என் மலர்
திருச்சிராப்பள்ளி
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மக்கள் போராடியதற்கு பின்பு எதிர்ப்பதை போல் தமிழ்நாடு அரசு நாடகமாடுகிறது.
சுரங்கம் குறித்து தமிழக பாஜக கடிதம் எழுதியதும் சட்டமன்றத்தில் பெரிய நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுகிறார். டங்ஸ்டன் விவகாரத்தில் ராஜினாமா செய்வேன் எனக்கூறும் முதலமைச்சர், டாஸ்மாக் விவகாரத்தில் ராஜினாமா செய்யலாம்.
நானும், எல். முருகனும் 12-ந்தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி என்றார்.
- ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
- திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளை அமைச்சர் KN நேரு துவக்கி வைத்தார்.
ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் KN நேரு அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன.

அந்த வகையில் முதல் கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் KN நேரு அவர்கள் வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான KPY பாலா, வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கிராமத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டிகளை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் துவங்கி வைத்தார். இதில் பிரபல நகைச்சுவை நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதே போல் கோவையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன் பங்கேற்றார்.
வேலூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை கலைஞர் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மதுரையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உதவி ஆணையர் திரு. ராஜேஷ்வரன் பரிசுகள் வழங்கினார். அதோடு சேலத்தில் நடைபெற்ற போட்டிகளில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் சிலம்பம், வள்ளி கும்மி, படுகர் நடனம், மயிலாட்டம், மாடு ஆட்டம், அறுவடை ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும், பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையாட்டுகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வான அணிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர், மேலும் கிராமங்களில் சாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை, இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது.
- இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது.
- தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்கு உண்மையாக உழைக்ககூடியவர்களாக இருக்கிறோம்.
திருச்சி:
துணை முதலமைச்சர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர தி.மு.க. இளைஞர் அணியின் சார்பாக கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொற்கிழி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
தற்போது பி.டி. அசிஸ்டன்ட் 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் உள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம்.
தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்கு உண்மையாக உழைக்ககூடியவர்களாக இருக்கிறோம். மக்களுக்கு பயன்படும் வகையில் நல்ல ஆட்சியை தி.மு.க. தந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தை துணை பொதுச்செயலாளர் கூறிய கருத்துக்கள் குறித்து அவர்கள் இயக்கத்துக்குள் பேசி முடிவு செய்து கொள்வார்கள். தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அண்ணன், தம்பி உறவோடுதான் உள்ளது. இது கொள்கைக்கான கூட்டணி.
அதனால்தான் இந்த கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணியில் பிளவு ஏற்படாதா என்று நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதெற்கெல்லாம் நாங்கள் இடம் தரமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அம்பேத்கர் புத்தக விழாவில், திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு தி.மு.க. கூட்டணியின் அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியது தொடர்பாக நிருபர்கள் கேட்ட போது, திருமாவளவன் ஒரு சுயமரியாதைக்காரர். அவ்வளவு எளிதாக யாரும் அவருக்கு அழுத்தம் கொடுத்துவிட முடியாது. அவர் மிகப்பெரிய தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம் என்றார்.
- ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மடக்கி உடைமைகளை சோதனை செய்தனர்.
- ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபஸ்டின், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர் 6-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் கவுராவில் இருந்து சென்னை வழியாக வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர் கருப்பு பையுடன் சுரங்கப்பாதை வழியாக வேக வேகமாக நடந்து சென்றார்.
அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மடக்கி உடைமைகளை சோதனை செய்தனர். இதில் அவரது பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ. 500 மற்றும் ரூ. 200 ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.75 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் அது ஹவாலா பணம் என தெரியவந்தது. மேலும் பணத்தை கொண்டு வந்தவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 49 ) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரூ. 75 லட்சத்தையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வருமான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதா மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அழுத்தம் கொடுத்தால் இணங்கக்கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை.
- திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, கூட்டணி அழுத்தம் காரணமாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனால் கலந்துகொள்ள முடியவில்லை என த.வெ.க. தலைவர் விஜய் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார்.
எனக்கு எந்த அழுத்தமும் இல்லை.
அழுத்தம் கொடுத்தால் இணங்கக்கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல.
திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.
அவரது விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன.
- வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள வாத்தலை கிராமத்தில் அய்யன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் முகொம்பு காவேரி ஆற்றில் இருந்து காவேரி, கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்காக புள்ளம்பாடி, அய்யன் என 2 பாசன வாய்க்காலாக பிரிகிறது.
வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக அய்யன் வாய்க்கால் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் தற்போது சில நாட்களாகவே பெய்ந்து வரும் மழையால் தரைபாலத்தில் சிறிது மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததை அய்யன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் 7 கி.மீ தொலைவு வரை சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோலாலம்பூர் சேவையில் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி பிடித்தது.
- கூடுதல் விமான சேவையால் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1 மில்லியன் அதிகரிக்கக்கூடும் என விமான நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, தற்போது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு வாரம் 62 விமானங்கள் இயக்கப்படுகிறது. பெரிய அளவிலான விமானங்கள் இயக்க போதிய ரன்வே இல்லாத போதும், அதிக விமான சேவைகளை அளித்து, பயணிகள் சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது.
கடந்த 2023-24 நிதியாண்டில், சிங்கப்பூருக்கான பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்களில் 5.5 லட்சம் பயணிகள் கையாண்டு 4-வது இடமும், கோலாலம்பூர் சேவையில் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி பிடித்தது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய 5 மெட்ரோ விமான நிலையங்கள் தென்கிழக்கு ஆசியாவுடனான பயணிகள் போக்குவரத்தில் திருச்சியை விட அதிக அளவில் பயணிகள் போக்குவரத்தை கையாண்டுள்ளன.
இந்த நிலையில், திருச்சி-மலேசியா சேவையில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஏர் ஏசியா, மலிண்டோ விமான நிறுவனங்கள் கூடுதல் சேவை அளிக்க முன்வந்துள்ளன.
அதன்படி, நாளை (5ம் தேதி) முதல் வாரத்துக்கு கூடுதலாக ஏர் ஏசியா 3 சேவை, மலிண்டோ 7 சேவை என மலேசியாவுக்கு 10 சேவைகளை இயக்க உள்ளன. இதன் மூலம் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சேவையில், மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் திருச்சி முதலிடம் என்கிற (72 சேவைகள்) பெருமையை பெற்றுள்ளது.
கூடுதல் விமான சேவையால் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1 மில்லியன் அதிகரிக்கக்கூடும் என விமான நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருச்சி-மஸ்கட் இடையே வாரந்தோறும் புதன்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை அளித்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் கூடுதலாக திங்கள் கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது. இதேபோல தம்மாம் இடையே ஜன 2-ம் தேதி முதல் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரம் 2 சேவை அளிக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவினை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பக்ரைன், ரியாத், ஜித்தா ஆகிய வளைகுடா நகரங்களுக்கு விமான சேவை அளிக்க வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
- பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த குடிநீர் குழாயில் ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்டநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்தபோது அவரது கைப்பையில் கம்பி வடிவில் மறைத்து எடுத்து வந்த அரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர்.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது, அவர் தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த குடிநீர் குழாயில் ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
- ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் குப்பன் வலசை பகுதியை சேர்ந்த பாலு (வயது 58) என்பவர் போலியான பாஸ்போர்ட் வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோன்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் குத்புதீன் (49) என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்து சமய முறைப்படி திருமணம் நடை பெற்றது.
- மணப்பெண்ணின் தாய் வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்தினார்.
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ரசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதிவதணன் (வயது31). டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கப்பூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் வேலை செய்யும் மியான்மர் நாட்டை சேர்ந்த ஏய் ஏய் மோ(33) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மதிவதணனுக்கு பெண் பார்ப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்ட மதிவதணன், தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி மதிவதணன் தனது காதலியுடன் அரியலூருக்கு வருகை தந்தார். பின்னர் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து சமய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
அப்போது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏய்ஏய்மோ கழுத்தில் மதிவதணன் தாலி கட்டினார். மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு விமான டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மணப்பெண்ணின் தாய் வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்தினார்.
- இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.
- திருச்சி லால்குடியில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருச்சி:
வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவானதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி திருச்சி, கரூர், அரியலூர்,பெரம்பலூர் ,புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையினால் திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று கலெக்டர் பிரதீப் குமார் விடுமுறை அறிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் ரத்தினசாமி விடுமுறை அளித்தார்.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் அருணா விடுமுறை அறிவித்து உள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்று பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் மாநகர் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று விடிய விடிய மழை பெய்தது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இடைவிடாத மழையினால் ஊட்டி போன்ற குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
திருச்சியில் அதிக பட்சமாக லால்குடியில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் இதர பகுதிகளான கள்ளக்குடி 18.4, நந்தியாறு அணைக் கட்டு 9.2,புள்ளம்பாடி 21.8, தேவி மங்கலம் 12.4, சமயபுரம் 17,சிறுகுடி 22.2, வாத்தலை அணைக்கட்டு 18.4,மணப்பாறை 6,பொன்னடியாறு அணை 8, கோவில்பட்டி 14.2, மருங்காபுரி 13.4, முசிறி 13, புலிவலம் 4, தாப்பேட்டை 12, நவலூர் கொட்டப்பட்டு 11 ,துவாக்குடி 22.5, கொப்பம்பட்டி 11, தென்பர நாடு 16, துறையூர் 13, பொன்மலை 16.4, திருச்சி ஏர்போர்ட் 18.4, திருச்சி ஜங்ஷன் 17.6, திருச்சி டவுன் 17.3 என்ற மில்லி மீட்டர் அளவில் மழை பதிவானது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரியலூர் புதுமார்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்தி சந்தை, வெள்ளாளத் தெரு, பெரம்பலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே பெரம்ப லூர் தஞ்சாவூர் சாலையில் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு வாகனங்கள் சென்றன.
ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், கீழப்பழுவூர், திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த மழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
பெரும்பாலன பகுதி களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
அரியலூர்-27 , திருமானூர்-31 , ஜெயங்கொண்டம்-50, செந்துறை-27.8, ஆண்டிமடம்-16.8, குருவாடி-27, தா.பழுர்-23.2, சுத்தமல்லி டேம்-45.
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 247.8 மி.மீ.மழை பெய்துள்ளது. இதன் சராசரி 30.97 மி.மீட்டர் ஆகும். இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. காலையிலும் மழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் விடிய விடிய மழை பெய்தது சில இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்ச மாக அயன்குடி பகுதியில் 57.40 மில்லி மீட்டர் மழை பதிவானது இதர பகுதி களான கந்தர்வகோட்டை 23.40 , கறம்பக்குடி 41.20 ,மலையூர் 30.20, கிளநிலை 14.60, திருமயம் 12.30, அரிமளம் 21.60,
அறந்தாங்கி 32, நகுடி 39 . 40, மீமிசல 18.40, ஆவுடையார் கோவில் 19 .80,மணமேல்குடி 20, இலுப்பூர் 8 குடுமியான்மலை 14 அன்ன வாசல் 5.40 விராலிமலை 3 உடையாளிப்பட்டி 9 கீரனூர் 16.80 பொன்னம ராவதி 8 ,புள்ளி 20 ,கரையூர் 9.20 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 489. 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. இது சராசரி மழை அளவு 20.40 ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக இங்கு மழை நீடித்துள்ளது மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 178 மில்லி மீட்டர் மழை பதிவானது.
அதன்படி பெரம்பலூர் 11, இறையூர் 17, கிருஷ்ணாபுரம் 16, வி களத்தூர் 15 , தழுதலை 25, வேப்பந்தட்டை 27, அகரம் சீ கூர்17, லப்பை குடிக்காடு 13 புது வெட்டக்குடி 17 பாடாலூர் 13, செட்டிகுளம் 5 என மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று 99.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30-ந் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டு 3 கிலோ 600 கிராம் எடையில் 60 சென்டிமீட்டர் நீளமும் இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அது கொரியப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். அது அந்தநல்லூர் பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காவிரி ஆற்றில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று மிதந்து வந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராக்கெட் லாஞ்சரை பத்திரமாக மீட்டு அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். பின்னர் ராக்கெட் லாஞ்சரை அறிவியல் நிபுணர்கள் உடன் இணைந்து மண்ணுக்குள் பாதுகாப்பாக புதைத்து வைத்தனர்.
இதனையடுத்து, வெடி குண்டை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் உடன் இணைந்து இதனை வெடிக்கச் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி காவிரியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குண்டினை ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அந்த குண்டு கொள்ளிடம் ஆற்றில் மணலுக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்க செய்யப்பட்டது. ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் தான் முக்கொம்பு சுற்றுலா மையம் அமைந்துள்ளது.
முக்கொம்பு நடுக்கரை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகள் தமிழகத்தில் தங்கி பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.
அவகள் பயிற்சிக்கு பயன்படுத்திய ராணுவ தளவாடங்களை விட்டு சென்றிருக்கலாம் என்றும், அதில் மணல் அரிப்பு காரணமாக ராக்கெட் குண்டுகள் வெளியே வந்து கண்ணில் பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






