என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
    • விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிறுவனங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்துறையில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இந்திய வேளாண் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறாத பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் சார்பில் பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்ற நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அந்த விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பாரதிய கூட்டுறவு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீடு உதவியாளர் பணிக்காக வெளியிடப்படும் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 247 வழக்குகள் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டன.
    • விசாரணையானது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் இன்று நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் மொத்தம் 9 அமர்வுகளுடன் நடைபெற்றது.

    நிலுவையில் உள்ள வருவாய்துறை வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 247 வழக்குகள் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த விசாரணையானது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

    2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செய லாளரும், சார்பு நீதிபதியுமாகிய இசக்கியப்பன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சந்தானம், வள்ளியம்மாள், நீதித்துறை நடுவர்கள் திரிவேணி, ஆறுமுகம், விஜய் ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார் மற்றும் முரளிநாதன், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், வக்கீல்கள் மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் பால சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில், மொத்தம் 247 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக்கடன் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 65 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    • அரிவாள் வெட்டில் காயமடைந்த சின்னத்துரை,சந்திரா செல்வி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மாணவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரும், சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

    மேலும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு மருத்துவர்களை சந்தித்து அவர்கள் இருவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராஜா, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலை வர் ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகி சுடலை குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஒரு தொகுதியாகும்.
    • தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தராமல் கால்வாய்களில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது.

    சிங்கை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் தமிழக அரசுக்கு அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஒரு தொகுதியாகும். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு இப்பகுதி மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் கார்பருவ சாகுபடிக்காக நான் பல்வேறு கோரிக்கைகள் வைத்ததின்பேரில் கடந்த மாதம் 19-ந்தேதி பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.

    அந்த ஆணையில் 19-7-2023 முதல் 31-10-2023 வரை 105 நாட்கள் 3015 மில்லியன் கனஅடி நீர்பாசனத்திற்காக அதாவது கன்னடியான்கால்வாய், நதியுன்னிகால்வாய், வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான்கால் ஆகிய கால்வாயில் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்து திறக்கப்பட்டது.

    அரசின் ஆணையை நம்பி இப்பகுதி விவசாயிகள் விவசாய முன்னேற்பு பணிகளை பெரும் சிரமத்திற்குள் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தராமல் கால்வாய்களில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது. இது இப்பகுதி விவசாய மக்களை மிகவும் பாதிக்கும் சூழலில் உள்ளது. அதனால் அரசும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் பாசனத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
    • தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த பிளஸ்-2 மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை சபாநாயகர் அப்பாவு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    அப்போது காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து மாணவருக்கு தேவையான உயர்தர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

    தமிழக அரசு உங்களது குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். அமைச்சரிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளேன். நீங்கள் தைரியமாக இருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    நாங்குநேரியில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்த உடன் முதலமைச்சர் என்னை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    முதலமைச்சரும் நேரடியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயிடம் பேசியிருக்கிறார். குழந்தைகள் கல்வி தடைபடாத அளவில் நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை நிற்கும் எனவும் அவர்களிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தேவையான உயர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    • பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார்.
    • பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள்

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதும், அதை தடுக்க முயன்ற அவரது சகோதரி சந்திரா செல்வினும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிருக்குப் போராடுவதும் வேதனையளிக்கின்றன. பள்ளியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ள செய்திகள் மனதிற்கு மிகுந்த கவலையளிக்கின்றன.

    பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார். அது குறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்ததன் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிக்கிறது. மாணவர் சின்னத்துரை மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் தொடக்கத்திலேயே தடுக்கப்பட்டிருந்தால், அவருக்கும், அவரது சகோதரிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்கள் தாக்கப்பட்ட அதிர்ச்சி தாளாமல் அவர்களின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்ததும் நடந்திருக்காது.

    பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள். அங்கு சாதி வெறிக்கு இடமளிக்கப்படக் கூடாது. அவை சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும். அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒட்டு மொத்த சமுதாயமும் மேற்கொள்ள வேண்டும்.

    நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகாயம் அடைந்தனர்.
    • பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டி படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.

    நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவன் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளியூர்களில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் நாம் உள்ளூரில் நடக்கும் சம்பவங்களை பார்க்க மறந்துவிட்டோம்.
    • கர்நாடகத்தில் வேறு ஆட்சி நடக்கும் போது பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை-அம்பை சாலையில் அமைந்துள்ள தருவை கிராமத்தில் பனங்காடு என்ற இடத்தில் பனை தேசிய திருவிழா-2023 என்ற நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது.

    இதில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து காரில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு வந்த அவரை கலெக்டர் கார்த்திகேயன், துணை போலீஸ் கமிஷனர் அனிதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கற்பகதரு என்று அழைக்கப்படும் பனைமரம் பாதுகாக்கப்பட வேண்டியது என்பது அனைவரது கொள்கையாகும். பனை வளர்ப்பை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். அறிவாற்றலுடன் வளர வேண்டிய மாணவர்கள் தற்போது பள்ளிகளில் அரிவாளுடன் சுற்றும் நிலை உள்ளது.

    புத்தகத்தை எடுத்து க்கொண்டு திரிய வேண்டியவர்கள், கையில் கத்தியை வைத்துக்கொண்டு திரிவது மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. காவல்துறையும், நிர்வாகமும் ஏன் இந்த சம்பவத்தை கண்காணிக்க தவறினார்கள்.

    வெளியூர்களில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் நாம் உள்ளூரில் நடக்கும் சம்பவங்களை பார்க்க மறந்துவிட்டோம். நாங்குநேரி விவகாரத்தில் தீர ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்காக மட்டும் சாதியை பயன்படுத்துவதை தாண்டி சாதிய கொடுமைகள் இருக்கும் இடங்களை அலசி ஆராய்ந்து பொதுநலவாதிகள் முடிவெடுக்க வேண்டும்.

    மற்ற ஊர்களையும், மற்ற மாநிலங்களையும் பற்றி ஆட்சியில இருப்பவர்கள் கவலைப்படுகிறார்கள். நமது மாநிலத்தை பற்றி ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி இருந்தால் காவிரியை வழி நடத்துவோம் என சொன்னவர்கள், கர்நாடகத்தில் வேறு ஆட்சி நடக்கும் போது பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தேசிய கொடி விற்பனை அனைத்து அஞ்சலகங்கள் மூலமாக நடைபெறுகிறது.
    • பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து வ.உ.சி.மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகம் வந்து சேர்ந்தது.

    நெல்லை:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மூலம் தேசிய கொடி விற்பனை நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. இது குறித்து பாளையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தலைமை தாங்கினார். இப்பேரணி பாளை தலைமை அஞ்சலகத்தில் இருந்து வ.உ.சி.மைதானம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் தலைமை அஞ்சலகம் வந்து சேர்ந்தது.

    இதில் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பாலாஜி, பாளை தலைமை அஞ்சல் அதிகாரி ராமசந்திரன் உட்பட அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • 3 கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

    அம்பை:

    அம்பை வட்டாரம் வெள்ளாங்குளி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அம்பை ஒன்றியக்குழு தலைவர் சிவணுபாண்டியன் என்ற பரணி சேகர் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றி வேளாண்மைத் துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி திட்டங்கள் பற்றி அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

    அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் ஆலோசனை பேரில் நடைபெற்ற விழாவில் பேசிய வேளாண்மை அலுவலர் ஷாகித் முகைதீன், அம்பை வட்டாரத்தில் வெள்ளாங்குளி, அயன்திருவாலீஸ்வரம் மற்றும் அடையக்கருங்குளம் ஆகிய 3 கிராம பஞ்சாயத்துகள் இவ்வாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கிராம பஞ்சாயத்துகளில், ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் அதிக பட்சமாக ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மற்ற இரு கிராம பஞ்சாயத்துகளிலும் தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். வெள்ளாங்குளி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 22 விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தனர்.

    நிகழ்ச்சியில் வெள்ளாங்குளி பஞ்சாயத்து தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயலெட்சுமி, குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தங்கசரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது.
    • சின்னத்துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி- அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (வயது 17). இவர் வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் படித்த நாங்குநேரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    அரிவாள் வெட்டு

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கை 10-ம் வகுப்பு மாணவியான சந்திரா செல்விக்கும் கையில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் அதிர்ச்சியில் சின்னத்துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் நேற்று நாங்குநேரியில் நடந்தது. அப்போது போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று கிருஷ்ணனின் உடல் அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

    6 பேர் கைது

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

    • நிகழ்ச்சியின் போது, போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் எடுத்து கூறினார்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    நெல்லை, ஆக.11-

    தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழித்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 11 ஆம் நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய நிறுவனங்களில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக அனுசரித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றிட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் நெல்லை சந்திப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லை சாப்டர் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் கலந்துகொண்டு போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் மாணவர்களிடையே எடுத்து கூறினார். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தாஸ் ஜெபக்குமார், இன்ஸ் பெக்டர்கள் பொன் ராஜ், செல்லத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் ஜெபஷ்டியன், நுண்ணறிவு போலீஸ்காரர் வேல்முருகன் உட்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

    ×