என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆண்டிபட்டியில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி
- கடந்த ஒரு வாரமாகவே உள்ளூர் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வந்தது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.80-க்கு விற்ற தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ராஜதானிகோட்டை, அணைக்கரைப்பட்டி, சிலுக்குவார்பட்டி, புள்ளிமான்கோம்பை, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த ஒரு வாரமாகவே உள்ளூர் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.80-க்கு விற்ற தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. இதேபோல வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றின் விலையும் 3 மடங்கு அதிகரித்தது. நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தக்காளி, இஞ்சி, புதினா போன்றவற்றை வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், வழக்கமாக ஆண்டிபட்டி மார்க்கெட்டுக்கு 2 முதல் 3 டன் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் தற்போது பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கே தக்காளி பற்றாக்குறையாக உள்ளது. இதன்காரணமாகவே கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
பொதுமக்கள் தக்காளி உள்ளிட்ட பொருட்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஓட்டல் கடைகாரர்களும் தக்காளியை வாங்குவதை தவிர்த்து மாற்று பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். தக்காளி விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை. பருவமழை தேனி மாவட்டத்தில் தாமதமாகி உள்ளது நல்லவிசயமாக அமைந்துள்ளது.
இந்த சமயத்தில் மழை பெய்தால் பறிப்புக்கு தயாராக உள்ள குறைந்த தக்காளிகளும் கிடைக்காமல் போய்விடும். விவசாயிகளுக்கு தக்காளி விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்தாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.






