என் மலர்
திருச்சிராப்பள்ளி
- பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும்.
- 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
திருச்சி:
108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும்.
மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதை யொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார்.
மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம் , திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்ச வத்தின் 10-வது நாள் (9-ந்தேதி) நம்பெருமாள் நாச்சி யார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திரு க்கும். 17-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திரு நாளான 16-ந்தேதி நம்பெரு மாள் திருக்கைத்தல சேவை யும், எட்டாம் திருநாளான 17-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சி யும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பா டுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்மு ருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- நடுகற்களை ஆற்றுப்படை பாரம்பரிய குழுவை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர்.
- உள்ளூர் வாசிகள் நடு கற்களை பட்டவன் சாமி என்று குறிப்பிடுகிறார்கள்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை தாங்கி நிற்கிறது. இங்கு சோழர் மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்து பல்வேறு சான்றுகள் கிடைத்து உள்ளன. ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் 1801-ம் ஆண்டு மருது சகோதரர்களால் ஜம்பு தீவு பிரகடனம் (ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட தேவையில்லை) மலைக்கோட்டை வாசலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தநிலையில் திருவெறும்பூர் அருகே வீதி வடங்கம் கிராமத்தில் உள்ள அரசாயி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நடுகற்களை ஆற்றுப்படை பாரம்பரிய குழுவை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர். உள்ளூர் மக்களின் காவல் தெய்வமாக இருக்கும் இந்த கோவிலில் நடுகற்களுக்கு அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆனால் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதில் ஒரு நடு கல் 2 அடி உயரத்திலும், இன்னொன்று 3.5 அடி உயரத்திலும் உள்ளது. உயரமான கல் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும், மற்ற இரண்டு கற்களும் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் ஆற்றுப்படை பாரம்பரிய குழுவின் நிறுவனர் வி பார்த்திபன் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, `உள்ளூர் வாசிகள் அந்த நடு கற்களை பட்டவன் சாமி (வீழ்ந்த மாவீரர்கள்) என்று குறிப்பிடுகிறார்கள். அந்த கற்களில் பொறிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள், வாள்கள், கேடயங்கள் மற்றும் அம்புகளுடன் கூடிய வில் ஆகியவை அது வீர கற்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது' என்றார்.
மேலும் அவர் கூறும் போது, `திருவெறும்பூர் பகுதியில் வரலாற்று ரீதியாக நாயக்கர் காலத்தில் பல மோதல்கள் நடந்துள்ளன. குறுநில மன்னர்களுக்கும் நாயக்கர் மன்னர் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இவர்கள் வீர மரணம் அடைந்திருக்கலாம்.
ஏனெனில் வேட்டையாடுபவர்களுடன் சண்டையிட்டு மடிந்திருந்தால் கற்களில் புலிகள் போன்ற விலங்குகளின் அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அத்தகைய அடையாளம் எதுவும் இல்லை. ஆகவே இது வீர மரணம் அடைந்த மாவீரர்களின் நடுகற்கள் என தெரியவந்துள்ளது என கூறினார்.
ஆய்வின்போது மத்திய அரசின் ஹெச்.இ.பி. தொழிற்சாலை ஊழியர் தியாகராஜன் உடன் இருந்தார்.
- சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
- அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன்.
திருச்சி:
திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னதாக டி.ஐ.ஜி. வருண்குமார், சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை என கூறிய வருண்குமார், திருச்சி குற்றவியல் கோர்ட்டில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக நேற்று திருச்சி கோர்ட்டில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருச்சி குற்றவியல் கோர்ட்டில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். தனிப்பட்ட வழக்கு என்பதால் வருண்குமார், காவல் சீருடையில் இல்லாமல், சாதாரண உடையிலேயே கோர்ட்டில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாடு சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன்; அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன்.
சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை" என்று வருண்குமார் கூறினார்.
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
- இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்கியது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஒட்டி ஜனவரி 10ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
- தவறு செய்பவர்களையும் அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும்.
- தெருவுக்கு தெரு சாராயக்கடை திறந்து வைத்து விட்டு மக்கள் நலம் குறித்து பேசுவது எப்படி.
திருச்சி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மணச்சநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கான நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி திருச்சி தஞ்சை சாலை உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. பின்னர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. கட்சியின் பிரச்சனை குறித்து கருத்து கூற முடியாது. பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். டாக்டர் ராமதாஸ் அரசியலுக்கு வரும்போது பொதுவாக தான் வந்தார். கடைசியாக வழி இல்லாம தான் அன்புமணியை கொண்டு வந்தார்.
நம் தமிழர் கட்சியில் தலைவர் உருவாகுவார். அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் பார்க்கும் தலைவன் வேறு. படம் எடுத்தால் தலைவர் என்று பெயர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் தலைவருக்கு பல தகுதி உள்ளது. 140 க்கு மேற்பட்ட வழக்குகள் என் மேல் உள்ளது. என் கால் படாத நீதிமன்றங்கள் இல்லை. கட்சி அரசியலும், தேர்தல் அரசியல் தான் உள்ளது. மக்கள் அரசியல் கிடையாது.
தி.மு.க. செய்வது மக்கள் அரசியலா?. பா.ஜ.க. கட்சி கோவில், ஜாதியை விட்டு வேற என்ன பேசி பார்த்திருக்கிறீர்களா?. அனைத்து அமைச்சர்கள் மருத்துவமனை, பள்ளிகளை வைத்திருக்கிறார்கள்?. எப்படி அரசு மருத்துவமனைகளும், பள்ளிகளும் தரம் உயரும்?.
5 வருடம் கழித்து தான் மக்களிடம் களஆய்வு என வருவார்கள். என்ன பிரச்சனை கேட்பார்கள்.
கமிஷன் வாங்கும் புறக்கணிகளை தேர்வு செய்து கொண்டு தலைவர் களை எங்கே தேடுவது? அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை குறித்து கவலைப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் வேலை செய்யாமல் போவதற்கு காரணம் என்ன? தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. எனக்கும் அத்தகைய கோபம் இருக்கிறது.
அதற்காக சாட்டையில் அடித்துக்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்பவர்களையும் அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும்.
தேர்தல் தோறும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தங்களது தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசை வலியுறுத்தி, கடுமையான சட்டம் இயற்ற சொல்லலாம். அதாவது, யார் ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுக்கிறாரோ அவர், 10 ஆண்டுகள் தேர்தல் நிற்க தடை என்ற சட்டத்தை அண்ணாமலை பெற்று தந்தால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கோ, தேர்தலில் நிற்பதற்கோ யாரும் முன் வர மாட்டார்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அடுத்ததாக, இலவசங்களால் மக்களுக்கு ஒருபோதும் நன்மை விளைய போவதில்லை. அதையும் அண்ணாமலை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தூறல் பயிருக்கு உதவாது. அதுபோல, இலவசங்கள் நாட்டுக்கு உதவாது என குன்றக்குடி அடிகளார் சொன்னது போல இலவசங்கள் கொடுப்பதும் நாட்டுக்கு கேடு. இவை இரண்டையும் கணக்கில் கொள்ளாமல் திமுக அரசை தோற்கடிக்க முடியாது.
பா.ம.க. தலைமையின் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் விரைவில் சரியாகிவிடும். தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் எந்தவித சிறந்த திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்கவில்லை. மாறாக காலை உணவு திட்டம் என்ற பேரில் வாரத்திற்கு 5 நாட்களும் உப்புமா போடும் அரசாக இருக்கிறது.
தெருவுக்கு தெரு சாராயக்கடை திறந்து வைத்து விட்டு மக்கள் நலம் குறித்து பேசுவது எப்படி. இலவசம் என்பது உலக வளர்ச்சி திட்டம் அல்ல, அது வீழ்ச்சி திட்டம். இப்போது யார் தான் தமிழகத்தில் போராடாமல் இருக்கிறார்கள். ஆனால் நல்லாட்சி கொடுத்து வருவதாக சொல்வது எப்படி.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது.
- பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார்.
திருச்சி:
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையடுத்து பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது. இதன் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. அன்று காலை 7.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைவார்.
காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான வருகிற ஜனவரி 9-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். மறுநாள் 10-ந் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார்.
இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
11-ந் தேதி முதல் 15ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 16-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். ராப்பத்து 8-ம் திருநாளான 17-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.
18-ந் தேதி பகல் 1 முதல் இரவு 8 மணி வரையும், 19-ந் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து 7-ம் திருநாளான 16-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8-ம் திருநாளான 17-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 19-ந் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும். 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைஉண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவில் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.
- காயமடைந்த அப்துல் சித்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. இந்த வேன் துவரங்குறிச்சி முக்கன்பாலம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆம்னி பேருந்தும் வேனும் மோதிக்கொண்டன.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. சற்று தொலைவில் உள்ள வனத்துறை அலுவலகம் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன.
கடைசியாக வனத்துறை அலுவலகம் அருகே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு டிங்கரிங் பவுடர் ஏற்றி சென்ற லாரி நின்றது. இந்த வேளையில் அந்த வழியாக திருச்சியை நோக்கி காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது.
லாரியை டிரைவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜமீர் அகமது (38) என்பவர் ஓட்டினார். அருகில் கிளீனர் அப்துல் சித்திக்(45) அமர்ந்திருந்தார். அதிகாலை வேளை என்பதால் முன்னால் லாரி நின்றுகொண்டிருந்ததை டிரைவர் ஜமீர் அகமது கவனிக்கவில்லை.
எதிர்பாராதவிதமாக முன்னால் நின்ற லாரி மீது காலி சிலிண்டர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜமீர் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் அப்துல் சித்திக் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர்.
விபத்து பற்றி தகவல் கிடைத்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பலியான ஜமீர் அகமது உடலையும், காயம் அடைந்த அப்துல் சித்திக்கையும் கடுமையாக போராடி மீட்டனர். பலத்த காயமடைந்த அப்துல் சித்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
துவரங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து பலியான ஜமீர் அகமது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
- பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:
உலக புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகளை மாதந்தோறும் 2 முறை எண்ணப்பட்டு பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
கோவிலில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் சரிபார்த்து சொக்க தங்கமாக மாற்றி அனைத்தும் மொத்தமாக மும்பையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் டெபாசிட் செய்யபடுவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை 2021-2022 மானிய கோரிக்கையின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில், கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.
இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9-ந் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 526 கிலோ 435 கிராம் எடையுள்ள பொன் இனங்களை பிரிக்கப்பட்டது.
இப்பணி இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் உறுப்பினர்கள் பிச்சைமணி, சுகந்தி ராஜசேகர், சேதுலெட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை 3 மண்டலம் துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலர்கள் சரவணன், சிவலிங்கம், ராமு, ஆகியோர் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் நடைபெற்று முடிந்தது.
இதில் பொன் இனங்களில் உள்ள அரகு, கல் அகற்றி பயன்படுத்த இயலாத 526 கிலோ 435 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி தங்க மூதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பி வைத்தல் மற்றும் கோவிலில் இருப்பில் உள்ள 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளையும் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக பொன் இனங்களை பத்திரமாக மூட்டை கட்டி அதற்கு சீல் வைக்கும் பணிகள் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அறங்காவல் குழுவினர், இணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கல்ந்துகொண்டு வங்கி அதிகாரிகளிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப்குமார், மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், இணை ஆணையர் பிரகாஷ் , கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
- விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதே சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் அமர வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீண்டும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து விமானத்தை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்ட பயணிகளை தனியார் விடுதியில் அரை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விமானத்தை சரி செய்ய உதிரி பாகங்கள் விமான நிறுவனத்தின் சார்பில் இன்று கொண்டுவரப்பட்டு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று புறப்பட வேண்டிய விமானம், இன்று இரவு திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அவதியடைந்த சில பயணிகள் விமான டிக்கெட் ரத்து செய்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீச்சல் அடிக்கும் ஆசையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
- முதலைகள் நடமாட்டம் மற்றும் இரவு வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
திருச்சி:
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவர்கள் 10 பேர் நேற்று அரையாண்டு இறுதித் தேர்வு முடிந்ததையடுத்து மதியம் ஒரு மணி அளவில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். பின்னர் குடமுருட்டி பகுதியில் காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இறங்கி குளித்தனர்.
படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீச்சல் அடிக்கும் ஆசையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
ஆனால் ஆற்றின் மையப் பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. இதனால் எதிர்நீச்சல் போட முடியாமல் தவித்தனர். பின்னர் நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் தத்தளித்து நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர்.
ஆனால் பாலக்கரை பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 15), விக்னேஷ் (16), சிம்பு (16) ஆகிய 3 மாணவர்களை வெள்ளம் இழுத்து சென்று விட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அந்த மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் அய்யாளம்மன் படித்துறையில் திரண்டனர்.
பின்னர் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்பதற்காக ரப்பர் டியூப் உதவியுடன் காவிரியின் மையப்பகுதிக்கு சென்று தேடிப் பார்த்தனர்.
சம்பவ இடத்தில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் விவேகானந்த சுக்லா, உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டனர்.
இதற்கிடையே நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும்பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டபோது, ஒரு பெரிய முதலை ஆற்றில் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த முதலை புதருக்குள் சென்ற பின்னர் தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலைகள் நடமாட்டம் மற்றும் இரவு வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
இன்று முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு தேடும் பணி தொடங்கப்பட்டது.
இதில் கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் 50 பேர் ஈடுபட்டனர். அவர்கள் ரப்பர் படகு, பரிசல், ஸ்கூபா ஆகிய உபகரணங்களுடன் இறங்கி தேடினர்.
பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட ஜாகிர் உசேன் உடலை பிணமாக மீட்டனர்.
மற்ற 2 மாணவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் ஒரு மாணவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.
- உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த கல்லுப்பட்டியை சேர்ந்த கலாமணி(45), அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்த மாணிக்கம்(32) 2 பேரும், கடந்த 18-ந்தேதி பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள். அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தியது.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் 2 வார காலத்தில் பதில் அளிக்குமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
- வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே.நகர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலிமையாக இருக்கின்றன. எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகள் வெல்லும் என்ற முதல்வரின் கருத்து சரியானது. தி.மு.க. செயற்குழுவில் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்க வேண்டும் என தீர்மானம் தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதை காட்டுகிறது.
தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரே அணியிலே திரளுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை.
வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பா.ஜ.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதை கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர்.
பத்திரப்பதிவு துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் தி.மு.க. கூட்டணி உறுதுணையாக இருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தவறானது ஆகும்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து இந்தியா முழுவதும் வரும் 28-ந்தேதி அம்பேத்கர் அமைப்புகள் பல்வேறு கட்சியினர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 'அம்பேத்கர் அம்பேத்கர்' என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்பப்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.






