search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை குறைந்த நிலையிலும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    குற்றாலம் மெயினருவில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை குறைந்த நிலையிலும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
    • கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    நேற்று மழை சற்று குறைந்த நிலையில் நெல்லை, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை மழை முதல் பெய்து வருகிறது. இதேபோல் திசையன்விளை, பணகுடி, ராதாபுரம், நாங்குநேரி, நம்பியாறு உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதியிலும் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சூரன்குடியில் 80 மல்லிமீட்டர் மழை பதிவானது.

    இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருந்து வகுப்புகள் நடத்த உகந்த சூழல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ, அல்லது சில இடங்களில் கனமழை பெய்தாலோ அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை அருகே உள்ள தேவர்குளம் சுற்றுவட்டார பகுதிகளான மேலஇலந்தைகுளம், சுண்டங்குறிச்சி, பன்னீரூத்து, மூவிருந்தாளி, அச்சம்பட்டி, புளியம்பட்டி மற்றும் தென்காசி மாவட்ட பகுதிகளான கரிசல்குளம், களப்பாலங்குளம், மேல நீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கோ.மருதப்பபுரம், பனவடலிசத்திரம், கீழநீலிதநல்லூர், நெடுங்குளம், கொக்குகுளம், சாயமலை, வலசை ஆகிய பகுதிகளில் தொடர்மழை காரணமாக பல்வேறு குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள பெரியகுளம் நிரம்பி மறுகால் சென்றது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அதிகமாக சென்றதால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள சுமார் 200 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. 6 வீடுகள் சேதமடைந்து உள்ளது. மேலும் பல்வேறு குளங்களில் இருந்து வெளியேறிய காட்டாற்று வெள்ளம் மேலஇலந்தைகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், டவுன், மேலப்பாளையம் குறிச்சி, பாளையங்கோட்டையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. லூர்தம்மாள்புரம், ஸ்டேட் வங்கி காலனி, கலைஞர் நகர், பால்பாண்டி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது.

    திரு.வி.க. நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த பகுதியில் ஒரு சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. தண்டவாளம் மழைநீரில் மூழ்கி இருந்தது.

    கயத்தாறு திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மக்காசோளப்பயிர் பயிரிட்டுள்ளனர். இங்கு பூ பூத்துள்ள தொடர் மழையில் மக்காசோளப்பயிர்களில் மழைநீர் இரண்டு அடி உயரம் தேங்கிய நிலையில் இப்பகுதியில் நேற்று மாலையில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் 250 ஏக்கர் மக்காச்சோளம், 50 ஏக்கர் உளுந்து பயிர் ஆகியவை நொடிந்து விழுந்தது.

    கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகங்கள், மாநகராட்சி, நகராட்சி சார்பில் தேங்கிய இடங்களில் மழைநீரை அகற்றும் பணி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 844.155 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து 504.75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 143 கொள்ளளவு கொண்ட அணையில் இன்று 105.75 அடியாக உயர்ந்து உள்ளது. அதேபோல் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.35 அடியில் இருந்து நேற்று 73.45 அடியாவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.04 உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது. இதனால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிக்க திரண்டனர்.

    Next Story
    ×