என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • இந்து சமய முறைப்படி திருமணம் நடை பெற்றது.
    • மணப்பெண்ணின் தாய் வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்தினார்.

    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ரசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதிவதணன் (வயது31). டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கப்பூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.

    அதே நிறுவனத்தில் வேலை செய்யும் மியான்மர் நாட்டை சேர்ந்த ஏய் ஏய் மோ(33) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மதிவதணனுக்கு பெண் பார்ப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

    இதனைக் கேட்ட மதிவதணன், தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி மதிவதணன் தனது காதலியுடன் அரியலூருக்கு வருகை தந்தார். பின்னர் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து சமய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    அப்போது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏய்ஏய்மோ கழுத்தில் மதிவதணன் தாலி கட்டினார். மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு விமான டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மணப்பெண்ணின் தாய் வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்தினார்.

    • இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.
    • திருச்சி லால்குடியில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திருச்சி:

    வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவானதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி திருச்சி, கரூர், அரியலூர்,பெரம்பலூர் ,புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையினால் திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று கலெக்டர் பிரதீப் குமார் விடுமுறை அறிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் ரத்தினசாமி விடுமுறை அளித்தார்.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் அருணா விடுமுறை அறிவித்து உள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்று பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    திருச்சி மாவட்டத்தில் மாநகர் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று விடிய விடிய மழை பெய்தது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இடைவிடாத மழையினால் ஊட்டி போன்ற குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    திருச்சியில் அதிக பட்சமாக லால்குடியில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தின் இதர பகுதிகளான கள்ளக்குடி 18.4, நந்தியாறு அணைக் கட்டு 9.2,புள்ளம்பாடி 21.8, தேவி மங்கலம் 12.4, சமயபுரம் 17,சிறுகுடி 22.2, வாத்தலை அணைக்கட்டு 18.4,மணப்பாறை 6,பொன்னடியாறு அணை 8, கோவில்பட்டி 14.2, மருங்காபுரி 13.4, முசிறி 13, புலிவலம் 4, தாப்பேட்டை 12, நவலூர் கொட்டப்பட்டு 11 ,துவாக்குடி 22.5, கொப்பம்பட்டி 11, தென்பர நாடு 16, துறையூர் 13, பொன்மலை 16.4, திருச்சி ஏர்போர்ட் 18.4, திருச்சி ஜங்ஷன் 17.6, திருச்சி டவுன் 17.3 என்ற மில்லி மீட்டர் அளவில் மழை பதிவானது.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரியலூர் புதுமார்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்தி சந்தை, வெள்ளாளத் தெரு, பெரம்பலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே பெரம்ப லூர் தஞ்சாவூர் சாலையில் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு வாகனங்கள் சென்றன.

    ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், கீழப்பழுவூர், திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இந்த மழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    பெரும்பாலன பகுதி களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-

    அரியலூர்-27 , திருமானூர்-31 , ஜெயங்கொண்டம்-50, செந்துறை-27.8, ஆண்டிமடம்-16.8, குருவாடி-27, தா.பழுர்-23.2, சுத்தமல்லி டேம்-45.

    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 247.8 மி.மீ.மழை பெய்துள்ளது. இதன் சராசரி 30.97 மி.மீட்டர் ஆகும். இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. காலையிலும் மழை பெய்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் விடிய விடிய மழை பெய்தது சில இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்ச மாக அயன்குடி பகுதியில் 57.40 மில்லி மீட்டர் மழை பதிவானது இதர பகுதி களான கந்தர்வகோட்டை 23.40 , கறம்பக்குடி 41.20 ,மலையூர் 30.20, கிளநிலை 14.60, திருமயம் 12.30, அரிமளம் 21.60,

    அறந்தாங்கி 32, நகுடி 39 . 40, மீமிசல 18.40, ஆவுடையார் கோவில் 19 .80,மணமேல்குடி 20, இலுப்பூர் 8 குடுமியான்மலை 14 அன்ன வாசல் 5.40 விராலிமலை 3 உடையாளிப்பட்டி 9 கீரனூர் 16.80 பொன்னம ராவதி 8 ,புள்ளி 20 ,கரையூர் 9.20 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 489. 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. இது சராசரி மழை அளவு 20.40 ஆகும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக இங்கு மழை நீடித்துள்ளது மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 178 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    அதன்படி பெரம்பலூர் 11, இறையூர் 17, கிருஷ்ணாபுரம் 16, வி களத்தூர் 15 , தழுதலை 25, வேப்பந்தட்டை 27, அகரம் சீ கூர்17, லப்பை குடிக்காடு 13 புது வெட்டக்குடி 17 பாடாலூர் 13, செட்டிகுளம் 5 என மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று 99.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30-ந் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டு 3 கிலோ 600 கிராம் எடையில் 60 சென்டிமீட்டர் நீளமும் இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அது கொரியப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அந்த ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். அது அந்தநல்லூர் பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காவிரி ஆற்றில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று மிதந்து வந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராக்கெட் லாஞ்சரை பத்திரமாக மீட்டு அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். பின்னர் ராக்கெட் லாஞ்சரை அறிவியல் நிபுணர்கள் உடன் இணைந்து மண்ணுக்குள் பாதுகாப்பாக புதைத்து வைத்தனர்.

    இதனையடுத்து, வெடி குண்டை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் உடன் இணைந்து இதனை வெடிக்கச் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி காவிரியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த குண்டினை ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அந்த குண்டு கொள்ளிடம் ஆற்றில் மணலுக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்க செய்யப்பட்டது. ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் தான் முக்கொம்பு சுற்றுலா மையம் அமைந்துள்ளது.

    முக்கொம்பு நடுக்கரை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகள் தமிழகத்தில் தங்கி பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

    அவகள் பயிற்சிக்கு பயன்படுத்திய ராணுவ தளவாடங்களை விட்டு சென்றிருக்கலாம் என்றும், அதில் மணல் அரிப்பு காரணமாக ராக்கெட் குண்டுகள் வெளியே வந்து கண்ணில் பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி., கே.என். அருண் நேருவின் அலுவலகத்தை திறக்கிறார்.
    • கடலூர் துறைமுகம் சங்கரன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    திருச்சி:

    திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.

    இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடையும் அவர் மாலை 4 மணிக்கு கார் மூலமாக துறையூர் புறப்பட்டு செல்கிறார்.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு துறையூர் ஆஸ்பத்திரி சாலை ரத்னா காம்ப்ளக்ஸில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    மாலை 5.45 மணிக்கு துறையூர் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி., கே.என். அருண் நேருவின் அலுவலகத்தை திறக்கிறார்.

    மாலை 6 மணிக்கு துறையூர் பஸ் நிலையம் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.

    பின்னர் துறையூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செல்கிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் வி.பி.என். திருமண மண்டபத்தில் நடைபெறும் மீனவர் அணி துணை செயலாளர் அக்கரைப்பேட்டை மனோகரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதன் பின்னர் காலை 11 மணிக்கு நாகப்பட்டினம் அவுரி திடலில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    மதியம் 12 மணிக்கு நாகப்பட்டினம் ஏ.எஸ்.ஏ. திருமண மஹாலில் திமுக சார்பு அணி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    அதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மயிலாடுதுறை சிக்னேச்சர் திருமண மண்டபத்தில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதல் நிகழ்ச்சியாக கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி கம்மியம்பேட்டையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குகிறார். காலை 11:15 மணிக்கு கடலூர் துறைமுகம் சங்கரன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    அதன் தொடர்ச்சியாக காலை 11. 45 மணிக்கு கடலூர் துறைமுகம் எம்.எம்.எம். திருமண மண்டபத்தில் தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு கடலூர் அண்ணா நகர் சி.கே. பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குகிறார் பின்னர் மாலை 4:30 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் கலந்து கொள்கிறார்.

    • கோவில்கள் மற்றும் தனியார் வசம் இருந்து மீட்கப்படும் யானைகளுக்கு இங்கு புத்துணர்வு அளிக்கப்படுகிறது.
    • காட்டுக்குள் இருப்பது போன்று யானைகள் இங்கு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

    திருச்சி:

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உள்பட 2 பேர்பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கோவில் யானைகளை பராமரிப்பவர்கள், தனியார் யானை பராமரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

    இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவில் யானை மற்றும் தனியார் யானை பராமரிப்புகளுக்கு தமிழக அரசின் வனத்துறை வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது.

    அதனை பின்பற்றாதது விபரீதங்களுக்கு காரணமாக அமைகிறது. கோவில் யானைகள் மற்றும் 24 மணி நேரமும் கட்டிப் போடப்படும் தனியார் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    திருச்சி அருகே எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. 50 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக அமைந்துள்ள இந்த மையத்தில் உள்ள யானைகள் தினமும் உற்சாக குளியல், நடைப்பயிற்சி என குதூகலமாக இருக்கின்றன. வனச்சரக அலுவலர் வி பி சுப்பிரமணியம் தலைமையிலான வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கோவில்கள் மற்றும் தனியார் வசம் இருந்து மீட்கப்படும் யானைகளுக்கு இங்கு புத்துணர்வு அளிக்கப்படுகிறது. தினமும் யானைகளூக்கு காலை 6 மணிக்கு யானைகள் எழுந்தவுடன் 8 முதல் 12 கிலோமீட்டர் தூரம் வரை நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் சிறிய குளியல் போடுகிறது.

     

    அதன் பின்னர் கால் நகத்துக்கு இடையில் வியர்வை சுரப்பி இருப்பதால் புட் கேர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் வேப்ப எண்ணெய், கட்டி கற்பூரம், பூண்டு உள்ளிட்டவை கலந்து காய்ச்சி டெக்காமலி ஆயில் போட்டு தடவி விடுகிறார்கள். இதன் மூலம் கிருமிகள் அதனை அண்டாமல் பாதுகாக்கிறார்கள். அதன் பின்னர் காலை 9 மணிக்கு திட உணவு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் மண் குளியல் குளியல், நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வப்போது சோளத்தட்டை மர இலை போன்ற தீவனங்கள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு நாள் முழுவதும் யானைகள் புத்துணர்வுடன் பராமரிக்கிறார்கள். இது தொடர்பாக வனச்சரக அலுவலர் வி பி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    தற்போது எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 10 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 11 யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது. அதனை காப்பாற்ற பலகட்ட முயற்சிகள் எடுத்தோம். பலனளிக்கவில்லை.

     

    வனத்துறை சார்பில் 7 பேர் இங்கு பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு யானையையும் பராமரிக்க மாவூத், காவடி என 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காட்டுக்குள் இருப்பது போன்று யானைகள் இங்கு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. பொதுவாகவே வனத்துறை சார்பில் கோவில் மற்றும் தனியார் யானைகளுக்கு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் யானைகளை வேறு நபர்கள் தொடுவது ,உணவு கொடுப்பது, ஆசீர்வாதம் வாங்குவது போன்றவை கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை கோவில் யானை பராமரிப்பாளர்கள் மற்றும் தனியார் யானை பாகன்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் இந்த விதிமுறைகளை பின்பற்றினால் அசம்பாவிதங்களை தடுக்கலாம் .

    இவ்வாறு அவர் கூறினார். 

     

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் படிப்பகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
    • நூலகத்தில் 3000 நூல்கள் இடம் பெறுகிறது. ஒரே நேரத்தில் 20 முதல் 25 பேர் வரை அமர்ந்து படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி:

    தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை (சனிக்கிழமை) திருச்சிக்கு வருகை தருகிறார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் 1 மணிக்கு திருச்சி வந்தடையும் அவருக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கார் மூலம் துறையூர் புறப்பட்டு செல்கிறார்.

    பின்னர் அங்கு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கலைஞர் சிலை அமைக்க வேண்டும் என்ற கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று துறையூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆளுயுர வெண்கல சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    அதன் பின்னர் பெரம்பலூர் பஸ் நிலையம் தர்மன் காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி. அருண் நேருவின் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

    அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் படிப்பகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த நூலகத்தில் 3000 நூல்கள் இடம் பெறுகிறது. ஒரே நேரத்தில் 20 முதல் 25 பேர் வரை அமர்ந்து படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய மாவட்ட திமுக சார்பில் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் அவருக்கு தாரைதப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நொச்சியம், மணச்சநல்லூர், திருவெள்ளறை, புலிவலம், கரட்டாம்பட்டி, பகலப்பாடி, காளிப்பட்டி ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., வைரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவரை வரவேற்று கட்சி கொடி தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    • சின்னம்மாள் உறவினர் ஒருவரின் கையை பிடித்து தண்ணீர் வேண்டும் என்று சைகையால் கூறினார்.
    • இறந்து சுடுகாடு வரை சென்று மீண்ட மூதாட்டி சின்னம்மாளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரியை அடுத்த கருமலை சுரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பம்பையன் (வயது 72). இவரது மனைவி சின்னம்மாள் (62). இவர்கள் பூந்தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த 16-ந்தேதி சின்னம்மாள் திடீரென்று விஷத்தை குடித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் சின்னம்மாளை மீட்டு துவரங்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.

    இருந்த போதிலும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனால் அவரது உறவினர்கள் சின்னம்மாளை வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.

    இதையடுத்து நேற்று ஆம்புலன்ஸ் மூலம் சின்னம்மாளை வீட்டுக்கு கொண்டு சென்றனர். வழியில் அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாச கருவியை எடுத்தனர். இதனால் அவரது உடல் அசைவின்றி காணப்பட்டது.

    இதையடுத்து சின்னம்மாள் இறந்து விட்டதாக கருதி வீட்டுக்கு செல்லாமல் நேராக சுடுகாட்டுக்கு ஆம்புலன்ஸ் சென்றது. இந்த சம்பவம் குறித்து சின்னம்மாளின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    உறவினர்கள் பதறியபடி ஓடிவந்தனர். சுடுகாட்டில் சின்னமாளுக்கு இறுதி சடங்கு நடந்தது. பின்னர் உடலை எரிப்பதற்காக தகன மேடையில் எடுத்து வைத்தனர். அப்போது உறவினர்கள் சின்னம்மாளை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

    திடீரென்று சின்னம்மாள் உறவினர் ஒருவரின் கையை பிடித்து தண்ணீர் வேண்டும் என்று சைகையால் கூறினார். இதனால் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் அவர் உயிர் பிழைத்ததகா கருதி மகிழ்ச்சி அடைந்தனர்.

    பின்னர் ஆம்புலன்சை திரும்ப வரவழைத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சின்னம்மாளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்து சுடுகாடு வரை சென்று மீண்ட மூதாட்டி சின்னம்மாளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    • எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்.
    • கூட்டணிக்கு வருபவர்கள் ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்.

    திருச்சி மாவட்ட அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "பல முனைகளில் இருந்து அ.தி.மு.க.-வை தாக்கி வருகிறார்கள். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்."

    "அ.தி.மு.க. கட்சியின் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது. கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்."

    "கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணிக்கு செல்பவர்கள் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார்," என்று கூறினார். 

    • பிறந்த ஊர் மற்றும் பிறப்பு தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்தவர் அமீர் ஹுசைன் (வயது 48). இவர் நேற்று முன்தினம் அபுதாபி செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அமீர் ஹுசைன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பெற்றோர் பெயர், பிறந்த ஊர் மற்றும் பிறப்பு தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

    அவரை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சிவகங்கை திருப்பத்தூரை சேர்ந்தவர் கதிரேசன் (47). இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார்.

    இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் கதிரேசனின் ஆவணங்களை சோதனை மேற்கொண்டனர். இதில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.
    • இந்திய மருத்துவ கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் முகேஷ் மோகன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    திருச்சி:

    சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவ மனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் எரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் முன்பு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் இந்திய மருத்துவ கழகம் ஆகியோர் இணைந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், தொடர்ந்து மருத்துவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் மருத்துவர் அருளீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மூத்த மருத்துவர்கள் அஷ்ரப், குணசேகரன், இந்திய மருத்துவ கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் முகேஷ் மோகன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    • டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
    • ஜனவரி 10-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 9-ந்தேதி மோகினி அலங்காரமும், 10-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 16-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது.

    அதுசமயம் முகூர்த்த பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல் காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு துறையூர் சார் நிலை கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரெங்கராஜன் கடந்த 2015ம் ஆண்டு இயற்கையாக மரணமடைந்துள்ளார்.

    ரெங்கராஜனின் வாரிசுகளான மனைவி ஜெயக்கொடி மற்றும் மகன் ஜெயதேவன் ஆகிய 2 பேரும், அவரின் இறப்பு குறித்து சார்நிலை கருவூலத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். மேலும் கருவூலம் மற்றும் கணக்கு துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உயிருடன் உள்ளனரா? என்பதை அறிய நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு வர இயலாதவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் இருந்து ஓய்வூதிய உயிர் வாழ் சான்று பெற்று சார்நிலை கருவூலத்தில் அளிப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வூதியர்கள் அளிக்கும் உயிர்வாழ் சான்றினை இறந்த ரெங்கராஜனின் வாரிசுகள் பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.

    இவ்வாறு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஓய்வூதியத்தை ஜெயக்கொடி மற்றும் ஜெயதேவன் ஆகிய இருவரும் பல்வேறு தவணைகளில், பல்வேறு காசோலைகள் வாயிலாக கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.49 லட்சத்து 69 ஆயிரத்து 279 வரையிலான தொகையினை அரசினை ஏமாற்றி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நேர்காணலுக்கு ரெங்கராஜன் வராததால், சந்தேகமடைந்த கருவூல அதிகாரிகள் ரெங்கராஜனின் இருப்பிட முகவரிக்கு நேரில் சென்று விசாரணை செய்த போது, ரெங்கராஜன் கடந்த 2015ம் ஆண்டே இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கடந்த வருடம் அளித்த ஓய்வூதிய உயிர் வாழ் சான்றினை ஆய்வு செய்ததில், 2015 ஆம் ஆண்டு இறந்த ரெங்கராஜனுக்கு மாராடி கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா என்பவர் 26.9.2022 அன்று ரெங்கராஜன் உயிருடன் இருப்பதாக கூறி, உயிர் வாழ் உறுதி சான்று அளித்ததை அறிந்து அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் மோசடி நடைபெற்ற விதம், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றி விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அருகே இறந்தவரின் இறப்பை மறைத்து மோசடியாக ஓய்வூதியம் பெற்று வந்து, தற்சமயம் வெளியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×