என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை - திசையன்விளை இடையே என்ட் டு என்ட் பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது.
    • இந்நிலையில் வியாபாரிகள் சங்க பேரமைப்பின் திசையன்விளை சங்கத் தலைவர் சாந்தகுமார் தலைமையில், சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோரிடம் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை - திசையன்விளை இடையே என்ட் டு என்ட் என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது. இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடியது. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபட்டு வந்தனர்.

    எனவே மீண்டும் பழைய வழிதடத்தில் இயக்க வலியுறுத்தி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்து இருந்தனர். மேலும் பல்வேறு சமுக அமைப்புகள் சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சபாநாயகர் நடவடிக்கை

    இந்நிலையில் வியாபாரிகள் சங்க பேரமைப்பின் திசையன்விளை சங்கத் தலைவர் சாந்தகுமார் தலைமையில், சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோரிடம் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட நிர்வாக இயக்குனர் மோகனை தொடர்பு கொண்டு நெல்லை- திசையன்விளை இடைநில்லா பஸ்சை நான்குநேரி பஸ் நிலையம் செல்லாமல் புறவழி சாலை வழியான செல்லும்படி கூறினார். அவரது நடவடிக்கையால் இன்று (சனிக்கிழமை) காலை முதல் பஸ்கள் புறவழி சாலை வழியாக சென்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • ராமர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஆபிரகாமுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு செங்குளத்தை சேர்ந்தவர் ராமர் (வயது24). இவர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த ஆபிரகாமுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இளையாமுத்தூர் விலக்கு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் ராமர், ஆபிரகாம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.

    • நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.
    • அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    நெல்லை:

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நாளை இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் மதுரை ஸ்பார் டன்ஸ்கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடக்கிறது.

    கோவை அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணியில் கேப்டன் ஷாருக்கான், சுஜய், ராம் அரவிந்த், எம்.முகமது சித்தார்த், தாமரை கண்ணன், யுதீஸ்வரன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    கோவை அணியின் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன், முதல் தர போட்டிகளில் விளையாட இருப்பதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.

    மதுரை அணி 5 ஆட்டத் தில் 3 வெற்றி, 2 தோல்வி யுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே-ஆப் சுற்றை நெருங்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

    அந்த அணியில் கேப்டன் ஹரி நிஷாந்த், வாஷிங்டன் சுந்தர், கவுசிக், பி.சரவணன், முருகன் அஸ்வின், குர்ஜப்னீத்சிங், ஸ்வப்னில் சிங், அஜய் கிருஷ்ணா போன்ற வீரர்கள் உள்ளனர்.

    நெல்லையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க நாளைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற வேண்டியது முக்கியமாகும். அதன்பின் மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கில் ஜெகதீ சன், பாபா அபராஜித், சந்தோஷ் ஷிவ், பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் ரஹில் ஷா, ரோகித், ஹரீஷ் குமார், எம்.சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர்.

    திருச்சி அணி இதுவரை மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும்.

    • சுவாமி நடராஜபெருமான் திருவீதி உலா நடந்தது.
    • வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணம் பாடப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    7-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காந்திமதி அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தொடர்ந்து பல்லக்கு சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இரவில் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், காந்திமதி அம்பாள் காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியருக்கு சோடஷ உபசார தீபாராதனை நடந்தது.

    பின்னா் பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்சவாத்திய இசையில் மங்களவாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது.

    இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனா். தொடர்ந்து சுவாமி நடராஜபெருமான் திருவீதி உலா நடந்தது. கோவிலில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பாம்பே சாரதாவின் பத்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி கோலத்திலும், பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு தேர் கடாட்ச வீதி உலாவும், சுவாமி தங்ககைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை, படப்பு தீபாராதனையும் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. 8 மணிக்கு வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். இதையொட்டி தேர்களை அலங்காரம் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

    தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    கோவில் பகுதியில் கூடுதலாக 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    • தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லை யப்பர் கோவில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லை யப்பர் கோவில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவில் காலை, மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் 9-வது திருநாளில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் டவுனில் 4 ரத வீதிகளிலும் வலம் வரும். அதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தவழ்ந்த கோலத்தில் காட்சி

    இதற்கிடையே திருவிழா வின் 7-ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் தவழ்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    தொடர்ந்து சப்பரத்தில் சுவாமி அம்பாள் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர். தொடர்ந்து இன்று மாலை யும் அதே தவழ்ந்த கோலத்தில் வெள்ளி வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருகிறார்.

    • களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்டத் திருவிழா இன்று தொடங்கியது.
    • அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணி விடைகளும் நடத்தப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்டத் திருவிழா இன்று தொடங்கியது.

    1-ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணி விடைகளும் நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    விழாவில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் 8-ம் நாளான வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தச்சநல்லூர் அருகே உள்ள தேனீர்குளத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் சொந்தமாக குதிரைகள் வளர்த்து வருகிறார்.
    • அதில் ஒரு ஆண் குதிரை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள தேனீர்குளத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் சொந்தமாக குதிரைகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆண் குதிரை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து குதிரைக்கு லாடம் கட்டுவதற்காக தனுஷ்கோடி, அதனை டவுன் பழனிதெருவில் உள்ள உறவினர் வீட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு அங்கு புகுந்த மர்மநபர்கள் குதிரையை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு சென்றனர். இன்று காலை வெட்டுக்காயங்களுடன் குதிரை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்தவர்கள் குதிரையை மீட்டு ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்து வமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குதிரை உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடந்தது.
    • இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலையத்திற்குள் சென்று பயணி களை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் ஜெயராமன் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் நெல்லை- திசையன்விளை இடையே 'என்ட் டு என்ட்' என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    நெல்லையில் இருந்து திசையன்விளைக்கு தினமும் காலை முதல் இரவு வரை தலா 10 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த இடைநில்லா பஸ்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரத்தில் கடக்கும் இந்த பஸ்களில் ஏராளமான மாணவ-மாணவிகள், அலுவலர்கள், வியாபாரிகள் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்த பஸ்களில் எபோதும் கூட்டம் அலை மோதும். இந்தநிலையில் இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ் நிலை யத்திற்குள் சென்று பயணி களை ஏற்றி இறக்கி செல்கின்ற னர்.

    இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடு கிறது. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபடு கிறா ர்கள். எனவே முன்பு போல நெல்லை-திசையன்விளை 'என்ட் டு என்ட்' பஸ்களை இடைநில்லாமல் இயக்க கோரி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி யில் கார்த்திக் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
    • நேற்று அவரது வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில் எங்ககிட்ட மோதாதே, செத்துருவ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி யில் கார்த்திக் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இவர் அங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவரது வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அரிவாள் படம் வரைந்து, எங்ககிட்ட மோதாதே, செத்துருவ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தில் அனுப்புனர் முகவரி இல்லை.

    போலீசாரை மிரட்ட வேண்டும் என்பதற்காக யாரோ மர்ம நபர் மொட்டை கடிதம் அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் குப்புராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காலத்தில் மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    காற்றுக்காலங்களில் மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்த வேண்டாம். மின்கம்பிகள், சர்வீஸ் வயர்கள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்ல வேண்டாம்.

    உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக சென்று அதனை அப்புறப்படுத்தக் கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மின்சார வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மின்கம்பத்திற்கு போடப்பட்டு உள்ள ஸ்டே ஒயர்களில் கால்நடைகளை கட்டவோ, கால்நடைகளுக்கான கிடை அமைக்கவோ கூடாது. மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்தக்கூடாது. கொடிகள் கட்டி துணிகள் காயப்போடக்கூடாது. இது விபத்தை ஏற்படுத்தும். மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

    மின்நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை (ஆர்.சி.சி.பி.) பொருத்த வேண்டும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மீறினால் காவல்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் மின்தடை தொடர்பான புகார்களுக்கும் மின்கட்டமைப்புகளில் உள்ள பழுதுகள், இயற்கை இடர்பாடுகளின்போது அவசர உதவிக்கும், மின்வினியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987 94987 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி மின்விபத்துகளை தவிர்க்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய மந்திரி வி.கே.சிங் ராதாபுரம் அருகே பெருமணல் ஊரிலுள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபட்டு, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • மேலும் கடற்கரைக்குச் சென்று அங்கு உயிர் நீத்த மீனவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

    வள்ளியூர்:

    மத்திய மந்திரி வி.கே.சிங் ராதாபுரம் அருகே பெருமணல் ஊரிலுள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபட்டு, சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    மேலும் கடற்கரைக்குச் சென்று அங்கு உயிர் நீத்த மீனவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பெருமணல் மாதா கோவில் அருட்தந்தை ஜூலியனிடம் 9-ஆண்டு கால சாதனை களை விளக்கும் வண்ணம் அச்சடிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு கொடுத்து இனி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நெல்லை மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ், நெல்லை தெற்கு மாவட்ட பொது செயலாளர்கள் பாபு தாஸ் மற்றும் அருள் காத்தி, நெல்லை தெற்கு மாவட்ட பொரு ளாளர் பால கிரு ஷ்ணன், சிறுபான்மை அணி தெற்கு மாவட்ட பொது செயலாளர் எடிசன், வள்ளியூர் மத்திய ஒன்றிய தலைவர் அருள் ஜெக ரூபர்ட், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அசோக், சிறுபான்மை அணி ராதாபுரம் தெற்கு ஒன்றியதலைவர் சந்தியாகு மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டமன்ற பேரவை தலைவருக்கு மட்டும் தான் உண்டு.
    • ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது எம்.பி பதவியை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் பதவி நீக்கம் செய்தார்.

    நெல்லை:

    பாளை சேவியர் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடக்க விழாவிற்கு வந்த சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமர் கோவில் இடிப்பு சம்பவம் தேச துரோக வழக்காக பார்க்கப்பட்ட நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்றோர் அமைச்சர் பதவியுடன் தான் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கினார்கள்.

    இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பதவியில் இருந்துகொண்டு தான் இந்த வழக்கை சந்தித்தனர். அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் உரிமை ஆளுநருக்கு இல்லை.

    அரசியலமைப்பு சட்டத்தில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை அவர் நான்கரை மணி நேரத்தில் தெரிந்து கொண்டுள்ளார்.

    ஆளுநருக்கு இருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லும் உரிமை மட்டும் தான் அவருக்கு உள்ளது.

    யார்-யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற பட்டியலை ஆளுநருக்கு கொடுத்தால் அதனை ஏற்று பதவிப்பிரமாணம் ஆளுநர் செய்து வைக்க வேண்டும்.

    அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம் அல்லது முதலமைச்சர் அவர்களை பதவியை விட்டு நீக்கலாம். ஆளுநர் அவர்களை நீக்க முடியாது. வேறு யாருக்கும் அந்த உரிமையும் கிடையாது.

    நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல் உறுதி செய்யப்பட்டால் அமைச்சர்கள் அந்த பதவியில் இருந்து விலக நேரிடும்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்த போது தண்டனை கிடைத்ததால் தானாகவே இந்த பதவியில் இருந்து விலகினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டமன்ற பேரவை தலைவருக்கு மட்டும் தான் உண்டு.

    ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது எம்.பி பதவியை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் பதவி நீக்கம் செய்தார். இது போன்ற பல உதாரணங்கள் உள்ளது.

    ஆளுநரை பலமுறை நேரில் சந்தித்து பேசி உள்ளேன். அவர் மிகவும் நல்ல மனிதர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். நேற்று நடந்த நடவடிக்கை கூட உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடு தான். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு தான் தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் வெளியேறினார்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சிதான் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இந்திய அரசிய மைப்பு சட்டம் 159-ன் படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு மதச்சார்பற்ற நாடான இந்தியாவை மதச்சார்புள்ள நாடு என ஆளுநர் பேசுகிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநரின் இந்த பேச்சு மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம். ஆளுநர் இது போன்ற பேச்சை தெரிந்து சொல்கிறாரா? தெரியாமல் சொல்கிறாரா? என்பது தெரியவில்லை. இந்த போக்கை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    பாத்திமா பீவி ஆளுநராக இருந்தபோது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே தகுதி இல்லாத நபரை முதலமைச்சர் ஆக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதற்காக அப்போதைய பிரதமர், மத்திய அமைச்சரின் ஒப்புதலோடு ஆளுநரை திரும்ப பெற செய்தார். இதனை அறிந்த ஆளுநர், பதவி விலகிக் கொண்டார்.

    இதில் இருந்து அமைச்சரவை பரிந்துரையின்படி பணியாற்ற வேண்டிய கட்டாயமும், கடமையும் ஆளுநருக்கு இருப்பது தெரிகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அதிகாரங்களை ஆளுநருக்கு கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதுவே ஆளுநரின் பதவிக்கு மாண்பை தரும்.

    ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. டெல்லி சென்று வந்தார் என்பது மட்டுமே தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×