடன் கண்டுபிடித்து அவரது குடும்பத்துடன் சேர்ப்பதே லட்சியம் என்றார்.






