என் மலர்
தேனி
- முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது.
- அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது.
கூடலூர்:
தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 2349 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 356 கனஅடி நீர் வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதி யில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.
இதனால் வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து 140 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. நீர் வரத்தும், திறப்பும் இல்லை
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மழையளவு
பெரியாறு 19.8, தேக்கடி 15.2, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 1, போடி 1.8, வீரபாண்டி 3.2, சண்முகாநதி அணை 2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக சுருளி அருவியில் கடந்த 2 நாட்களாக நீர் வரத்து அதிகரித்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
- தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
- அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி:
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி திருவிழாவை முன்னிட்டு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
இந்த மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி விடுதியின் முன்னாள் மாணவர் மற்றும் பழனி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடையே விளையாடிய போட்டியினை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த விளையாட்டு போட்டியானது தமிழகத்தில் உள்ள சிறந்த கூடைப்பந்தாட்ட அணியினை தேர்வு செய்து 7.7.2023 முதல் 9.7.2023 வரை நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பிரிவு அணியினருக்கும், நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் பிரிவு அணியினருக்கும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 16 அணிகளும், மாணவியர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 6 அணிகளும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டு போட்டியானது லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது.
இதேபோன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அணிகள் விளையாடிய போட்டியினை தேனி எல்.எஸ்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், கோவிலூர் சி.எஸ்.எம்.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சேலம் லிட்டில் ப்ளவர் மேல்நிலைப்பள்ளி விளையாடிய போட்டியினை தேனி வேல்முருகன் ஆஸ்பத்திரி டாக்டர் பிரபு மற்றும் தூத்துக்குடி செயின் லாசல் மேல்நிலைப்பள்ளியும், திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி விளையாடிய போட்டியினை திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் செண்பகமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மகன் கைது செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 45). இவருக்கு வைரமணி என்ற மனைவியும், கவுதம் என்ற மகனும் தாரணி என்ற மகளும் உள்ளனர். ஆசைத்தம்பி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதம் திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் மன வேதனையில் இருந்த ஆசைத்தம்பி 3 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். அவரது மனைவி தேடிப்பார்த்தபோது எங்கே உள்ளார்? என தெரியவில்லை. இந்நிலையில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் ஆட்டோவுக்குள் ஆசைத்தம்பி இறந்து கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது.
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகன் கைது செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினையில் மனவேதனையடைந்த சபீனா விஷம் குடித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
- போலீசாரிடம் புகார் தெரிவிக்கும்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சபீனா (வயது 23). இவருக்கு வீரபத்திரன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும், தாரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதால் சபீனா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வீரபத்திரன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சபீனா தனது கணவர் வீட்டுக்கு சென்று குழந்தைகளை தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாமியார் சிட்டம்மாள் மற்றும் முருகேஸ்வரி, ரஞ்சிதம் ஆகியோர் சபீனாவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதனால் வேதனையடைந்த சபீனா விஷம் குடித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
போலீசாரிடம் புகார் தெரிவித்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக போலீசார் அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார்.
- போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தகோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
நேற்று மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.
சிறுமியின் தந்தை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.
- அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி பாலம்செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி விஜயபிரபா (வயது 44). கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்த அவர் தையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் கம்பத்தைச் சேர்ந்த பாலமுருகன் (51) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலமுருகனின் நண்பரான கண்ணன் (32) என்பவர் விஜயபிரபாவிடம் ரூ.20 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு விஜயபிரபா ஏற்கனவே வாங்கிய பணத்தை தராத நிலையில் மீண்டும் எதற்கு பணம் தர வேண்டும்? என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் விஜயபிரபாவை பல இடங்களில் குத்திக் கொல்ல முயன்றார். படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மற்றும் கண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.
அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
- தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- மற்ற காய்கறிகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் பெரும்பாலான பெண்கள் கீரையை வைத்து சமையல் செய்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ரூ.120க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி இன்று மீண்டும் விலையேறி 1 கிலோ ரூ.140க்கு விற்கப்படுகிறது. இதே போல் இஞ்சி ரூ.280, வெங்காயம் ரூ.100 என்று விற்பனையாகி வருகிறது.
மற்ற காய்கறிகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் பெரும்பாலான பெண்கள் கீரையை வைத்து சமையல் செய்து வருகின்றனர். தக்காளி, வெங்காயத்தின் விலை சிக்கன் விலைக்கு விற்பதால் காய்கறிகள் வாங்குவதை விட சிக்கன் வாங்கி சமைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மார்க்கெட்டுகளில் ரூ.500க்கு காய்கறிகள் வாங்கினால் 1 வாரத்துக்கு வைத்து சமையல் செய்து கொள்ளலாம் என்ற நிலை மாறி ரூ.500க்கு காய்கறிகள் ஒரு நாளைக்கே போதாது என்ற நிலை வந்து விட்டதாகவும் புலம்புகின்றனர். காய்கறிகள் விலை அதிகரித்து வந்தாலும் இதன் லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் விவசாய தோட்டங்களுக்கே சென்று காய்கறிகளை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் ரூ.100க்கு விற்கப்பட்டாலும் விவசாயிக்கு கிடைப்பது ரூ.30 முதல் ரூ.40 வரைதான் என்று வேதனையடைந்து வருகின்றனர்.
சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது. அய்யம்பட்டியில் தற்போது அவரைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. வருடத்துக்கு 3 முறை காய் எடுத்து வரும் நிலையில் தற்போது 2ம் கட்ட அறுவடை பணி நடந்து வருகிறது. ரூ.80க்கு விற்கப்பட்டு வரும் அவரைக்காய் தற்போது விவசாயிகளிடம் ரூ.40 முதல் ரூ.45 வரை மட்டுமே வாங்கப்பட்டு வருகிறது. இதனால் சந்தையில் விலை ஏறினாலும் விவசாயிகளுக்கு எவ்வித லாபமும் கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது மாநிலம் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது.
- 1 அல்லது 2 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதத்தை கடைபிடித்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதின் அவசியம் குறித்து நாட்டு மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நமது மாநிலம் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது. ஆண்கள் 25 வயதிற்கு பிறகும், பெண்கள் 21 வயதிற்கு பிறகும் திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது 2 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையை தொடர்ந்து கடைபிடித்தால்தான் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும்.
மக்கள் தொகையின் தாக்கம் பற்றி அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நல்வாழ்வு, சிறந்த கல்வி மற்றும் சிறப்பான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. பிரசவத்திற்காக வரும் தாய்மார்களுக்கும் மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தாய்மார்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
27.06.2023 முதல் 10.07.2023 வரை மக்கள்தொகை விழிப்புணர்வு காலமாகவும், 11.07.2023 முதல் 24.07.2023 வரை மக்கள் தொகை நிலைப்படுத்தும் காலமாகவும், இருவார குடும்பநல விழாவாக தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் குடும்பநல ஆலோசனைகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் பகிர்மான செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தேனி:
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (45), இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், தேனி ரத்னம் நகரில் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
- தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்குவதற்காக ரத்ததான மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.
- ஊழியர்கள் உள்பட 38 பேர்கள் ரத்ததானம் செய்தார்கள். மேலும் 26 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புதல் அளித்து படிவங்கள் வழங்கினர்.
தேனி:
தேனியில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நகைக்கடை மற்றும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவ மனை இணைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்குவதற்காக ரத்ததான மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மேலாளர் நாகராஜ் குப்தா தலைமை தாங்கினார். தேனி நகராட்சி சேர்மன் ரேணுப்ரியா பாலமுருகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஊழியர்கள் உள்பட 38 பேர்கள் ரத்ததானம் செய்தார்கள். மேலும் 26 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புதல் அளித்து படிவங்கள் வழங்கினர்.
உடல் உறுப்புகள் தான படிவங்களை தேனி நகராட்சி சேர்மன் ரேணுப்ரியா பாலமுருகன் பெற்றுக்கொண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டா பிரியாவிடம் வழங்கினார். மேலும் ரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.
வெளிச்சம் அறக்க ட்டளை தலைவர் சிதம்பரம், மனிதநேய காப்பகம் பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரன் தங்கமாளிகை மேலாளர் நாகராஜ் குப்தா, விளம்பர மேலாளர் வசந்த், மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக் பரீத் மற்றும் தீபன் ஆகியோர் செய்திரு ந்தனர்.






