என் மலர்
திருநெல்வேலி
- டேக்வாண்டோ போட்டியில் 14 வயது பிரிவில் ஹர்ஷன் தங்கப்பதக்கம் வென்றார்.
- 19 வயது பிரிவில் விஷ்வா, முகேஷ். கரண் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
சிங்கை:
நெல்லை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் டேக்வாண்டோ போட்டி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 7 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
டேக்வாண்டோ போட்டியில் 14 வயது பிரிவில் மாணவன் ஹர்ஷன் தங்கப்பதக்கமும், மாணவன் அடைக்கலம் வெள்ளி பதக்கமும் மற்றும் நிஷாந்த் ராபின் வெண்கல பதக்கமும், மாணவி பிரபா வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
17 வயது பிரிவில் மாணவர்கள் சிவகுமார், முத்துகுமார், கலையரசன் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.19 வயது பிரிவில் மாணவர்கள் விஷ்வா, முகேஷ். கரண் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.
டேக்வாண்டோவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் பயிற்சி அளித்த ஆசிரியர் ஆகியோரை பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனிமெட்டில்டா மற்றும் பள்ளி இயக்குனர் ஜோசப் லியாண்டர், முதல்வர் பொன்மதி, துணைமுதல்வர்கள் லெட்சுமி மற்றும் ஜாக்குலின் ஷீலா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பாராட்டினர்.
- வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்
- காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார்.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளார்.
இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர், இந்திராகாந்தி சிலை முன்பு 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு சேலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கட்சி அலுவலகம் வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மாநில இணைச்செயலாளர் கமலா கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டபோதும் எங்களை அவமதிக்கும் நோக்கில் மாநில தலைவரும், கிழக்கு மாவட்ட தலைவரும் ஈடுபட்டு வருகிறார்கள். பாராளுமன்ற தொகுதிக்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்று உள்ளது.
மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் எந்த ஒரு ஆலோசனைகளையும் பெறாமல் இதுபோன்ற சம்பவங்களில் கிழக்கு மாவட்ட தலைவர் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார்.
எனவே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
- 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 22-ந் தேதி இடி-மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று களக்காடு, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக களக்காட்டில் 13 மில்லிமீட்டரும், ராதாபுரம் மற்றும் நாங்குநேரியில் தலா 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 12 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த அணை நீர்மட்டம் 106.25 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.40 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 766 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்திற்காக 507 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74 அடியை எட்டியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக காலம் இருப்பதால் அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.
களக்காட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரத்தில் நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைகளை பொறுத்தவரை குண்டாறு, கருப்பாநதி அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை 76.80 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை 77 அடியாகவும் உயர்ந்துள்ளது.
குற்றாலத்தில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் அய்யப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக புதியம்புத்தூர் அருகே கவர்னகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவை பிஞ்சு பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகர பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடப்பதாக குடியிருப்பு வாசிகள் புகார் கூறி வருகின்றனர்.
உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை திடீரென கனமழை பெய்தது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்களது சைக்கிளில் ஊர்ந்தபடி சென்றனர். குலசேரகன்பட்டினம், மணப்பாடு, தேரியூர், செட்டியா பத்து, தாண்டவன்காடு, பரமன்குறிச்சி, பிச்சிவிளை, வேப்பங்காடு உள்ளிட்ட கிராமங்களில் காலை 8 மணி முதல் கனமழை பெய்தது.
- வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடக்கிறது.
- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் வாட்ஸ்-அப் குரூப்பில் நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் என்பவர் திசையன்விளை கூட்டத்திற்கு கே.எஸ். அழகிரி வரும்போது வெடிகுண்டு வெடிக்கும் என்று பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் உள்வாய் சாத்தான்குளத்தை சேர்ந்த நிர்வாகி அம்புரோஸ் என்பவர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
கூடுதலாக
20 சதவீத மழை
நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தற்போது நவம்பர் மாதத்தில் 21-ந்தேதி வரை 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும்.
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் அம்பை, சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி வட்டாரங்களில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 53.92 ஹெக்டேர் நிலங்கள் வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகி றது. அவர்களுக்கு நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன் கார் பருவத்தில் நெல் 870 ஹெக்டர் பரப்பிலும், கார் பருவத்தில் 3,131 ஹெக்டேர் பரப்பிலும், பிசான பருவத்தில் நெல் 37 ஹெக்டேர் பரப்பிலும், மக்காச்சோளம் 854, சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும் பயிறு வகைகள் 4275 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை 426 ஹெக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு
மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 154 விவசாயிகள் உளுந்து மற்றும் பாசிப்பயிறு ஆகியவற்றுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மக்காச்சோள பயிருக்கு இதுவரை 346 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் அடுத்த மாதம் 30-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த நிதி ஆண்டில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் தாமிரபரணி வடிநிலை உபகோட்டத்தின் கீழ் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், கண்ணடியன், கோடகன், பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் 48 கிலோமீட்டர் அளவு தூர்வாரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
முன்னதாக தோட்டக்க லை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 85 ஆயிரம் மானியத்தில் பவர் டில்லர்களை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார், தோட்டக்க லைத்துறை துணை இயக்குனர் இளங்கோ மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா கோலாகலத்துடன் நடந்தது.
- முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
களக்காடு:
களக்காட்டில் பிரசித்திப் பெற்ற சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியான முருகப்பெருமான் பட்டின பிரவேச விழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முருகப்பெரு மான் சிறப்பு அலங்கா ரத்தில் காட்சி அளித்தார்.
அதன்பின் முருகப்பெரு மான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ரதவீதிகளில் வீதி உலா வந்தார். சப்பரம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரதவீதிகளில் திரண்ட பக்தர்கள் முருகப்பெருமானுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.
- குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
- வீட்டின் பின் புறத்திலும், இடை முடுக்குகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டக்கூடாது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்படி மேலப்பா ளையம் மண்டலத்தில் தூய்மை பணி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு
மாநகராட்சி துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் பேரில் மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து மற்றும் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து தங்கள் வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மேலப்பாளையம் பகுதிகளில் குப்பைகளை வீட்டின் பின் புறத்திலும், இடை முடுக்குகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும், பொது இடங்களிலும் கொட்டக்கூடாது எனவும் மீறினால் மாநகராட்சி சார்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் அப்துல் வஹாப், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மணிகண்ட பூபதி, சொக்கலிங்கம் உட்பட வார்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- கார்த்திகா பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.
- முருகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் நடுத்தெருவை சார்ந்தவர் உய்க்காட்டான். இவரது மனைவி முருகம்மாள். இவர்கள் மகன் வேல்முருகன், மகள் கார்த்திகா (25).
ஊய்க்காட்டான் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணியின் போது இறந்ததால் அவரது மகன் வேல்முருகன் வாரிசு அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திகா பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஊரில் பள்ளி குழந்தை களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். அவருக்கு வேல்முருகன் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேல்முருகன் வேலைக்கு சென்ற நிலையில், அவரது தாய் முருகம்மாளும் அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கார்த்திகா தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் உடனடியாக நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கார்த்திகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விக்னேஷ் நேற்றிரவு வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
வள்ளியூர் பகுதியில் வசித்து வந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மகன் விக்னேஷ் (வயது 31).
இந்நிலையில் விக்னேஷ் நேற்றிரவு நெல்லையில் இருந்து வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பொன்னாக்குடி வெள்ள நீர் கால்வாய் புதிய பாலம் அருகே விக்னேஷ் சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர் பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த னர்.
தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக நெல்லை அரசு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மே லும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்ப டுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.
- காட்டில் நம்பாடுவானை வழிமறித்த பிரம்ம ராட்ஷசன் அவரை உண்ண போவதாக கூறி உள்ளான்.
- நம்பாடுவான் தான் பாடிய கைசிகம் என்ற பாட்டின் பலனை ராட்ஷசனுக்கு கொடுத்து அவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.
களக்காடு:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், கைசிக விருத்தாந்த தலமாகவும் திகழ்கிறது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை மாதம் நடைபெறும் கைசிக ஏகாதசி விழா முக்கியமானதாகும். முன் காலத்தில் கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி அன்று இரவில் நம்பாடுவான் என்பவர் நம்பி பெருமாளை கவி பாடி தரிசனம் செய்ய சென்ற போது, காட்டில் அவரை வழிமறித்த பிரம்ம ராட்ஷசன் அவரை உண்ண போவதாக கூறி உள்ளான்.
இதைக்கேட்ட நம்பாடுவான் நம்பியை நினைத்து விரதம் மேற்கொண்டுள்ளதால் நம்பியை தரிசனம் செய்த பின் உனக்கு இரையாக நான் தயார் என்று கூறினார். ராட்ஷசனும் நீண்ட நேரத்திற்கு பின் அவரை அனுப்பினான். நம்பாடுவான் நம்பியை தரிசனம் செய்த பின் காட்டிற்கு வந்து ராட்ஷசனிடம் இனி என்னை உணவாக்கிக் கொள் என்றார்.
அப்போது ராட்ஷசன் தனக்கு பசியில்லை என்று கூறினான். நம்பாடுவான் தான் பாடிய கைசிகம் என்ற பாட்டின் பலனை ராட்ஷசனுக்கு கொடுத்து அவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அந்த நாள்தான் கைசிக ஏகாதசி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு விழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு திருவாராதனம் நிகழ்ச்சிக்கு பிறகு இரவில் பெருமாள் வாகனத்தில் எழுந்தருளி கைசிக மண்டபத்திற்கு சென்றார்.
அதனைதொடர்ந்து டி.வி.எஸ். நிறுவன குழுமங்கள் சார்பில், நாட்டிய கலைஞர்கள் கைசிக புராண நாடகத்தை நடத்தினர்.இரவு விடிய, விடிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஜே.சி.பி. எந்திரம் மூலம் வடிகால் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேயர் பார்வையிட்டார்.
- சேதமான சாலைகளை செப்பனிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலப்பாளையம் 31-வது வார்டு மேல குலவணிகர்புரம், குறிச்சி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை மேயர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தற்காலிகமாக சிறு மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு மீண்டும் மழைநீர் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதைதொடர்ந்து 48-வதுவார்டு கருங்குளம் ராஜாஜி தெரு, மற்றும் ஜான்ஸ் ஹெலன் சிட்டி பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்திடவும், சேதமான சாலைகளை உடனடியாக செப்பனி டவும் சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, துணை கமிஷனர் தாணுமூர்த்தி, கவுன்சிலர் ஆமினாசாதிக், உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் முருகன், சுகாதார அலு வலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உடன் இருந்தனர்
- தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
- கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
நேற்று மழை சற்று குறைந்த நிலையில் நெல்லை, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை மழை முதல் பெய்து வருகிறது. இதேபோல் திசையன்விளை, பணகுடி, ராதாபுரம், நாங்குநேரி, நம்பியாறு உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதியிலும் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சூரன்குடியில் 80 மல்லிமீட்டர் மழை பதிவானது.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருந்து வகுப்புகள் நடத்த உகந்த சூழல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ, அல்லது சில இடங்களில் கனமழை பெய்தாலோ அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை அருகே உள்ள தேவர்குளம் சுற்றுவட்டார பகுதிகளான மேலஇலந்தைகுளம், சுண்டங்குறிச்சி, பன்னீரூத்து, மூவிருந்தாளி, அச்சம்பட்டி, புளியம்பட்டி மற்றும் தென்காசி மாவட்ட பகுதிகளான கரிசல்குளம், களப்பாலங்குளம், மேல நீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கோ.மருதப்பபுரம், பனவடலிசத்திரம், கீழநீலிதநல்லூர், நெடுங்குளம், கொக்குகுளம், சாயமலை, வலசை ஆகிய பகுதிகளில் தொடர்மழை காரணமாக பல்வேறு குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள பெரியகுளம் நிரம்பி மறுகால் சென்றது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அதிகமாக சென்றதால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள சுமார் 200 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. 6 வீடுகள் சேதமடைந்து உள்ளது. மேலும் பல்வேறு குளங்களில் இருந்து வெளியேறிய காட்டாற்று வெள்ளம் மேலஇலந்தைகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், டவுன், மேலப்பாளையம் குறிச்சி, பாளையங்கோட்டையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. லூர்தம்மாள்புரம், ஸ்டேட் வங்கி காலனி, கலைஞர் நகர், பால்பாண்டி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது.
திரு.வி.க. நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த பகுதியில் ஒரு சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. தண்டவாளம் மழைநீரில் மூழ்கி இருந்தது.
கயத்தாறு திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மக்காசோளப்பயிர் பயிரிட்டுள்ளனர். இங்கு பூ பூத்துள்ள தொடர் மழையில் மக்காசோளப்பயிர்களில் மழைநீர் இரண்டு அடி உயரம் தேங்கிய நிலையில் இப்பகுதியில் நேற்று மாலையில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் 250 ஏக்கர் மக்காச்சோளம், 50 ஏக்கர் உளுந்து பயிர் ஆகியவை நொடிந்து விழுந்தது.
கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகங்கள், மாநகராட்சி, நகராட்சி சார்பில் தேங்கிய இடங்களில் மழைநீரை அகற்றும் பணி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 844.155 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து 504.75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 143 கொள்ளளவு கொண்ட அணையில் இன்று 105.75 அடியாக உயர்ந்து உள்ளது. அதேபோல் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.35 அடியில் இருந்து நேற்று 73.45 அடியாவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.04 உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது. இதனால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிக்க திரண்டனர்.






