என் மலர்tooltip icon

    தேனி

    • தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
    • வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கம்பம்:

    தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டுப்பகுதியில் மான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக குமுளி வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் கறி மற்றும் குளிர்சாத பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ மான் கறியையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

    மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாபுவின் தோட்டத்தில் சோதனை நடத்தியபோது கள்ளச்சாராயம் காய்ச்சியதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து கலால்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பாபு மீது குமுளி வனத்துறையினர் மற்றும் கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஊரக பகுதியில் இருந்து 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் இருந்து 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • ஓ.பி.எஸ். தம்பியான சண்முகசுந்தரம் அணி 95 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் உள்பட அந்த அணியினர் தோல்வி அடைந்தனர்.

    தேனி:

    தேனி மாவட்ட திட்டக்குழுவில் மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரக பகுதியில் இருந்து 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் இருந்து 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ஊரக பகுதிக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் இருந்தும், நகர பகுதிக்கு நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள 7 உறுப்பினர்கள் தேர்வு செய்ய தேர்தல் நடந்தது. இதில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 511 பேர் வாக்களிக்க வேண்டும்.

    தி.மு.க. சார்பில் 7 பேர் ஒரு அணியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகர்மன்ற கவுன்சிலருமான சண்முகசுந்தரம் தலைமையில் 7 பேர் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.

    எதிர் அணியில் தினகரன் என்பவர் 329 வாக்குகள் பெற்று அந்த அணியை சேர்ந்த 7 பேரும் வெற்றி பெற்றனர். ஓ.பி.எஸ். தம்பியான சண்முகசுந்தரம் அணி 95 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் உள்பட அந்த அணியினர் தோல்வி அடைந்தனர்.

    • அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
    • சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    • இதுவரை வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பொன்நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வீடற்ற ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு மனு அளித்தனர்.

    இப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடியிருப்பு இல்லாததால் மிகுந்த கஷ்டப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் இதுவரை அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள 2 ஏக்கர் 24 செண்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் தேவேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்களுக்கு வேண்டிய டெண்ட் அமைப்பதற்கான பொருட்களை வழங்கினர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பொதுமக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு பல்வேறு அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை. இதனால் அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதே இடத்தில் தாங்களாகவே இடத்தை ஒதுக்கி குடியிருக்கும் முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும் என்றனர்.

    • அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது.
    • சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

    போடி:

    மதுரை-போடி வழித்தடத்தை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ந்தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்றுமுதல் போடி வரை இந்த ரெயில் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக ஓ.எம்.எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் நேற்று சோதனை நடைபெற்றது. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மீண்டும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது.

    இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.

    மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் தற்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னைக்கு கல்வி கற்க செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுசெல்லும் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர். 

    • சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு தனியார் வங்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கள்ளநோட்டு 2 வந்தது. இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பீர்மேடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி குரியன்ஜேக்கப் தலைமையிலான போலீசார் வங்கிக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து கள்ளநோட்டை மாற்றியது யார் என ஆய்வு செய்தனர். அப்போது வண்டிபெரியாறு பகுதியை சேர்ந்த சிபின்ஜேக்கப்(28) என்பவர்தான் கள்ளநோட்டுகளை மாற்றியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் கள்ளநோட்டுகள் கிடைத்ததாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் புழக்கத்தில் விட்டதாகவும் தெரிவித்தார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 20 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகள் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். அதன்படி இடுக்கி மாவட்டத்தில் 20 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இந்த கும்பலில் தொடர்புடைய நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இடுக்கி மாவட்ட போலீசார் மூலம் சென்னை காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து கள்ளநோட்டு கும்பலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.
    • பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது. நாற்றங்கால் அமைத்து விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மழை இல்லாததால் கவலையில் உள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.90 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 51.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிறது. 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.73 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பருவமழை தொடங்கியதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.

    தேனி:

    இந்தியாவில் மக்கள் தொகை உலகிலேயே முதலிடம் பிடித்து சீனாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    குடும்ப நலத்துறை அதிகாரிகள் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    அதன் விளைவாக ஒருபெண்ணுக்கு 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் விகித பிறப்பு எனப்படும் இதனை கண்டறிந்து 2 குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு அடையும் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட குடும்பநலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திேலயே இது முதலிடம் ஆகும். இதனை குறைக்க குடும்ப நலத்துறை இலக்கு நிர்ணயித்து லேப்ராஸ்கோப்பி குடும்ப நல அறுவை சிகிச்சை நடத்தி வருகிறோம். கம்பம், பெரியகுளம், அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்தால் ஆஸ்பத்திரியில் தங்காமல் ஒரே நாளில் வீட்டுக்கு சென்று விடலாம். தொற்று, வலி இருக்காது என்றார். குறிப்பாக மாவட்டத்தில் மலை கிராமங்களில் உள்ள மக்களிடம் அதிக குழந்தை பேறினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குடும்ப கட்டுப்பாடு செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    • நீர் நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம்.
    • யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.

    கூடலூர்:

    சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

    தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுது போக்கு அம்ச ங்கள் உள்ளன. படகு சவாரியின் போது நீர் நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம்.

    இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விருப்பத்தில் படகு சவாரி முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385. நுழைவு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.25 அடியாக குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரைப்பகுதிக்கு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி படகுத்துறை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக் கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.

    மேலும் இது போன்ற வன விலங்குகள் மற்றும் பறவைக் கூட்டங்களை படகு சவாரியின் போது காண்பது கண்களுக்கு விருந்தாக அமைந்தது என அவர்கள் தெரிவித்தனர்.

    • தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு மூடப்பட்டதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டார்.
    • கரையோர மண்ணரிப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முயற்சியாக இந்தியாவி லேயே முதன் முறையாக நமது சூழலுக்கு உகந்த தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு மூடப்பட்டதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வை யிட்டார்.

    மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சோதனை முயற்சியாக, கரை பகுதி முழுவதும் தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலை களை கொண்டு மூடப்ப ட்டது. இத்திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு பின்னரும் எந்தவித மண்ணரிப்புமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.

    வெற்றிகரமாக செய ல்பட்ட இத்திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முறையில் பயன்படுத்து வதற்காக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவல ர்களுக்கும், செயற் பொறி யாளர்களுக்கும், பொறி யாளர்களுக்கும் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு விரிவாக பயிற்சி அளிக்க ப்பட்டது.

    தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலை போடப்பட்டதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும், இறுக்கமான கயிறு வலை கட்டமைப்பு மண்ணை உறுதிப்படுத்து கிறது மற்றும் மண்ணரிப்பு கட்டுப்பாட்டுக்கு பயனுள்ள தாக உள்ளது.இதனை சாலை கட்டுமானம் மற்றும் கரையோர மண்ணரிப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    தென்னை நாரினால் செய்யப்பட்ட இந்த கயிறு வலைகள் 400 ஜி.எஸ்.எம்., 700 ஜி.எஸ்.எம்., 900 ஜி.எஸ்.எம்., என 3 வகைகளில் கிடைக்கிறது.

    இப்பயிற்சியைத் தொடர்ந்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு குளத்தை தேர்வு செய்து சோதனை முயற்சியாக இந்த கயிறு வலைகளை பயன்ப டுத்தி அதன் செயல்பாடு களை ஆராய வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவு ரைகளை வழங்கினார்.


    இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மதுமதி, செயற்பொறியாளர் முருகன், உதவி பொறி யாளர்கள் ரவிச்சந்திரன், ராஜேஷ்வரன், ஜோதி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • ஆய்வில் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் உரிய உரிமம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது
    • ஆய்வு பரிசோதனைக்காக ஏலக்காய் மாதிரிகளையும் எடுத்துச் சென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் இயங்கி வருகின்றன. தென்னிந்தியாவிலேயே ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் பகுதியாக போடி திகழ்ந்து வருகிறது.

    சுமார் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏலக்காய் தொழிலை நம்பி உள்ளனர். போடியை சுற்றியுள்ள கேரள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விளையும் பணப் பயிரான ஏலக்காய்க்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி முக்கியத்துவம் உள்ளது. முதல் தர ஏலக்காய் கிலோ ரூ.1300 வரை விற்பனையாகும் நிலையில் தற்போது இங்கு இயங்கி வரும் ஏலக்காய் தரம் பிரிப்பு மையங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்கள் உரிய உரிமம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. மேலும் சில ஏலக்காய் தரம் பிரிக்கும் மையங்களில் உரிய முறையில் உரிமம் மற்றும் அனுமதி பெறாமலும் காய்களின் தரத்தை உயர்த்தி காட்டுவதற்காக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.

    கண்ணாடி டம்ளரில் போடப்பட்ட ஏலக்காயில் உள்ள செயற்கை நிறமூட்டிகள் கரைந்து நிறம் மாறிக்காட்சி அளித்தது கண்டு அதிர்ச்சி அடைந்த உணவுத்துறை அதிகாரிகள் உடனடியாக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் காய்களின் மாதிரிகளை ஆய்வுக்குகொண்டு சென்றனர்.

    சுமார் 3 டன் ஏலக்காய் நிறமூட்டப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கடைகளிலேயே தனியாக ஒரு அறையில் வைத்து பூட்டி சாவியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் இன்று 2வது நாளாக போடியில் உள்ள பல்வேறு ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம் மற்றும் ஏற்றுமதி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சுமார் 5 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் போடி அரண்மனை பின்புறம் உள்ள கோட்டை கருப்பசாமி கோவில் அருகில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம், சுப்புராஜ் நகர் 4வது தெருவில் உள்ள தரம் பிரிக்கும் மையம் மற்றும் போடி கஸ்பா அருகில் உள்ள ஏலக்காய் தரம் பிரிக்கும் மையமாகிய 3 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதல் தர ஏலக்காயில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1.5 டன் எடையுள்ள ஏலக்காய் மூட்டைகள் கைப்பற்றப்பட்டு அவரவர்கள் தரம் பிரிக்கும்மையத்திலேயே ஒரு அறையில் பூட்டி வைத்து சென்றனர்.

    ஆய்வு பரிசோதனைக்காக ஏலக்காய் மாதிரிகளையும் எடுத்துச் சென்றனர். இந்த ஏலக்காய் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு விரைவில் முடிவுகள் தெரிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன் படுத்தப்பட்டுள்ளதா? என தெரிய வரும். அவ்வாறு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராகவன் தலைமையில் இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு கடைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

    • அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
    • கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை சீசனின்போது அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு புனிதநீராடி செல்கின்றனர். கடந்த மாதம் சுற்றுலா வந்த சென்னை மாணவி மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலியானார். இதனை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 27ம் தேதி கேரள வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் அரிசிகொம்பன் யானை புகுந்தது. கம்பம் நகரில் அட்டகாசம் செய்து பின்னர் சுருளிபட்டி பகுதியில் முகாமிட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அங்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது யானை அச்சம் முழுவதும் விலகியுள்ளதால் சுருளி அருவி மற்றும் மேகமலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.

    ×