என் மலர்
திருநெல்வேலி
- அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். எச்.எம்.எஸ். மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. நெல்லை பொதுச் செயலாளர் உலகநாதன், டி.டி.எஸ். மாநில துணைத்தலைவர் சந்தானம், ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் மகாராஜன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும்போது அனைத்து பண பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி இறுதிப்படுத்த வேண்டும். சேவை துறையாக செயல்படும் போக்குவரத்து கழகங்களின், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் என்கிற திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செயல்படுத்தி வருகிறார்.
- இனிவரும் நாட்களில் நடைபெறும் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் என்கிற திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செயல்படுத்தி வருகிறார்.
2-ம் கட்டம்
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வாரியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தொகுதி மக்களுடன் அவர் தங்கி, அவர்களுடன் உணவருந்தி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்து கொடுத்து வருகிறார்.
இதுவரையில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
தற்போது, 2-ம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வருகிற டிசம்பர் முதல் வாரத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இட்டமொழியில் 2-ம் கட்டமாக மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
அதைத்தொடர்ந்து, தொகுதியில் உள்ள பிற இடங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.
இதுகுறித்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளருமான ரூபி மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
கிராமப்புறங்களை அதிகம் கொண்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதுமே நான் பயணித்துக் கொண்டிருந்தாலும், பொதுமக்களுடன் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இன்னும் நெருங்கிப் பழக, இந்தத் திட்டம் உதவுகிறது.
பொதுமக்கள் தங்கள் ஊரில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளை இந்த நிகழ்ச்சியின் போது மனுக்களாகத் தந்தால், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பொதுமக்கள் அனைவரும் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.
மேலும், இனிவரும் நாட்களில் நடைபெறும் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில், எங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் இட்டமொழியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும் அழைக்கின்றேன்.
இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
- தமிழகத்தில் திருக்குறள் பேச்சு போட்டிகள் மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
- நெல்லையில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில், மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழகத்தில் திருக்குறள் பேச்சு போட்டிகள் மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில், மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இடைநிலைப் பிரிவில் (6, 7, 8 ஆம் வகுப்புகள்) 76 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் (9, 10, 11, 12 ஆம் வகுப்புகள்) 32 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 2 மாணவர்களும் கலந்து கொண்ட நிலையில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்க 3 பேர் தேர்வாகி உள்ளனர்.
பேச்சுப் போட்டி தவிர மண்டல அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டியில் மொத்தம் 110 மாணவர்களும், ஓவியப் போட்டியில் மொத்தம் 111 மாணவர்களும் கலந்து கொண்டனர். ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் தாஸ் ஜெபக்குமார் தலைமை தாங்கினார். ராணி அண்ணா கலைக் கல்லூரியின் முதல்வர் மைதிலி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
- நெல்லை மாவட்டம் அலங்காரபேரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பாக மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பாக மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி நெல்லை மாவட்டம் அலங்காரபேரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தொடங்கி வைத்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் தன்னார்வ தொண்டர் ராஜேஷ்வரி வரவேற்றார். பகுதி பொறுப்பாளர்கள் கார்த்திக், செந்தில் குமார், சுசீலா ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் தன்னார்வ தொண்டர் துர்கா நன்றி கூறினார். கிராம உதயம் சார்பாக சிவந்திபட்டி, முத்தூர், அலங்கார பேரி மற்றும் சுற்று வட்டாரப் அனைத்து பகுதிகளிலும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
- முத்துசெல்வம் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவர் அடிக்கடி மது குடித்து விட்டு போதையில் இருந்து வந்ததால் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து முத்துசெல்வம் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனைதொடர்ந்து விரக்தி அடைந்த முத்துசெல்வம் வீட்டில் விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி அவரது மனைவி தங்கம் (42) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- நெல்லை மாநகர பகுதியில் பருவமழையை முன்னிட்டு அங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- டெங்கு தடுப்பு மற்றும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் பருவமழையை முன்னிட்டு அங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுரையின்படி உதவி பொறியாளர் வாசுதேவன் வழிகாட்டுதலின்படி டெங்கு தடுப்பு மற்றும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நிலவேம்பு கசாயம் போலீசாருக்கு வழங்கப்பட்டது. டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை டவுன் ரத வீதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள், டவுன் மார்க்கெட் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் காவலர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரை யாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பாளை மகாராஜா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
- இவரது மனைவி திலகவதி (66). இவர் சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
நெல்லை:
பாளை மகாராஜா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்.
சித்தா டாக்டர்
இவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி திலகவதி (66). இவர் சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
ரூ.30 ஆயிரம் திருட்டு
இவரது வீட்டில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து விடுப்பில் சென்றதால் வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்த சங்கர்( 34) என்பவர் கடந்த 3 நாட்களாக அவரது வீட்டிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவர்களது வீட்டில் சம்பவத்தன்று ரூ.30 ஆயிரம் பணம் திருட்டு போனது.
கைது
இது குறித்து திலகவதி ஐகிரவுண்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பணத்தை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குரூஸ் அலெக்சாண்டரை 5 பேர் கும்பல் தாக்கி பணம் மற்றும் 2 கார்களோடு அவரை கடத்தி சென்றனர்.
- காயத்ரி மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளை கிருஷ்ணாபுரம் செல்வலட்சுமி நகரை சேர்ந்தவர் குரூஸ் அலெக்சாண்டர் (வயது 44). நிதி நிறுவன அதிபர்.
இவரது மனைவி சென்னையில் உள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருவதால், குரூஸ் அலெக்சாண்டர் வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குரூஸ் அலெக்சாண்டரை 5 பேர் கும்பல் தாக்கி பணம் மற்றும் 2 கார்களோடு அவரை கடத்தி சென்றனர்.
பின்னர் அந்த கும்பல் அவரை தாக்கி ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூா் அருகே இறக்கி விட்டு கார்களை எடுத்துச்சென்றனர். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசில் அலெக்சாண்டர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் குரூஸ் அலெக்சாண்டர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை அண்ணாநகரை சேர்ந்த காயத்ரி (55) என்பவரிடம் தொழில் ரீதியாக சுமார் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி, பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை எனவும், இதனால் காயத்ரி தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் குரூஸ் அலெக்சாண்டரை தாக்கி காரில் கடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து காயத்ரி மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த கேரளாவை சேர்ந்த உமர், அப்துல், ஜியாவுதீன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களையும் கைது செய்ய தனிப்பட்டையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
- தேவர்குளத்தை அடுத்த மேல இலந்தைகுளம் பகுதியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.
- வெள்ளத்தின் நடுவே டிராக்டர் மூலமாக பொதுமக்கள் கரையின் இருபுறத்திற்கும் சென்று வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களின் எல்லை பகுதிகளாக அமைந்துள்ள மூவிருந்தாளி, சுண்டங்குறிச்சி, பன்னீர் ஊத்து மற்றும் தென்காசி- நெல்லை மாவட்ட எல்லை பகுதியான தேவர்குளம் பகுதியில் அமைந்துள்ள மேல இலந்தை குளம் மற்றும் அதன் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பின.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் ஒரு பகுதியாக தேவர்குளத்தை அடுத்த மேல இலந்தைகுளம் பகுதியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.
சங்கரன்கோவில், நெல்லை நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தரை பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தை நெல்லை ஆர்.டி.ஓ. ஷேக் அய்யூப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தற்போது இந்த வெள்ளத்தின் நடுவே டிராக்டர் மூலமாக பொதுமக்கள் கரையின் இருபுறத்திற்கும் சென்று வருகின்றனர். லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமே தற்போது இந்த வழியாக செல்ல முடிகிறது.
இந்த பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி முதல் கடுமையான வெள்ளப்பெருக்கு இருந்து வருவதாகவும், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிதாக பாலம் கட்டுவதற்காக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
- குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.
- வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தத நிலையில் நெல்லையை அடுத்துள்ள மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள குளம் நிறைந்து கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து வீடுகளில் உள்ள பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.
தொடர்ந்து அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில் மணல் மூடைகள் வைத்து அடைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்பகுதியில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.
மழையால் சங்கரன்கோவில் டவுன் பகுதியில் ஒரு வீடும், தாலுகா பகுதியில் 2 வீடுகள் என மொத்தம் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. ஓட்டு வீடுகள் என்பதால் தொடர்ந்து பெய்த மழையால் சுவர் நனைந்து இடிந்துள்ளது. ஏற்கனவே வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அதேபோல் அங்குள்ள அய்யாபுரம் சாய மலை வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா பகுதிகளில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் அங்கு விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மட்டுமல்லாது வயல்வெளிகளிலும் மழைநீர் தேங்கியது.
- நெல்லை மாநகர பகுதியில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
நெல்லை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலை பல்வேறு இடங்களிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு 9 மணியளவில் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பை, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை கொட்டியது.
விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மட்டுமல்லாது வயல்வெளிகளிலும் மழைநீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 50 மில்லி மீட்டரும், அம்பையில் 41 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 34 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் நம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நம்பி கோவில் செல்லவும், குளிக்கவும் அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக இரவு பணிக்கு செல்பவர்களும், வீட்டுக்கு திரும்பியவர்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். மாநகரில் நெல்லை, பாளை நகரங்களில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது.
பழைய பேட்டையில் தொடங்கி டவுன், ஸ்ரீபுரம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பாளை, புதிய பஸ் நிலையம், சமாதானபுரம், கே.டி.சி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. மேலப்பாளையம் பகுதியில் தாழ்வான தெருக்களுக்குள் புகுந்த மழைநீர் வெளியேற வழி இல்லாமல் இருப்பதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 790 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று 104.45 அடியாக இருந்த நிலையில் இன்று 105.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 117.62 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 528 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறில் 39.4 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 24 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய கனமழை இன்று காலை வரையிலும் பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளில் விடிய விடிய இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் கடையநல்லூர், ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களிலும் தண்ணீர் தேங்கியது.
சாம்பவர் வடகரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 12 மணி நேரம் பெய்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அங்கு இடி-மின்னலுடன் பெய்த மழையால் சுமார் 70-க்கும் மேற்பட்ட டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் 3 மரங்கள் முறிந்து விழுந்தன.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. கருப்பாநதி அணை பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கடனா அணையில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 50.80 மில்லிமீட்டரும் கொட்டியுள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. கடனா மற்றும் ராமநதி அணைகள் நீர்மட்டம் 77 அடியாகவும், அடவிநயினார் அணை 111 அடியாகவும் உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் குலசேகரபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய கனமழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வயல்வெளிகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தூத்துக்குடி மாநகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது, இதனால் நகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோடு, ரெயில்வே நிலையம் செல்லும் சாலை, ரெயில்வே தண்டவாளம், ரெயில்வே பணிமனை, வ.உ.சி.சாலை, ஜார்ஜ் ரோடு, பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, சுற்றுலா மாளிகை, சிவந்தாகுளம், லெவிஞ்சிபுரம், முத்தையாபுரம், ஸ்பிக் நகர் முள்ளக்காடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளான காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளான மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, சிறுநாடார் குடியிருப்பு, தண்டுபத்து, ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதியில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. அதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாகவும், கனமழை எச்சரிக்கை இருப்பதாலும் 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் பிறிதொரு நாளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- நெல்லை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் தி.மு.க. நிர்வாகி ஒருவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
- கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் தி.மு.க. நிர்வாகி ஒருவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமை கழகம் சார்பில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மத்திய மாவட்டம் நெல்லை மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ், 20-வது வார்டு கவுன்சிலர் மன்சூர், 24-வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர் மற்றும் 7-வது வார்டை சேர்ந்த மாநகர தி.மு.க. பிரதிநிதி மணி என்ற சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருந்தது. அந்த கூட்டத்திற்கு மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் வரவில்லை என கூறி தற்போது நீக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர்கள் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






