என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.
    • ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

    திருச்சி:

    பாதுகாப்பான பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நெடுந்தூர விரைவு தொடர்வண்டிகளிலும், 100க்கும் மேற்பட்ட மின்தொடர் வண்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

    நெடுந்தூரம் செல்பவர்கள் பஸ் பயணத்தைவிட ரெயில் பயணத்தை தான் அதிகம் விரும்புவார்கள். அதுவும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி செல்வது தனி சுகம். கூட்டம் நெரிசல் இருந்தால் சிலர் படிகட்டுகள் அருகே அமர்ந்து செல்வதும் உண்டு. அவ்வாறு அமர்ந்து செல்பவர்கள் தங்களது செல்போன்களை பார்த்த படியே செல்கின்றனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளை கும்பல் ரெயில் பயணிகளிடம் செல்போன்கள், நகைகளை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர். இதனால் சிலர் தங்களது விலை உயர்ந்த செல்போன்களை பறிகொடுப்பதுடன் அதில் உள்ள முக்கிய ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றனர்.

    இது குறித்து ரெயில் பயணிகள் கூறும்போது:

    பஸ்சை விட ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று நினைத்து அதிகளவிலான பயணிகள் ரெயிலில் பயணிக்கின்றனர். ஆனால், அவர்களது நம்பிக்கையை சிதைக்கும் வகையில், சம்பவங்கள் தொடர்கின்றன.

    ரெயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த கும்பல் ரெயில் வந்துநிற்கும் போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களை குறிவைத்து அவர்கள் அருகில் வந்து நின்று கொள்கிறார்கள். ரெயில் புறப்படும் போது அவர்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் கிடக்கும் நகைகள், கையில் வைத்திருக்கும் செல்போன்களை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர்.

    கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நெல்லை செல்லும் ரெயிலில், திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் முதல்நிலை காவலர் ஒருவர், திருச்சிக்கு பயணம் மேற் கொண்டார். இவர் ரெயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு தனது மனைவியிடம் செல்போனில் பேசிக்கொண்டு வந்தார்.

    விழுப்புரம் அருகே வந்த போது ரெயிலின் வேகம் குறைந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் கல்லால் அவரை தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். இதில் காவலரின் கண், பற்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.

    இரவு நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களில் போதிய போலீசார் இல்லாததால், வழிப்பறி கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    பல ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதி இல்லாததால், அதை தங்களுக்கு சாதகமாக மர்ம கும்பல் பயன்படுத்தி கொள்கிறது. இதனால், ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

    எனவே தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களாக உள்ள சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, அரக்கோணம் ரெயில் நிலையங்கள் மற்றும் வேகம் குறைவாக செல்லும் இடங்களில் போதுமான ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை தடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.

    • மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.
    • தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மையப் பகுதியில் இருக்கும் காந்தி மார்க்கெட் மாநகர் மற்றும் புறநகர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அண்டை மாவட்ட மக்களின் காய்கறி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இங்கு தினமும் 15 லோடு தக்காளி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள்.

    தற்போது வெளி மாநிலத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ள காரணத்தினால் ஆந்திர, கர்நாடக தக்காளி வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெளிமாநில தக்காளி வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் தக்காளியும் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

    இது தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரிகள் சங்க தலைவர் கலீலுல் ரகுமான் கூறும்போது, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று 25 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.900 முதல் ரூ.1100 வரை விற்பனை ஆனது. தற்போது திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட உள்ளூர் தக்காளி வரத்தை மட்டுமே உள்ளது. ஆந்திரா தக்காளி ஒரு பெட்டிக்கு அங்கேயே ரூ. 1500 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும்போது ரூ.2000 வரை விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும்.

    ஆகவே இங்குள்ள வியாபாரிகள் வெளி மாநில தக்காளி வாங்குவதை நிறுத்திவிட்டனர். இன்று 8 லோடு உள்ளூர் தக்காளி மட்டுமே திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வந்தது. அவ்வளவும் உடனடியாக விற்பனையாகி விட்டது. கடுமையான வெயிலின் காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மேலும் உயரம் வாய்ப்பு உள்ளது என்றார்.

    திருச்சி காந்தி மார்க்கெட் சில்லரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று 50 முதல் 60 வரை விற்கப்பட்டது.

    இதேபோன்று மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று மேலும் வரத்து குறைந்து நல்ல தேங்காய் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சில்லரை சந்தைகளில் ஒரு தேங்காய் ரூ.30 முதல் 40 வரை விலை நிர்ணயம் செய்திருந்தனர். தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும்.
    • அர்ஜூனின் தனிப்பட்ட கருத்து முதிர்ச்சியற்ற கருத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர்.

    திருச்சி:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

    ஆதவ் அர்ஜூனின் தனிப்பட்ட கருத்து முதிர்ச்சியற்ற கருத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர்.

    துணை முதல்வர் பதவி குறித்து ஆதவ் அர்ஜூன் பேசியது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு குறித்து முதன்மை செயலாளரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

    • பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்துகள் கலப்பதாக சேர்ப்பதாக மோகன் ஜி பேசிய வீடியோ வைரலானது.
    • சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

    பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்துகள் கலப்பதாக சேர்ப்பதாக மோகன் ஜி பேசிய வீடியோ அண்மையில் இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து சென்னை காசிமேட்டில் இருக்கும் இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை திருச்சி போலீசார் கைது செய்தனர். மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜியை நீதிமன்ற ஜாமினில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மோகன் ஜி கைதிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனமுடைந்த ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் பொன்னையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி சேர்ந்தவர் ஷாலினி (வயது 27). எம்ஏ பட்டதாரி. ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பால்பண்ணை விஸ்வாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் தனிமையில் சந்தித்தனர். அப்போது திருமண ஆசை காட்டி பொன்னையன் ஷாலினியுடன் உல்லாசமாக இருந்தார். இதில் அவர் கர்ப்பம் ஆனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முறையிட்டார்.

    அப்போது பொன்னையன் கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டால் அக்கம் பக்கத்தினர் அசிங்கமாக பேசுவார்கள். கர்ப்பத்தை கலைத்து விடு. நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என உறுதி அளித்தார். இதை நம்பிய ஷாலினி தனது கர்ப்பத்தை கலைத்தார். அதன் பின்னர் திருமணத்தை தள்ளிப் போட்டார்.

    இதனால் மனமுடைந்த ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே தகவல் அறிந்த பொன்னையன் காதலியை பார்க்க ஓடி சென்று மருத்துவமனையில் அவரை கவனித்துக் கொண்டார். அப்போது மீண்டும் திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்ததால் உறவினர்கள் பிரச்சனையை காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டனர்.

    பின்னர் மருத்துவ மனையில் இருந்து ஷாலினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன் பின்னர் பொன்னையன் அவருடன் ஆன உறவை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாலினி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் கமிஷனர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பொன்னையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பிரபல ரவுடி தலை வெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
    • கணவன், மனைவி இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில்வே பி. கிளாஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற ஆட்டுக்குட்டி சுரேஷ் (வயது 33 ). பூ வியாபாரியான இவர் பாமக ஸ்ரீரங்கம் பகுதி முன்னாள் தலைவர்.

    இவர் கடந்த 2020ம் ஆண்டு ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை வெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் பாதுகாப்பு கருதி வெளியூரில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

    பின்னர் சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் நேற்று மாலை தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கணவன், மனைவி இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

    ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் வந்தபோது 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.

    பின்னர் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுரேஷை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

    அப்போது தடுக்க முயன்ற அவரது மனைவி ராகினியின் காலில் அரிவாள் விட்டு விழுந்தது. இந்த சம்பவத்தில் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்தில் இறந்தார். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் கொலை வழக்கில் தேடப்பட்ட ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரவுடி தலைவெட்டி சந்துருவின் கூட்டாளிகள் நந்தகுமார், ஜம்புகேஸ்வரன், சூர்யா, பாலகிருஷ்ணன், விமல் ஆகிய 5 பேரை நள்ளிரவு சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் தலை வெட்டி சந்துரு என்கிற சந்திர மோகன் வழக்குக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது. கைதான ஐந்து பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    • மீண்டும் தவறுகள் நடக்காதபடி கவனித்து கொள்வதாக மருத்துவர்கள் உறுதி அளித்தார்கள்.
    • லால்குடி சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுற்றுப்பயணம் செல்லும் பகுதிகளில் முன் அறிவிப்பு இல்லாமல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பார்ப்பது வழக்கம்.

    தற்போது திருச்சி பகுதியில் இருக்கும் அவர் இன்று அதிகாலையில் நடைபயிற்சியை முடித்து விட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென்று சென்றார்.

    அப்போது காலில் அடிபட்டிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் தவழ்ந்து வந்ததை பார்த்தார். அவரை சக்கர நாற்காலியில் அழைத்து செல்ல ஆஸ்பத்திரி ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை. அந்த நோயாளியிடம் அமைச்சர் விசாரித்து விட்டு சக்கர நாற்காலி எடுத்து வரும்படி கூறினார்.


    அமைச்சர் வந்திருப்பதை அறிந்ததும் ஓடி வந்தார்கள் ஊழியர்கள். பின்னர் அவரை சக்கர நாற்காலியில் ஏற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார். அவருக்கு செலவுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

    மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி மற்றும் நோயாளிகள் சிலரது உறவினர்களிடம் ஆஸ்பத்திரியில் நன்றாக கவனிக்கிறார்களா? ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டார்.

    அதன் பிறகு ஆஸ்பத்திரிக்குள் சென்றவர் மருத்துவர்களிடம் நடக்க இயலாதவர் தவழ்ந்து வந்ததை சுட்டிக்காட்டி இதை =யெல்லாம் கவனிக்க வேண்டாமா? என்று கடிந்து கொண்டார்.

    மீண்டும் தவறுகள் நடக்காதபடி கவனித்து கொள்வதாக மருத்துவர்கள் உறுதி அளித்தார்கள். பின்னர் லால்குடி சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    • கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும் இடையூறு ஏற்பட்டது.
    • போலீசார் விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருவானைக்காவல் கொள்ளிடம் அழகிரிபுரம் செக் போஸ்ட் பகுதியில் ஒரு பிரியாணி கடை உள்ளது. இதை அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது30) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இவரது கடையில் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் வந்தது. வாகனத்தில் வந்தவர்கள் அதை விக்னேசின் கடை முன்பாக நிறுத்திவிட்டு மற்றொரு கடைக்கு சென்றனர். நேரம் ஆகியும் வேனை எடுக்கவில்லையாம். இதனால் விக்னேஷின் கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவது பாதித்தது.

    மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் கடைக்காரர் விக்னேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் குடிபோதையில் வந்த அவர் அங்கிருந்த காவல்துறை வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து வாகனத்தை அடித்து நொறுக்கிய விக்னேசை பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சில முட்டைகளை ஓட்டலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.
    • 4 பேரை பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    திருச்சி:

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது. இத தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர், சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு ஓட்டலில் இலவச முட்டை விற்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சத்துணவு முட்டை பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கிருந்த 5 முட்டைகளில் தமிழக அரசால் மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் இலவச முட்டைக்கான முத்திரை இருந்தது தெரியவந்தது. இதுபற்றி ஓட்டல் நடத்தி வந்த பெண் உரிமையாளர் ஜீனத்குபுராவிடம் (வயது 61) விசாரித்தபோது, அவர் தனது அக்காள் சல்மாதான் (66), பக்கத்து தெருவில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளரான சத்யா (43) என்ற பெண்ணிடம் இருந்து ஒரு அட்டை (30 முட்டை) ரூ.110 வீதம் 2 அட்டை முட்டைகளை வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.

    உடனே, அதிகாரிகள் குழுவினர் சத்யா வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, முட்டை வியாபாரியான அவருடைய கணவர் ரகுராமன் சப்-கான்டிராக்ட் எடுத்து சத்துணவுக்கு முட்டைகளை வினியோகம் செய்வதும், அதில் சில முட்டைகளை ஓட்டலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சத்யா, அவருடைய கணவர் ரகுராமன், ஓட்டல் உரிமையாளர் ஜீனத்குபுரா, அவருடைய அக்காள் சல்மா ஆகிய 4 பேரையும் பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரும் நீததி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதை தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர் சத்யா, ஓட்டல் உரிமையாளர் ஜீனத்குபுரா, அவரது அக்காள் சல்மாதான் ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், சத்யாவின் கணவர் ரகுராமன் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    • விமானத்தில் 176 பயணிகள் பயணம் செய்தனர்.
    • ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    தற்போது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை முதல் துவங்கியது.

    இந்த விமானம் ஆனது நேரடியாக திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு இயக்கப்படும். இதன் முதல் சேவை துவக்கமானது நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த சேவையானது வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பேங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளது.


    இந்த விமான சேவை துவக்க நாளான நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த விமானமானது மேற்கண்ட மூன்று நாட்களில் இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடைந்து மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பேங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு பேங்காக்கில் இருந்து திருச்சி வந்து விமானத்தில் 46 பயணிகளும் மீண்டும் திருச்சியில் இருந்து பேங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் பயணம் செய்தனர்.

    • ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.
    • சஸ்பெண்டு நடவடிக்கை பாயும்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரத்னா ஓட்டலில் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முட்டைகளைக் கொண்டு ஆம்லெட், ஆப் பாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்டின் ஜோ தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஓட்டலின் சமையலறையில் தமிழக அரசின் சார்பில் விநியோகம் செய்யப்படும் 111 முட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் ஒஒட்டல் உரிமையாளரான தேவரப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (46) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ரத்தினம் மதுராபுரி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் வசந்தகுமாரி (58) என்பவரிடமிருந்து பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளரான வசந்த குமாரியையும் துறையூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதை தொடர்ந்து வசந்தகுமாரி திருச்சி மகளிர் சிறையிலும், ரத்தினம் துறையூர் கிளை சிறையிலும் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் ஓட்டலை ஆய்வு செய்ததில், சுகாதாரமற்ற முறையில் ஒட்டலை பராமரித்தது தெரியவந்தது.

    இதை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினர் வட்டாட்சியர் உதவியுடன் ஓட்டலை மூடி சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே அரசின் இலவச முட்டைகள் ஓட்டளுக்கு சப்ளை செய்யப்பட்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    இதனால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

    • தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
    • ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

    துறையூர்:

    தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளித்தல், முன்பருவ கல்வி, சுகாதாரம், தன் சுத்தம், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மதிய உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் மதிய உணவு உடன் இலவசமாக முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தமிழக அரசின் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இந்த முட்டைகளை அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து முட்டைகளை தனியார் ஓட்டலுக்கு விற்பனை செய்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் ஆகியோர் மீது காவல்துறை மூலம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விவரம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த ஓட்டலில் சோதனை நடத்தினர். பின்னர் தாசில்தார் மோகன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் துறையூர் தனியார் ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து இந்த முட்டைகள் ஓட்டலுக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி(58) என்பவர் ஓட்டல் உரிமையாளர் ரத்தினம்(46) என்பவரிடம் முட்டைகளை விற்றுள்ளார்.

    இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்தீன் ஜோ துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி, ஓட்டல் உரிமையாளர் ரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்? யார் உள்ளனர்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில்' இதுபோன்ற முறைகேடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையிலான வருகையினை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×