search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Aani Festival"

  • களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்டத் திருவிழா இன்று தொடங்கியது.
  • அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணி விடைகளும் நடத்தப்பட்டது.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்டத் திருவிழா இன்று தொடங்கியது.

  1-ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணி விடைகளும் நடத்தப்பட்டது.

  அதனைதொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

  விழாவில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் 8-ம் நாளான வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

  • 3-ந்தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் நடக்கிறது
  • 25-ந்தேதி இரவு முதல் 26-ந்தேதி அதிகாலையில் 3 மணியளவில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக" 9 நாட்கள் என வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

  திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

  25-ந் தேதி இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர் சிவகாமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

  ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

  இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள்பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

  திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

  • ஆனி உத்திர பெருந்திருவிழா 16-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
  • வரும் 16-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆனி உத்திர திருவிழா தொடங்குகிறது.

  திருவாடுதுறை ஆதீனத்துக்கு பாத்தியப்பட்ட ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி திருக்கோவிலில் ஆனி உத்திர பெருந்திருவிழா வரும் 16-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு திருவிழா முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

  இதனை ஒட்டி காலையில் கன்னி விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கோவில் வழிபாட்டு மகளிர் குழுவினரின் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முகூர்த்த காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, கோவில் உள் பிரகாரத்தில் சுற்றி வந்து கோவில் முன்பு நடப்பட்டது. பின்னர் முகூர்த்த காலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா பிள்ளை, கோவில் பக்த ஜன சபை செயலாளர் எஸ். ஹரிகிருஷ்ணன், ஆறுமுகநேரி நல மன்ற தலைவர் பி. பூபால ராஜன், ஓய்வு பெற்ற பேராசிரியர் அசோக்குமார், ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி சுப்பையா, இளையபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வரும் 16-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆனி உத்திர திருவிழா தொடங்குகிறது. அன்று காலை, மாலையில் அம்பாள்- சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை கோவில் மணியம் மற்றும் பக்த சபையினர் மண்டக படிகாரர்கள் செய்து வருகின்றனர்.

  • திருவிழாவை முன்னிட்டு கும்ப பூஜைகள் நடைபெற்றது.
  • மஞ்சள், பால் கொண்டு கொடி மரத்திற்கு சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது.

  நெல்லை:

  நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.

  பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா

  மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்வாக நெல்லையப்பா் கோவிலின் வடதிசையில் அமைந்துள்ள ஊர்க்காவல் தெய்வமான ஸ்ரீபிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

  இதனை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம், மித்ரசங்கீரணம், ரக்சாபந்தனதம் நடைபெற்றது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து புண்யாகவாசனம், கும்ப பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், பால் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக 6-ம் நாள் திருநாளன்று சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருகிற 26-ந்தேதியும், 9-ம் திருநாளான 29-ந்தேதி தேரோட்டமும், 10-ம் திருநாளன்று நெல்லையப்பா் கோவில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நெல்லையப்பா் கோவில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

  • 8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும்.
  • முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

  முக்கூடல்:

  முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்திப் பெற்ற முத்துமாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

  அதேபோல் இந்த ஆண்டும் 11 நாட்கள் விழா நடக்க இருப்பதால் நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் தீர்த்தவாரியும், அம்பாள் சப்பர பவனியும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 1-ம் திருநாள் ஹரிராம் சேட் நற்பணி மன்றம் மற்றும் நாடார் இளைஞர் அணி சார்பாக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  விழா நாட்களில் தினமும் காலையில் அம்பாளுக்கு பூஜையும், பகல் 12 மணிக்கு பகல் பூஜையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து முக்கூடல் நகரை சுற்றி தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் ரத பவனியும் இரவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

  பால் குடம்

  8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். 9-ம் திருநாள் அன்று இரவு அம்பாள் சப்பர பவனி உடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், பல மேளதாளங்களுடன் விமரிசையாக நடைபெறும்.

  10-ம் திருநாள் அன்று தாமிரபரனி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணை கவரும் பல நிறுவனங்களின் ஸ்டால்களும், மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

  மேலும் காலை 4 மணி அளவில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். 11-ம் திருநாள் அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறும். இவ்விழாவில் வெளி ஊர்களில் வசிக்கும் அதாவது மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

  முக்கூடல் ஊர் மக்கள் மட்டுமின்றி இந்த ஊரை சுற்றி உள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்கள் விரதமிருந்து இந்த கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். கொடியேற்று விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை, அறநிலைய த்துறை ஆகிய அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

  திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எல்.வேல்சாமி, செயலாளர் எஸ். சந்திரன், துணைத் தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்தரசன், மற்றும் முக்கூடல் இந்து நாடார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

  • கோவிலின் கொடை விழா வருகிற 12-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
  • பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

  தென்திருப்பேரை:

  தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் கிழமை ஆனி கொடை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோவிலின் கொடை விழா வருகிற 12-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.

  அதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நித்திய பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு கால்நாட்டு விழாவை முன்னிட்டு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது.

  அதைத்தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேற்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய 'கால்நாட்டு' விழா நடைபெற்றது.

  தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடைவிழா தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் நேற்று முதல் விரதத்தை தொடங்கினார்கள்.

  கால்நாட்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட அறநிலை துறை இணை ஆணையர் அன்புமணி, ராஜேந்திரன், ஜெகதீசன், முத்துமாலை, சப்தசாகரன், ஜெயசங்கர், சந்திரசேகரன், கல்யாணசுந்தரம், ராஜகோபால், துரைராஜ், குணசேகரன், செல்வராஜ், பாலகிருஷ்ணன், ஈஸ்வரன், பெரியசாமி, ஆர்.பெரியசாமி, கேசவமூர்த்தி, சிவசுப்பிரமணியன், ஸ்ரீதர், அர்ஜூன் பாலாஜி, துரை, ரவி, முத்துக்குமார், கார்த்திகேயன், ஜெயபிரகாஷ், பஞ்சாயத்து தலைவர் ஜெயமுருகன், ஜெகநாதன், முத்துகிருஷ்ணன் மற்றும் 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் ஆகியோர் செய்துள்ளனர்.

  ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி போலீசார் பாதுகாப்பு பணியினை செய்து இருந்தனர்.

  • திருவிழா நாட்களில் காலை,மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
  • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.

  நெல்லை:

  சிவபெருமான் திருநடனம் ஆடிய 5 சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ள நெல்லை மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

  ஆனித்திருமஞ்சன விழாவை முன்னிட்டு முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் ஆனி திருவிழாவின் தொடக்கமான கொடியேற்றுதல் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

  அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

  இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம், திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  திருவிழா நாட்களில் காலை,மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், வீதி உலாவும் நடைபெறுகிறது.

  முக்கிய நிகழ்வாக வருகிற 2-ம் தேதி நடராஜர் தாமரை சபையிலிருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 4-ம் தேதியும், ஆனித் திருமஞ்சனம் 5-ம் தேதியும் நடைபெறுகிறது.

  • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • தேர் நிறுத்தப்பட்டிந்த பகுதியில் கிடந்த பாட்டில்கள் மற்றும் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டு தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது.

  நெல்லை:

  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோவிலுமானது நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது.

  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்ததால் வழக்கம் போல பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனித் திருவிழாவையொட்டி பந்தல்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது. ஆனிப் பெருந்திருவிழாயொட்டி வருகிற 3-ந் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.

  இதைத்தொடர்ந்து திருவிழாவிற்கான ஏற்பாடுகள் திவிரமாக நடந்து வருகிறது. சுவாமி, அம்மன் தேரை சுற்றி கண்ணாடி கூண்டுகள் வைக்கப்படுவது வழக்கம்.

  இந்நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு டவுன் கீழரத வீதியில் காந்திமதி அம்மன் தேர் நிற்கும் இடத்தில் உள்ள கண்ணாடி கூண்டுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து தேர் நிறுத்தப்பட்டிந்த பகுதியில் கிடந்த பாட்டில்கள் மற்றும் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டு தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது. மேலும் தேரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. 

  ×