என் மலர்tooltip icon

    தேனி

    • காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.
    • க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது43). தச்சு தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டி சென்றார். தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து பாலமுருகனின் தம்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பத்தாரிடம் விபத்து குறித்து கூறினார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது பாலமுருகன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் அரிவாளை பறித்து அங்கிருந்த போலீசாரை செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
    • காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள காலனி பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் மதுபோதையில் தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோர் கஞ்சா மற்றும் மதுபோதையில் அரிவாள், கத்தியுடன் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளை கூறி உன்னை வெட்டாமல் விடமாட்டேன் என்று கூறி சத்தம் போட்டுள்ளனர்.

    அப்பொழுது பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்தார். அவரை கத்தியால் அவரது உடையை கிழித்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து ஹேமலதா போலீசில் புகார் அளித்தார். உடனடியாக ஹேமலதா மற்றும் அவரது தாயை அழைத்துக்கொண்டு பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார்.

    இந்த தகவல் அறிந்ததும் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகியோர் இடுப்பில் 2 டின் பீர்களை வைத்துக்கொண்டு விசாரணைக்கு சென்ற போலீசாரை யாரிடம் அனுமதி கேட்டு எங்களது தெரு பகுதிக்குள் உள்ளே வந்தீர்கள் என அவர்களின் சட்டையை பிடித்து கேட்டதோடு, உங்கள் மீதே வழக்கு தொடுப்பேன் என மிரட்டி உள்ளனர்.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் மிரட்டுவதை செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினர். அப்போது மதுபோதையில் போலீசாரிடம் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் காமராஜ் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விசாரணைக்கு சென்ற போலீசாரை ஓங்கி வெட்டினால் தலை துண்டாக போய்விடும் என கூறிக்கொண்டே அவர்களை வெட்ட முயன்றார்.

    இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் அரிவாளை பறித்து அங்கிருந்த போலீசாரை செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து தென்கரை இன்ஸ்பெக்டர் ஜோதி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அங்கு போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியும், அரிவாளால் வெட்ட வந்தவர்களை தேடினர். காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கதிர்வேல்புரத்தில் அதிக அளவு பளியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலப்பர் கோவில் அருகே உள்ள கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மூலிகை, ஈஞ்சமார் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி கதிர்வேல்புரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 32) என்பவர் மூலிகை சேகரிக்க அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சென்றார். அனைவரும் திரும்பிய நிலையில் செல்வி மட்டும் வராததைக் கண்டு அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் செல்வி காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர். மூலிகை சேகரிக்க சென்ற போது புதரில் மறைந்திருந்த ஒரு கரடி செல்வியை தாக்கியதாகவும், உயிருக்கு பயந்து ஓடிய போதும் விரட்டி கடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் கணேசபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி போதுமணி (40). இவர்களுக்கு சூர்யா (24), சுகன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது வீட்டிலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து சித்தாபட்டி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் போதுமணி மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • அ.தி.மு.க. தொடர்பாக வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி கருத்து கூற இயலாது.
    • மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. எனவே அந்த படத்தை பார்த்தபிறகுதான் கருத்து கூற முடியும்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஒன்றியம் தங்கம்மாள்புரம் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செங்குளம், கொம்புக்காரன்புலியூர், ஆத்தங்கரைப்பட்டி, கண்டமனூர், பாலூத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    வருகிற மக்களவை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஒன்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தொடர்பாக வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி கருத்து கூற இயலாது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. எனவே அந்த படத்தை பார்த்தபிறகுதான் கருத்து கூற முடியும். பாட்னாவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்துவதால் எந்தவித பலனும் இல்லை. இதேபோல கடந்த காலங்களிலும் எதிர்கட்சிகள் பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். ஆனால் அந்த கட்சியினர் பின்னர் கலைந்து தேர்தலில் போட்டியிட்டனர். ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டினால் எதற்கும் உதவாது என்பதைப்போலத்தான் இவர்கள் கூட்டம் நடத்துவதும் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஒரு வாரமாகவே உள்ளூர் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வந்தது.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.80-க்கு விற்ற தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ராஜதானிகோட்டை, அணைக்கரைப்பட்டி, சிலுக்குவார்பட்டி, புள்ளிமான்கோம்பை, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த ஒரு வாரமாகவே உள்ளூர் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.80-க்கு விற்ற தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. இதேபோல வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றின் விலையும் 3 மடங்கு அதிகரித்தது. நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தக்காளி, இஞ்சி, புதினா போன்றவற்றை வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், வழக்கமாக ஆண்டிபட்டி மார்க்கெட்டுக்கு 2 முதல் 3 டன் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் தற்போது பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கே தக்காளி பற்றாக்குறையாக உள்ளது. இதன்காரணமாகவே கடுமையாக விலை உயர்ந்துள்ளது.

    பொதுமக்கள் தக்காளி உள்ளிட்ட பொருட்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஓட்டல் கடைகாரர்களும் தக்காளியை வாங்குவதை தவிர்த்து மாற்று பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். தக்காளி விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை. பருவமழை தேனி மாவட்டத்தில் தாமதமாகி உள்ளது நல்லவிசயமாக அமைந்துள்ளது.

    இந்த சமயத்தில் மழை பெய்தால் பறிப்புக்கு தயாராக உள்ள குறைந்த தக்காளிகளும் கிடைக்காமல் போய்விடும். விவசாயிகளுக்கு தக்காளி விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்தாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

    • தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
    • வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கம்பம்:

    தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டுப்பகுதியில் மான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக குமுளி வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் கறி மற்றும் குளிர்சாத பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ மான் கறியையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

    மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாபுவின் தோட்டத்தில் சோதனை நடத்தியபோது கள்ளச்சாராயம் காய்ச்சியதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து கலால்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பாபு மீது குமுளி வனத்துறையினர் மற்றும் கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஊரக பகுதியில் இருந்து 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் இருந்து 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • ஓ.பி.எஸ். தம்பியான சண்முகசுந்தரம் அணி 95 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் உள்பட அந்த அணியினர் தோல்வி அடைந்தனர்.

    தேனி:

    தேனி மாவட்ட திட்டக்குழுவில் மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரக பகுதியில் இருந்து 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் இருந்து 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ஊரக பகுதிக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் இருந்தும், நகர பகுதிக்கு நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள 7 உறுப்பினர்கள் தேர்வு செய்ய தேர்தல் நடந்தது. இதில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 511 பேர் வாக்களிக்க வேண்டும்.

    தி.மு.க. சார்பில் 7 பேர் ஒரு அணியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகர்மன்ற கவுன்சிலருமான சண்முகசுந்தரம் தலைமையில் 7 பேர் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.

    எதிர் அணியில் தினகரன் என்பவர் 329 வாக்குகள் பெற்று அந்த அணியை சேர்ந்த 7 பேரும் வெற்றி பெற்றனர். ஓ.பி.எஸ். தம்பியான சண்முகசுந்தரம் அணி 95 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் உள்பட அந்த அணியினர் தோல்வி அடைந்தனர்.

    • அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
    • சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    • இதுவரை வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பொன்நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வீடற்ற ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு மனு அளித்தனர்.

    இப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடியிருப்பு இல்லாததால் மிகுந்த கஷ்டப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் இதுவரை அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள 2 ஏக்கர் 24 செண்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் தேவேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்களுக்கு வேண்டிய டெண்ட் அமைப்பதற்கான பொருட்களை வழங்கினர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பொதுமக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு பல்வேறு அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை. இதனால் அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதே இடத்தில் தாங்களாகவே இடத்தை ஒதுக்கி குடியிருக்கும் முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும் என்றனர்.

    • அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது.
    • சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

    போடி:

    மதுரை-போடி வழித்தடத்தை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ந்தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்றுமுதல் போடி வரை இந்த ரெயில் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக ஓ.எம்.எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் நேற்று சோதனை நடைபெற்றது. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மீண்டும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது.

    இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.

    மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் தற்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னைக்கு கல்வி கற்க செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுசெல்லும் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர். 

    • சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு தனியார் வங்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கள்ளநோட்டு 2 வந்தது. இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பீர்மேடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி குரியன்ஜேக்கப் தலைமையிலான போலீசார் வங்கிக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து கள்ளநோட்டை மாற்றியது யார் என ஆய்வு செய்தனர். அப்போது வண்டிபெரியாறு பகுதியை சேர்ந்த சிபின்ஜேக்கப்(28) என்பவர்தான் கள்ளநோட்டுகளை மாற்றியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் கள்ளநோட்டுகள் கிடைத்ததாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் புழக்கத்தில் விட்டதாகவும் தெரிவித்தார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 20 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகள் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். அதன்படி இடுக்கி மாவட்டத்தில் 20 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இந்த கும்பலில் தொடர்புடைய நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இடுக்கி மாவட்ட போலீசார் மூலம் சென்னை காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து கள்ளநோட்டு கும்பலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    ×