என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் சாக்கடை வாறுகால்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
    • சிவா தெருவில் சிறிய அளவிலான பொக்லைன் உதவியுடன் அடைப்புகள் சரி செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட தெற்கு மவுண்ட் ரோட்டில் சாக்கடை வாறுகால்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

    பொது மக்கள் புகார்

    தற்போது முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும், ஆக்கிரமிப்பினாலும், மழைக்காலங்களில் அந்த பகுதியில் சாக்கடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டு கால்வாய்களில் இருந்து சாக்கடை நீர் வெளியேறி குடியிருப்புகள் புகுவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து இன்று கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரிலும் டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தெற்கு மவுண்ட் ரோடு இருபுறமும் சாக்கடை வாறுகாலில் தூர் வாரும் பணி நடைபெற்றது.

    தூர்வாரும் பணி

    இந்த தூர்வாரும் பணியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வாறுகால்களை முழுவதுமாக தூர் வாரி சீரமைத்தனர்.

    தொடர்ந்து டவுன் சிவா தெருவில் சிறிய அளவிலான பொக்லைன் உதவியுடன் அடைப்புகள் சரி செய்யப்பட்டது. குவிந்து கிடந்த மணல், கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது.

    • கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
    • இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது

    நெல்லை:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் காய்கறி களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    விலை மேலும் உயர்வு

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறி விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. பாளை மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 120 முதல் ரூ.130 வரை விற்பனையான நிலையில் இன்று மேலும் 30 ரூபாய் உயர்ந்து இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 150-க்கு விற்பனையானது. அதனை தள்ளுவண்டி மற்றும் தெருவோர கடைகளில் வாங்கி சென்று விற்பனை செய்யும் வியாபாரிகள் ரூ.170 வரையிலும் விற்பனை செய்தனர்.

    தொடர்ந்து தக்காளியின் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பெருமழை காரணமாக தக்காளியின் விலை தொடர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை போல் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. பீன்ஸ் ரூ.100-க்கும், கேரட், உள்ளி ரூ.80-க்கும், அவரை மற்றும் மிளகாய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாளை மார்க்கெட் வியாபாரி ஈசாக் கூறுகையில், ஆந்திராவில் இருந்து மட்டும் தான் தற்போது தக்காளி வந்து கொண்டிருக்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தக்காளி வரத்து முற்றிலும் நின்று விட்டது.

    ஆந்திராவில் இருந்து இன்று 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.3500-க்கு வந்து சேர்ந்துள்ளது. இதில் 3 கிலோ வரை சேதம் அடைந்துவிடும். இதை எல்லாம் சரிகட்டும் விதமாகவும், மேற்கொண்டு லாபமும் பெற வேண்டும் என்பதாலும் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம் என்று கூறினார்.

    • ஆத்திரமடைந்த மக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கவுன்சிலர் வசந்தா உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்டது திருவண்ணாதபுரம் பொட்டல் கிராமம். இங்கு சமீப காலமாக வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது.

    மறியலில்

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக டவுனுக்கு புறப்பட்டுச் சென்ற பஸ் செல்வதற்கு வழியில்லாமல் நின்று விட்டது. அந்த பஸ்ஸினை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நடவடிக்கை

    தகவல் அறிந்து அங்கு வந்த 4-வது வார்டு கவுன்சிலர் வசந்தா உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொட்டல் கிராமத்தில் நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இந்த தெருவுக்கு மட்டும் குடிதண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. வாரத்துக்கு ஒரு முறை தான் கிடைக்கிறது. மற்ற பகுதிகளில் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. ஏன் வரவில்லை என்று கேட்கும் போது மோட்டார் பழுதாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.

    நிரந்தர தீர்வு

    அடிக்கடி இந்த பதிலை தான் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே புதிய மோட்டார் வாங்கி தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். அப்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறினர்.

    • அனைத்து தொழில்நுட்ப காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் நெல்லை மண்டல நிர்வாகிகள் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் பேட்டையில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க இணை தலைவர்கள் ராமையா, ஹமீது, விஜயகுமார், ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இணைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, முருகேசன், தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி கிளைச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்து உரையாற்றினார். நெல்லை மண்டல செயலாளர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொழில்நுட்ப காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், சட்ட திட்டத்தின்படி தொழில்நுட்ப சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    • அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின்படி ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
    • 22 ஏக்கர் நிலம் பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது.

    களக்காடு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் சில இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின் படி ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

    கோவில் நிலம்மீட்பு

    அந்த வகையில் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை யினருக்கு புகார்கள் வந்தது.

    இதனைதொடர்ந்து நெல்லை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கவிதா பிரி யதர்ஷினி வழிகாட்டுதலின் பேரில் உதவி ஆணையர் கவிதா தலைமையில் கோவில்கள் தனிப்பிரிவு தாசில்தார் இந்திரா காந்தி முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் முருகன் சரக ஆய்வாளர் லதா மற்றும் கோவல் பணியாளர்கள் சிங்கிகுளத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை பார்வையிட்டு, அதனை அளவையர்கள் மூலம் அளவீடு செய்து கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

    அதிகரிக்க நடவடிக்கை

    அதன் பின்னர் 22 ஏக்கர் நிலம் பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. மீதமுள்ள 28 ஏக்கர் நிலமானது கோவிலின் நேரடி சுவாதீனத்திற்கு எடுக்கப்பட்டு மீண்டும் மறு பொது ஏலத்திற்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    இதுபோல ஏர்வாடி திருவழுதீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அதன் தொகுப்பு கோவில்கள் அனைத்திற்கும் துறை நில அளவையர்கள் மூலம் 150 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டு அதில் சுமார் 65 ஏக்கர் வரை பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மேலும் தொடர்ந்து கோவில் நிலங்கள் ஏலம் விடப்பட்டு கோவில் நிலங்களின் மூலம் கோவிலுக்கு வரும் வருவாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    • ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.
    • ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும்

    நெல்லை:

    தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் இந்த நிதியாண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    இந்நிலையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாடித்தோட்ட தளைகள் 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. பாப்பாக்குடி வட்டாரத்தில் ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் தோட்ட க்கலை உதவி இயக்குநர் சுபாவாசுகி கலந்து கொண்டு அனைவரும் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தங்களது வீட்டிலேயே அங்கக முறையில் உற்பத்தி செய்து கொள்ளலாம் எனவும், ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.900, மானியம் ரூ.450, பயனாளியின் பங்குத்தொகை ரூ.450 எனவும் ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும் எனவும் விளக்கினார்.

    இதில் ஏற்கெனவே பயன்பெற்ற பயனாளி மாரியம்மாள், பாரதமணி, சோமு ஆகியோர் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் முறைகள் பற்றியும், காய்கறி வளர்ப்பதால் உள்ள நன்மைகளையும் விளக்கி கூறினார்கள். இப்பயிற்சியில் ரஸ்தாவூரை சேர்ந்த செம்பருத்தி, முப்புடாதி அம்மன், அன்னை தெரசா, சரோஜினி, அன்னை இந்திரா, மகளிர் மன்றம் ஆகிய பெயர்களில் செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • இசக்கியின் மனைவி எஸ்தர் மரியா களக்காடு போலீசில் புகார் செய்தார்.
    • கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ராணியை களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம், நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32). தொழிலாளி. இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த 2017-ம் ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த கணபதி மனைவி ராணியிடம் (50) ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ. 2,500 வட்டி செலுத்தி வந்தார்.

    இந்நிலையில் இந்த மாதம் வட்டி செலுத்தவில்லை என தெரிகிறது. இதனைதொடர்ந்து ராணி, இசக்கி வீட்டிற்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம் வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி எஸ்தர் மரியா தனது கணவர் இசக்கியிடம் கூறினார்.

    இதனைதொடர்ந்து இசக்கி ராணியிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு ராணி வட்டி தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இசக்கியின் மனைவி எஸ்தர் மரியா களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே கந்து வட்டி கேட்டு மிரட்டி, மனைவியை அவதூறாக பேசியதால் இசக்கி மனம் உடைந்தார். நேற்று முன்தினம் இரவில் இசக்கி திடீர் என விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது.

    இதனிடையே கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ராணியை களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதான ராணி காங்கிரஸ் பிரமுகர் ஆவார்.

    • போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நெல்லை:

    பாளையில் தமிழ்நாடு அரசு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், நெல்லை அரசு அருங்காட்சியகம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் ஆகியவை சார்பில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது.

    புலிகளைக் காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 4 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும் மற்றும் 9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பிரிவு என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் நாளை ( சனிக்கிழமை) களக்காடு தலையணைக்கு சூழல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி செய்திருந்தார்.

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகே தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நெல்லை:

    தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை நெல்லை மாவட் டத்திற்கு வருகை தந்தார்.

    உற்சாக வரவேற்பு

    அவருக்கு பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகே வைத்து தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட அவைத் தலைவர் கிரகாம் பெல், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பாளை யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், சித்திக், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக் கோட்டை செல்லத்துரை, மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், முன்னாள் துணைச் செயலாளர் நவநீதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அனுராதா ரவி முருகன், ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், ஜோசப் பெல்சி, அருள்மணி, ராஜன், நிர்வாகிகள் வீர பாண்டி யன், ஆறுமுக ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் ஆய்வு

    அதனைத்தொடர்ந்து கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ண ப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெறும் பாளை யூனியன் பாளை யஞ்செட்டி குளம் பஞ்சாயத்து மற்றும் ரெட்டி யார்பட்டி பஞ்சாயத்துகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கு மரக்கன்று கள் நட்டு வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உடன் இருந்தார். அதன் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

    நலத்திட்ட உதவிகள்

    அங்கு அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் 25 பயனாளிகளுக்கு உழவர் காசுக்கடன்கள் உள்பட மொத்தம் 643 பயனாளி களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போ தெல்லாம் அமைகிறதோ அப்போ தெல்லாம் மகளிருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு மாவட்டத்தில் உள்ள 528 நியாய விலை கடைகள் மூலம் முதல் கட்டமாக 2.46 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அதில் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு மையங்களில் பயனாளிகளால் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது வரை பெறப்பட்டுள்ளது.மீத முள்ள சுமார் 2 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தும் விதமாக அ.தி.மு.க. மூத்த தலைமை நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவன், அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று கூட்டத்தில் எழுச்சி உரையாற்றுகின்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஆறுமுகம், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (31). கூலி வேலை செய்யும் நண்பர்களான இவர்கள் 2 பேரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நோக்கி சென்றனர்.

    நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்

    மோட்டார் சைக்கிளை ராமகிருஷ்ணன் ஓட்டி சென்றார். மோட்டார் சைக்கிள் நாங்குநேரி சோதனை சாவடியை கடந்து நம்பி நகர் பகுதியில் சென்ற போது பயணிகளை ஏற்றுவதற்காக நான்கு வழிச்சாலையில் பஸ்சை டிரைவர் திடீரென நிறுத்தினார். அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கி கொண்டது.

    தீவிர சிகிச்சை

    தகவல் அறிந்ததும் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீ சார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வழக்க மாக அணுகு சாலையில் பேருந்தை நிறுத்தி பயணி களை ஏற்று வதற்கு பதில் நான்கு வழிச்சாலையில் பஸ்சை நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    மேலும் தொழிலாளர்கள் 2 பேரும் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு சென்ற போது விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள், பி.எஸ்.சி. பாரா மெடிக்கல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ் கிருமி, நம்முடைய கையை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதால் தாக்குகிறது.

    நெல்லை:

    கல்லீரலை தாக்கும் ஹெபடைடிஸ் கிருமிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரலை காக்கவும் ஹெபடைட்டிஸ் பி வைரசை கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று உலக ஹெபடைடிஸ் தினம் உலகமெங்கும் அனுச ரிக்கப்பட்டு வருகிறது.

    விழிப்புணர்வு பேரணி

    இதனையொட்டி நெல்லை மருத்துவக்கல்லூரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமையில் உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள், பி.எஸ்.சி. பாரா மெடிக்கல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். பேரணியில் கல்லீரல் பாதுகாப்பு குறித்த பதாகை களை ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை கூறியும் சென்றனர்.

    நிகழ்ச்சியின் தொடக்கமாக மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கண்காணிப்பாள ரும், கல்லீரல் மற்றும் குடல்நல, மருத்துவப் பிரிவு துறைத்தலை வருமான டாக்டர் கந்தசாமி என்ற குமார் வரவேற்று பேசினார். இந்திய மருத்து வக்கழக தலைவர் டாக்டர் சுப்பிரமணியன், செயலாளர் இப்ராஹிம், நிதி செயலாளர் பாபுராஜ் ஆகியோர் பங்கேற்றனர். சிறுநீரகவியல் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியம், உதவி உறைவிட மருத்துவர் ரவி, எஸ்தர், செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் டீன் ரேவதி பேசியதாவது:-

    கருத்தரங்கில் ஹெபடைடிஸ் பி வைரசால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் குறித்தும், அதன் வகைப்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. இந்த வைரஸ், ஏ, பி, சி, டி மற்றும் இ என்று 5 வகையில் இருந்தாலும், ஏ மற்றும் இ வைரஸ் கிருமி, நம்முடைய கையை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதால் தாக்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு, ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மற்ற 3 ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளும் ரத்தம் வழியாகவும், பாதுகாப்பற்ற உடல் உறவாலும், மேலும் சுகாதார முறையில் பராமரிக்கப்படாமல் பச்சை குத்துதல், காது குத்துதல் மற்றும் ஒரே ஷேவிங் செட்டை பலர் உபயோகித்தல் போன்றவற்றால், இந்த வைரஸ் கிருமி பரவுகிறது. இக்கிருமி தாக்கிய சில நாட்களில், உடல் சோர்வு, மூட்டுவலி, வாந்தி, வலதுபுற அடி வயிற்றுவலி ஆகியவை ஏற்படும். ஹெபடைடிஸ் வைரஸ் தாக்காமல் இருக்க, குழந்தை பிறந்து 24 மணி நேரத்துக்குள் "இமினோ குளோபின்' தடுப்பூசி போட வேண்டும். அதைத்தொடர்ந்து, 1 மற்றும் 6 மாதத்துக்குள் 3 முறை தடுப்பூசி போட வேண்டும். பெரிய வர்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அரசு மருத்துவ மனையில் ஹெச்.பி.எஸ்.எ.ஜி. என்ற ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முடிவில் உதவி பேராசிரியர் டாக்டர் ஷபிக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குடல் கல்லீரல் மருத்துவ சிறப்புப்பிரிவின் துறைத்தலைவர் பேராசிரியர் கந்தசாமி என்ற குமார் செய்து இருந்தார். நிகழ்ச்சியை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

    ×