search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாங்குநேரியில் முன்விரோதத்தில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
    X

    நாங்குநேரியில் முன்விரோதத்தில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

    • வானுமாமலையின் இட்லி கடைக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.
    • வானுமாமலையின் மாமனாரான ராமையா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசியது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் வானுமாமலை(வயது 27). இவர் அப்பகுதியில் இட்லி கடை வைத்துள்ளார்.

    இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கபாலி கண்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று இரவு கபாலி கண்ணனின் மகன் நவீன், அவரது நண்பர்கள் சுடலைக்கண்ணு, முருகேசன், ராஜா மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உள்பட 9 பேர் கையில் அரிவாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வானுமாமலை வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு பேசிக்கொண்டிருந்த வானுமாமலையின் தம்பி செல்வம், மைத்துனர் சுடலைமுத்து ஆகியோர் கும்பலை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வானுமாமலையின் தாயார் ஆறுமுகம், சித்தி விஜயா ஆகியோரை அரிவாளை காட்டி மிரட்டி அவதூறாக பேசினர். இதைப்பார்த்த வானுமாமலையின் மனைவி முத்துலெட்சுமி வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து நவீன் உள்ளிட்ட 9 பேரும் வீட்டுக்குள் பெட்ரோல் வெடிகுண்டை வீசினர். இதனால் வீட்டில் இருந்த சோபா, டேபிள் உள்ளிட்ட பொருட்கள் தீ பற்றி எரிந்தன. வீட்டு கதவு, ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் உடைத்தனர். டேபிளில் இருந்த ரூ.84 ஆயிரத்தையும் அந்த கும்பல் திருடிச்சென்றதாக கூறப்படு கிறது.

    அத்துடன் வானுமாமலையின் இட்லி கடைக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது. தொடர்ந்து வானுமாமலையின் மாமனாரான ராமையா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசியது. இதில் அந்த வீடுகளின் முன்புள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

    இதுபற்றி வானுமாமலை நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நவீன் உள்பட 9 பேர் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×