என் மலர்tooltip icon

    தேனி

    • கேரளாவில் பல்வேறு மாட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்.

    கூடலூர்:

    தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது.

    மேலும் கேரளாவில் பல்வேறு மாட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த பல மாதங்களாக நீர்வரத்து குறைவாக இருந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த நிலையில் இடுக்கி பகுதியிலும் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 112 கன அடியாக இருந்த நீர்வரத்து 602 கன அடியாகவும் மாலையில் 1200 கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 2113 கன அடிநீர் வருகிறது. இதனால் நேற்று 114.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115.80 அடியாக உள்ளது. 256 கன அடி நீர் வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக உள்ளது. 48 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.90 அடியாக உள்ளது. 19 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 87.2, தேக்கடி 60, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 4.4. சண்முகாநதி 3.8, போடி 4.6, வைகை அணை 6.4, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 1, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 21.6, அரண்மனைபுதூர் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்மட்டம் குறைவாக உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 பெண்களும் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், பலருக்கு ெவளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
    • அதனை நம்பி அவர்களிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை பெண்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில் நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்து போடி ஜீவா நகரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி சுமங்கலி, தங்கராஜ் மனைவி சித்ரலேகா ஆகியோரை சந்தித்தார்.

    இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், பலருக்கு ெவளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதனை நம்பி அவர்களிடம் குமரவேல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை சுமங்கலி பிரியாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    மேலும் அவர்கள் மோசடி பேர்வழி என தெரிய வரவே தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் திருப்பித் தராமல் இருந்தனர். இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் குமரவேல் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • 21 விவசாயிகள் அங்கு குடில் அமைத்து நீதிமன்ற உத்தரவு இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து வெளியேற மறுத்து இரவு முழுவதும் விவசாயிகள் அங்கு தங்கினர்.
    • கோர்ட்டு உத்தரவை நடைமுறைபடுத்தும் வகையில் அதிகாரிகள் தங்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லை கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள அமராவதிபுரம் ஆசாரிபள்ளம் பகுதிகளில் விவசாயம் செய்து வந்தவர்களை வனத்துறையினர் கடந்த 1994ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றினர்.

    70 ஆண்டு காலமாக விவசாயம் செய்த எங்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது எனக் கூறி வன உரிமைக்குழு அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வக்கீல் சுரேந்திரன் மூலம் வழக்கு தொடுத்தனர்.

    இந்த வழக்கில் அவர்கள் குமுளி வனப்பகுதியில் விவசாயம் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வனப்பகுதிக்கு சென்ற ராமர், பாண்டியன், நல்லா, சாமித்தேவன், விஜயராணி உள்பட 21 விவசாயிகள் அங்கு குடில் அமைத்து தங்கினர்.

    அவர்கள் அங்கே தங்க கூடாது என கம்பம் மேற்கு வனத்துறையினர் தடுத்தனர். நீதிமன்ற உத்தரவு இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து வெளியேற மறுத்து இரவு முழுவதும் விவசாயிகள் அங்கு தங்கினர்.

    அமராவதிபுரம், ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் தங்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2ம் நாளாக நேற்று 25க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வனப்பகுதியில் அனுமதியின்றி தங்குபவர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.

    இது பற்றி முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து கொட்டும் மழையில் இன்று 3ம் நாளாக குமுளி வனப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கோர்ட்டு உத்தரவை நடைமுறைபடுத்தும் வகையில் அதிகாரிகள் தங்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இன்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    • நிலக்கோட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிற. இவருக்கும் இவரது சித்தப்பாவுக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • ஊர் திரும்பிக்கொண்டிருந்தவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவரது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

    தேவதானப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையைச் சேர்ந்தவர் புரட்சி மணி (வயது 34). இவர் நிலக்கோட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது சித்தப்பாவுக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று புரட்சிமணி கெங்குவார்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த விஜய், புவனேஸ், திவாகர், முத்துராஜ், அருண், கண்ணன் ஆகியோர் புரட்சிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவரது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

    மேலும் புரட்சி மணியை தாக்கியதில் அவரும் காயமடைந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வனப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்ட பிறகு அங்கு விவசாயம் செய்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்ற ப்பட்டனர்.
    • காலம் காலமாக வனப்பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து ள்ளதால் மீண்டும் அனைத்து மக்களும் இங்கு குடியேறுவோம் என அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வன சரகத்திற்குட்பட்ட தமிழக வனப்பகுதியில் ஆசாரி பள்ளம் பகுதி உள்ளது.

    கடந்த 1993-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுபடி வனப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டன. அப்போது அங்கு விவசாயம் செய்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்ற ப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் வன உரிமையை அங்கீகரித்தல் 2006 சட்டத்தின்கீழ் பாரம்பரிய வாசிகள் வாழ்வதற்காக சுய சாகுபடி செய்ய வன நிலத்தை வைத்திருக்க உரிமை கோரி வனத்துறைக்கு மனு கொடுத்தனர்.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட வன அலுவலர் சமர்தா பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வன வாசிகள் சட்டம் 2006ன்படி விண்ணப்பம் பரிசீலனைக்காக கிராம சபை கூட்டம் கூட்டி அல்லது வனக்குழு ஏற்பாடு செய்து அதன்மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில் வழக்கு தொடர்ந்த 18 குடும்பங்க ளுக்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு வந்தது. இதனால் 20க்கும் மேற்பட்டவர்கள் ஆசாரி பள்ளம் வனப்ப குதியில் டெண்ட் அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கம்பம் மேற்கு வனத்துறையினர் விரைந்து வந்து அவர்களை வெளியேற வற்புத்தினர். ஆனால் இன்று 2-வது நாளாக அவர்கள் வன ப்பகுதியிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். காலம் காலமாக வனப்பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து ள்ளது. எனவே மீண்டும் அனைத்து மக்களும் இங்கு குடியேறுவோம் என அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பைக் ஓட்ட பழகிக் கொண்டு இருந்த போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.
    • தந்தை, மகள் இருவரும் படுகாய மடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்த தந்தை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தென்னகர் காலனியைச் சேர்ந்தவர் சையது ஷேக் இப்ராஹிம் (வயது 45). டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவரது மகள் லைகாஇர்ஸத் (19). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தனது மகளுக்கு பைக் ஓட்ட சையது ஷேக் இப்ராஹிம் கற்றுக் கொடுத்து வந்தார்.

    உத்தமபாளையம் - கம்பம் மெயின் ரோட்டில் பி.டி.ஆர். காலனி பஸ் நிறுத்தம் அருகே பைக் ஓட்ட பழகிக் கொண்டு இருந்த போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் தந்தை, மகள் இருவரும் படுகாய மடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த சையது ஷேக் இப்ராஹிம் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.
    • க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது43). தச்சு தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டி சென்றார். தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து பாலமுருகனின் தம்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பத்தாரிடம் விபத்து குறித்து கூறினார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது பாலமுருகன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் அரிவாளை பறித்து அங்கிருந்த போலீசாரை செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
    • காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள காலனி பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் மதுபோதையில் தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோர் கஞ்சா மற்றும் மதுபோதையில் அரிவாள், கத்தியுடன் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளை கூறி உன்னை வெட்டாமல் விடமாட்டேன் என்று கூறி சத்தம் போட்டுள்ளனர்.

    அப்பொழுது பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்தார். அவரை கத்தியால் அவரது உடையை கிழித்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து ஹேமலதா போலீசில் புகார் அளித்தார். உடனடியாக ஹேமலதா மற்றும் அவரது தாயை அழைத்துக்கொண்டு பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார்.

    இந்த தகவல் அறிந்ததும் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகியோர் இடுப்பில் 2 டின் பீர்களை வைத்துக்கொண்டு விசாரணைக்கு சென்ற போலீசாரை யாரிடம் அனுமதி கேட்டு எங்களது தெரு பகுதிக்குள் உள்ளே வந்தீர்கள் என அவர்களின் சட்டையை பிடித்து கேட்டதோடு, உங்கள் மீதே வழக்கு தொடுப்பேன் என மிரட்டி உள்ளனர்.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் மிரட்டுவதை செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினர். அப்போது மதுபோதையில் போலீசாரிடம் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் காமராஜ் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விசாரணைக்கு சென்ற போலீசாரை ஓங்கி வெட்டினால் தலை துண்டாக போய்விடும் என கூறிக்கொண்டே அவர்களை வெட்ட முயன்றார்.

    இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் அரிவாளை பறித்து அங்கிருந்த போலீசாரை செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து தென்கரை இன்ஸ்பெக்டர் ஜோதி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அங்கு போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியும், அரிவாளால் வெட்ட வந்தவர்களை தேடினர். காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கதிர்வேல்புரத்தில் அதிக அளவு பளியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலப்பர் கோவில் அருகே உள்ள கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மூலிகை, ஈஞ்சமார் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி கதிர்வேல்புரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 32) என்பவர் மூலிகை சேகரிக்க அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சென்றார். அனைவரும் திரும்பிய நிலையில் செல்வி மட்டும் வராததைக் கண்டு அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் செல்வி காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர். மூலிகை சேகரிக்க சென்ற போது புதரில் மறைந்திருந்த ஒரு கரடி செல்வியை தாக்கியதாகவும், உயிருக்கு பயந்து ஓடிய போதும் விரட்டி கடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் கணேசபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி போதுமணி (40). இவர்களுக்கு சூர்யா (24), சுகன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது வீட்டிலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து சித்தாபட்டி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் போதுமணி மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • அ.தி.மு.க. தொடர்பாக வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி கருத்து கூற இயலாது.
    • மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. எனவே அந்த படத்தை பார்த்தபிறகுதான் கருத்து கூற முடியும்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஒன்றியம் தங்கம்மாள்புரம் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செங்குளம், கொம்புக்காரன்புலியூர், ஆத்தங்கரைப்பட்டி, கண்டமனூர், பாலூத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    வருகிற மக்களவை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஒன்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தொடர்பாக வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி கருத்து கூற இயலாது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. எனவே அந்த படத்தை பார்த்தபிறகுதான் கருத்து கூற முடியும். பாட்னாவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்துவதால் எந்தவித பலனும் இல்லை. இதேபோல கடந்த காலங்களிலும் எதிர்கட்சிகள் பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். ஆனால் அந்த கட்சியினர் பின்னர் கலைந்து தேர்தலில் போட்டியிட்டனர். ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டினால் எதற்கும் உதவாது என்பதைப்போலத்தான் இவர்கள் கூட்டம் நடத்துவதும் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஒரு வாரமாகவே உள்ளூர் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வந்தது.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.80-க்கு விற்ற தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ராஜதானிகோட்டை, அணைக்கரைப்பட்டி, சிலுக்குவார்பட்டி, புள்ளிமான்கோம்பை, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த ஒரு வாரமாகவே உள்ளூர் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.80-க்கு விற்ற தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. இதேபோல வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றின் விலையும் 3 மடங்கு அதிகரித்தது. நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தக்காளி, இஞ்சி, புதினா போன்றவற்றை வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், வழக்கமாக ஆண்டிபட்டி மார்க்கெட்டுக்கு 2 முதல் 3 டன் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் தற்போது பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கே தக்காளி பற்றாக்குறையாக உள்ளது. இதன்காரணமாகவே கடுமையாக விலை உயர்ந்துள்ளது.

    பொதுமக்கள் தக்காளி உள்ளிட்ட பொருட்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஓட்டல் கடைகாரர்களும் தக்காளியை வாங்குவதை தவிர்த்து மாற்று பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். தக்காளி விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை. பருவமழை தேனி மாவட்டத்தில் தாமதமாகி உள்ளது நல்லவிசயமாக அமைந்துள்ளது.

    இந்த சமயத்தில் மழை பெய்தால் பறிப்புக்கு தயாராக உள்ள குறைந்த தக்காளிகளும் கிடைக்காமல் போய்விடும். விவசாயிகளுக்கு தக்காளி விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்தாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

    ×