என் மலர்
திருநெல்வேலி
- மாணவனுக்கு கையில் அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
- 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாக தெரிவித்தார்.
மேலும், மாணவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மகனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என மாணவனின் தாயார் கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த மாணவன் 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காயமடைந்த இருவரும் குணமடைந்ததும் அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அவர்களுக்கு தேவையான கல்வியை தொடர அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
- கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தண்டவாளங்களில் ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.
நெல்லை:
நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் மாவட்ட நிர்வாக ங்கள் சார்பில் சுதந்திர தினவிழா கொண் டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அணிவகுப்பு ஒத்திகை
இதற்காக 3 மாவட்டங்களிலும் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் நாளை மறுநாள் தேசிய கொடியை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தியாகிகள் கவுரவிக்கப் படு கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இதனையொட்டி கடந்த 3 நாட்களாக வ.உ.சி. மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தீயணைப்பு துறை யினர், காவல் துறையினர், ஊர்காவல் படையினர் இணைந்து அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சுதந்திர தின விழாவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் தென் மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 1,500 போலீசாரும், மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேற்பார்வையில் 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம், பணகுடி இஸ்ரோ மையம் உள்ளிட்ட இடங்கள், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பாதுகாப்பு தொடர்பான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள், வாகன காப்பகங்களில் ரெயில்வே போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி கலெக்டர் ரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றுகிறார். மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கடலோர காவல்படையினர், மரைன் போலீசார் ஆகியோரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
- சின்னத்துரை, சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை தே.மு.தி.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
- மாணவன், அவரது சகோதரி குறித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தே.மு.தி.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
அப்போது கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செல்போன் மூலமாக, சிகிச்சை பெற்று வரும் மாணவரின் தாயாரிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாணவன், அவரது சகோதரி குறித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
மாநில நெசவாளர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவாணன், பாளை பகுதி செயலாளர் அந்தோணி, தச்சை பகுதி செயலாளர் ராஜ், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, நிர்வாகிகள் கணேசன், மாசானம், மகேந்திரன், ராஜா, பாலாஜி உட்பட பலர் உடன் சென்றனர்.
- ஆடி அமாவாசை திருவிழாவிற்காக இன்று மாலை வரை தனியார் வாகனங்களில் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்து செல்லலாம்.
- தனியார் வாகனங்கள் இன்று மாலைக்கு பிறகு, நாளை முதலும் கட்டாயம் அனுமதிக்கப்படாது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனுமதி நீட்டிப்பு
சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை மட்டும் தனியார் வாகனங்களில் பொது மக்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்து செல்வதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எக்காரணம் கொண்டும் இன்று மாலைக்கு பிறகும், நாளை (திங்கட்கிழமை) முதல் தனியார் வாகனங்கள் கட்டாயம் அனுமதிக்கப் படாது. பொதுமக்கள் அனைவரும் அகஸ்தியர் பட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே செல்ல அனுமதிக்கப் படுவார்கள். பொதுமக்கள் அனைவரும் அரசு துறை களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மர்ம நபர் ஒருவர் சுடலைமணி வீட்டின் கதவுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
- விசாரணையில், தீ வைத்து சென்றது முருகன் என்பது தெரிய வந்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையம் மேலநத்தம் பகுதியில் சேர்ந்தவர் சுடலை மணி. தொழிலாளி. நேற்று இரவு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சுடலைமணி வீட்டின் கதவுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். உடனே வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து தீயை அணைத்து விட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து சுடலைமணி மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டு கதவின் அருகில் பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தது. இதனால் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனரா? அல்லது பெட்ரோல் குண்டு ஏதேனும் வீசிவிட்டு சென்றார்களா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியில் கீழத்தெருவில் வசிக்கும் டேங்கர் வைத்து தண்ணீர் விற்பனை செய்யும் முருகன் (வயது 40) என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றது தெரிய வந்தது. சமீபத்தில் முருகனின் குழந்தை சுடலை மணிக்கு வீட்டுக்கு விளையாட சென்றதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் முருகன் தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- திருவிழா முடியும் வரை நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூடுதல் பொறுப்பாக காரையாறு பகுதியை கவனித்துக்கொள்ள உத்தரவிட்டார்.
- பக்தர்கள் எவ்வித இடைஞ்சலும் இன்றி கோவிலுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
நெல்லை:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 16-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.
இதையொட்டி பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நாளை(திங்கட்கிழமை) முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அன்றைய தினங்களில் அரசு பஸ்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது. அதேநேரத்தில் நேற்று முதல் கோவிலில் குடில் அமைத்து கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து வனத்துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம், போராட்டங்கள் என பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், வனத்துறை தலையீடு இல்லாமல் இருப்பதற்காக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி திருவிழா முடியும் வரை நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூடுதல் பொறுப்பாக காரையாறு பகுதியை கவனித்துக்கொள்ள உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், இன்று அதிகாலையிலேயே கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாபநாசம் சோதனை சாவடிக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பக்தர்கள் எவ்வித இடைஞ்சலும் இன்றி கோவிலுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். அப்போது சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்க ப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை தனியார் வாகனங்களில் பொதுமக்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு அங்கு தங்கு வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பக்தர்கள் முழுமையாக மலையில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை பக்தர்கள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தாமலும், ஆழமான பாறைகள் நிறைந்த பகுதிகளுக்கு போகாமல் எப்போதும் போல குளிக்கலாம். அதில் எந்த தடையும் இல்லை. அதுகுறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- நேற்று காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
முக்கூடல்:
முக்கூடல் நகரில் அமைந்துள்ள நாராயணசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவு அன்னதானம், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நேற்று 9-வது நாள் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற்றது.
தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். நாராயணரின் சப்பரத்தின் முன்பாக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய வேடங்களை உயரமாக அமைத்து ஆடி, பாடி வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நேற்று முக்கூடல் முத்தமிழ் பேரவையின் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி இன்று நெல்லை வந்தார்.
- மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
நெல்லை:
நாங்குநேரியில் சக மாணவர்களால் பள்ளி மாணவர் தாக்கப்பட்டது சம்பந்தமாக விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளார்.
பள்ளி மாணவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி இன்று நெல்லை வந்தார்.
அவர் நாங்குநேரி பகுதியில் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்பட்டுள்ளதா?, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரை படித்த வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியிலும் உறுப்பினர் ரகுபதி ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
- 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
- காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 25). இவர் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17, 19 வயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஒரு பழைய கட்டிட சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்து அந்த காட்சிகளை பதிவாக்கி சமூகவலை தளமான இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டனர். அதன் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், 3 பேரும் யூ-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாகவும், தயாரித்த குண்டுகளை ஒரு கட்டிடத்தின் சுவர் மீது வீசி ஒத்திகை பார்த்ததும் தெரிய வந்தது. மேலும், இதில் 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இசக்கியப்பன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, தலைமறைவான 16 வயது சிறுவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் அவன் கேரளாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அங்கு விரைந்து சென்றது. அங்கு காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
- வானுமாமலையின் இட்லி கடைக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.
- வானுமாமலையின் மாமனாரான ராமையா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசியது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் வானுமாமலை(வயது 27). இவர் அப்பகுதியில் இட்லி கடை வைத்துள்ளார்.
இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கபாலி கண்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று இரவு கபாலி கண்ணனின் மகன் நவீன், அவரது நண்பர்கள் சுடலைக்கண்ணு, முருகேசன், ராஜா மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உள்பட 9 பேர் கையில் அரிவாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வானுமாமலை வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு பேசிக்கொண்டிருந்த வானுமாமலையின் தம்பி செல்வம், மைத்துனர் சுடலைமுத்து ஆகியோர் கும்பலை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வானுமாமலையின் தாயார் ஆறுமுகம், சித்தி விஜயா ஆகியோரை அரிவாளை காட்டி மிரட்டி அவதூறாக பேசினர். இதைப்பார்த்த வானுமாமலையின் மனைவி முத்துலெட்சுமி வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து நவீன் உள்ளிட்ட 9 பேரும் வீட்டுக்குள் பெட்ரோல் வெடிகுண்டை வீசினர். இதனால் வீட்டில் இருந்த சோபா, டேபிள் உள்ளிட்ட பொருட்கள் தீ பற்றி எரிந்தன. வீட்டு கதவு, ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் உடைத்தனர். டேபிளில் இருந்த ரூ.84 ஆயிரத்தையும் அந்த கும்பல் திருடிச்சென்றதாக கூறப்படு கிறது.
அத்துடன் வானுமாமலையின் இட்லி கடைக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது. தொடர்ந்து வானுமாமலையின் மாமனாரான ராமையா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசியது. இதில் அந்த வீடுகளின் முன்புள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
இதுபற்றி வானுமாமலை நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நவீன் உள்பட 9 பேர் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
- நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ. உ. சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது
- மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி, தீயணைப்பு வீரர்களின் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
நெல்லை:
76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உற்சாகமாக கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
வ.உ.சி. மைதானம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ. உ. சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி, தீயணைப்பு வீரர்களின் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கவுரவிப்பு, மாவட்டம் மற்றும் மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கார்த்திகேயன் வழங்குகிறார்.
இதனையொட்டி பாளை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 நாட்களாக போலீசார், என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் வ.உ.சி. மைதானத்தில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையம்
நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லைகளில் நிறுத்தி சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமயில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளங்கள், பிளாட்பாரங்கள் உள்ளிட்ட பகுதியில் மெட்டல் டிரெக்டர் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ரெயில் நிலைய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை இருப்புபாதை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ், சத்தியராஜ், சங்கரபாண்டியன், ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், அருள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
- திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு உரிமையாளா்கள் உடனடியாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். மேலும், அவற்றின் இருப்பிடங்களின் பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளை விக்கக்கூடிய கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும். கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடியாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். மேலும், சாலையோரங்களில் உள்ள கால்வாய்களில், சாலை பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, சாலை யோரங்களில் கட்டுமான பணிக்காக
தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களின் இருப்பை அறிவுறுத்தும் பொருட்டு டிரைவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணிகளை விரைந்து செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






