என் மலர்
தேனி
- பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.
- அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டம் காமையகவுண்டன்பட்டி பாலம்செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி விஜயபிரபா (வயது 44). கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்த அவர் தையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் கம்பத்தைச் சேர்ந்த பாலமுருகன் (51) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலமுருகனின் நண்பரான கண்ணன் (32) என்பவர் விஜயபிரபாவிடம் ரூ.20 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு விஜயபிரபா ஏற்கனவே வாங்கிய பணத்தை தராத நிலையில் மீண்டும் எதற்கு பணம் தர வேண்டும்? என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் விஜயபிரபாவை பல இடங்களில் குத்திக் கொல்ல முயன்றார். படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மற்றும் கண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கண்ணன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.
அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
- தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- மற்ற காய்கறிகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் பெரும்பாலான பெண்கள் கீரையை வைத்து சமையல் செய்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ரூ.120க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி இன்று மீண்டும் விலையேறி 1 கிலோ ரூ.140க்கு விற்கப்படுகிறது. இதே போல் இஞ்சி ரூ.280, வெங்காயம் ரூ.100 என்று விற்பனையாகி வருகிறது.
மற்ற காய்கறிகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் பெரும்பாலான பெண்கள் கீரையை வைத்து சமையல் செய்து வருகின்றனர். தக்காளி, வெங்காயத்தின் விலை சிக்கன் விலைக்கு விற்பதால் காய்கறிகள் வாங்குவதை விட சிக்கன் வாங்கி சமைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மார்க்கெட்டுகளில் ரூ.500க்கு காய்கறிகள் வாங்கினால் 1 வாரத்துக்கு வைத்து சமையல் செய்து கொள்ளலாம் என்ற நிலை மாறி ரூ.500க்கு காய்கறிகள் ஒரு நாளைக்கே போதாது என்ற நிலை வந்து விட்டதாகவும் புலம்புகின்றனர். காய்கறிகள் விலை அதிகரித்து வந்தாலும் இதன் லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் விவசாய தோட்டங்களுக்கே சென்று காய்கறிகளை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் ரூ.100க்கு விற்கப்பட்டாலும் விவசாயிக்கு கிடைப்பது ரூ.30 முதல் ரூ.40 வரைதான் என்று வேதனையடைந்து வருகின்றனர்.
சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது. அய்யம்பட்டியில் தற்போது அவரைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. வருடத்துக்கு 3 முறை காய் எடுத்து வரும் நிலையில் தற்போது 2ம் கட்ட அறுவடை பணி நடந்து வருகிறது. ரூ.80க்கு விற்கப்பட்டு வரும் அவரைக்காய் தற்போது விவசாயிகளிடம் ரூ.40 முதல் ரூ.45 வரை மட்டுமே வாங்கப்பட்டு வருகிறது. இதனால் சந்தையில் விலை ஏறினாலும் விவசாயிகளுக்கு எவ்வித லாபமும் கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது மாநிலம் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது.
- 1 அல்லது 2 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதத்தை கடைபிடித்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதின் அவசியம் குறித்து நாட்டு மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நமது மாநிலம் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதிலும் அகில இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது. ஆண்கள் 25 வயதிற்கு பிறகும், பெண்கள் 21 வயதிற்கு பிறகும் திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது 2 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையை தொடர்ந்து கடைபிடித்தால்தான் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும்.
மக்கள் தொகையின் தாக்கம் பற்றி அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நல்வாழ்வு, சிறந்த கல்வி மற்றும் சிறப்பான வாழ்க்கை வசதிகளை பெற சிறு குடும்பமே சிறப்பானதாக இருக்கும்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. பிரசவத்திற்காக வரும் தாய்மார்களுக்கும் மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தாய்மார்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
27.06.2023 முதல் 10.07.2023 வரை மக்கள்தொகை விழிப்புணர்வு காலமாகவும், 11.07.2023 முதல் 24.07.2023 வரை மக்கள் தொகை நிலைப்படுத்தும் காலமாகவும், இருவார குடும்பநல விழாவாக தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் குடும்பநல ஆலோசனைகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் பகிர்மான செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தேனி:
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (45), இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், தேனி ரத்னம் நகரில் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
- தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்குவதற்காக ரத்ததான மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.
- ஊழியர்கள் உள்பட 38 பேர்கள் ரத்ததானம் செய்தார்கள். மேலும் 26 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புதல் அளித்து படிவங்கள் வழங்கினர்.
தேனி:
தேனியில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நகைக்கடை மற்றும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவ மனை இணைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்குவதற்காக ரத்ததான மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மேலாளர் நாகராஜ் குப்தா தலைமை தாங்கினார். தேனி நகராட்சி சேர்மன் ரேணுப்ரியா பாலமுருகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஊழியர்கள் உள்பட 38 பேர்கள் ரத்ததானம் செய்தார்கள். மேலும் 26 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புதல் அளித்து படிவங்கள் வழங்கினர்.
உடல் உறுப்புகள் தான படிவங்களை தேனி நகராட்சி சேர்மன் ரேணுப்ரியா பாலமுருகன் பெற்றுக்கொண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டா பிரியாவிடம் வழங்கினார். மேலும் ரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.
வெளிச்சம் அறக்க ட்டளை தலைவர் சிதம்பரம், மனிதநேய காப்பகம் பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரன் தங்கமாளிகை மேலாளர் நாகராஜ் குப்தா, விளம்பர மேலாளர் வசந்த், மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக் பரீத் மற்றும் தீபன் ஆகியோர் செய்திரு ந்தனர்.
- ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெற்ற மாதம் தெரியாத நிலையில் எந்த மாதத்திலும் இந்த ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்.
- ஆவணங்களு டன் உரிய மாதங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நேர்காணல் செய்யலாம்.
தேனி:
தேனி மாவட்டத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்ட ம்பர் ஆகிய 3 மாதங்கள் மட்டும் நேர்காணல் நடத்த ப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருப்பதை எளிமை யாக்கும் நோக்கத்தில் சிறப்பு நடைமுறை அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெற்ற மாதம் தெரியாத நிலையில் எந்த மாதத்திலும் இந்த ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். ஓய்வூதியர்கள் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும், இணையதள மூலமாக ஓய்வூதியர்கள் நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் இணையதள முகவரியில் இருந்தும் வாழ்வு சான்றிதழை பதிவிறக்கும் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்ட்ரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்மந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். கருவூலத்திற்கு நேரடியாக வரும் ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், ஆதார் அடையாள அட்டை, வங்கிக்க ணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களு டன் உரிய மாதங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நேர்காணல் செய்யலாம்.
தமிழ்நாடு மின்வாரியம், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாந கராட்சி ஓய்வூதியர்கள் மற்றும் இதர நிறுவனத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவ ர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் இன்று பிற்பகலில் தேனிக்கு கொண்டு வரப்படுகிறது.
- டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
தேனி:
கோவையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் அன்னஞ்சி அருகில் உள்ள ரத்தினம் நகராகும். விஜயகுமார் தனது பள்ளி படிப்பை போடி அணைக்கரைப்பட்டியில் உள்ள பள்ளியில் முடித்தார். இவரது தந்தை செல்லையா கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் ராஜாத்தி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு பிரேமலதா என்ற அக்காவும், நிர்மலா என்ற தங்கையும் உள்ளனர். நிர்மலா தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். தேனி ரத்தினம் நகரில் விஜயகுமாரின் பெற்றோர் மட்டும் வசித்து வருகின்றனர். தனது மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து கதறி அழுதனர். தனது மகன் மிகவும் தைரியமானவன் என்றும், தற்கொலைக்கு யாரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கி தேற்றுவார் எனவும் தெரிவித்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது ஆச்சரியமாக உள்ளது எனவும் கூறினர். டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் இன்று பிற்பகலில் தேனிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு 600 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது.
- நீர்மட்டமும் கடந்த 3 நாட்களில் 4 அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் கடந்த 3 நாட்களாக சாரல்மழையே பெய்து வருகிறது. இருந்தபோதும் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான குமுளி, லோயர்கேம்ப், தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 600 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டமும் கடந்த 3 நாட்களில் 4 அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 116.90 அடியாக இருந்த நிலையில் இன்றுகாலை 118.05 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 2605 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 356 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2276 மி.கனஅடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக உள்ளது. வரத்து 94 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1988 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடியாகவும் உள்ளது.
பெரியாறு 27.4, தேக்கடி 25.2, கூடலூர் 3, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதிஅணை 3.2, போடி 1.2, சோத்துப்பாறை 1, வீரபாண்டி 3, அரண்மனைபுதூர் 2.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- எழுத்துக்களை வாசித்ததில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிய வந்தது.
- முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் கோட்டூர் பஸ் நிலையம் அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் பகுதியில் 2 கல்வெட்டுகள் வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல் பாரதி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.
இதில் உள்ள எழுத்துக்களை வாசித்ததில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிய வந்தது. இதில் கோட்டூரின் பழைய பெயர் மாதேவநல்லூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு 31 அங்குலம் நீளமும், 17 அங்குலம் அகலமும், 9 அங்குலம் கனமும் கொண்டுள்ளது. இதில் அளநாட்டைச் சேர்ந்த மாதேவநல்லூரில் தென்னடை பிரானார் கோவில் அகம்படி முதலிகளில் வடுகன் திருவாலி சீவலப்பன் என்ற வாசகம் தொடர்ச்சியின்றி உள்ளது. கோவிலின் இடது புறம் உள்ள இன்னொரு கல்வெட்டில் கோட்டூரின் பெயர் கோட்டையூர் என்று இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டின் தொடக்கப்பகுதி சிதிலமடைந்துள்ளது.
இதில் மன்னரின் பெயரையோ, ஆட்சி குறித்தோ குறிப்பிட்டு இருக்கலாம். அதன்பின் பக்கமோ வடுவன் சீவலப்பன் நிலதானம் தொடர்பான செய்தி உள்ளது. இது குறித்து பாவெல் பாரதி கூறியதாவது:-
முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். அதை மையப்படுத்தி ஊர்கள் உருவாக்கப்பட்டன.
அத்தகைய ஊர்கள் நல்லூர் என அழைக்கப்பட்டன. இன்றைய கோட்டூரில் சிவன் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலம் தானம் வழங்கி மாதேவநல்லூர் என்று பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் கடவுள் சிவன் தென்னடை பிரானார் என்று அழைக்கப்பட்டுள்ளார். இந்த கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் கல்வெட்டுக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுலா தொழில் நிறுவனங்கள் சுற்றுலா துறையின் இணையதளத்தில் கேட்டுள்ள விபரங்கள், உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
- முறையாக பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தேனி:
தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்களை சுற்றுலா துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் சுற்றுலா துறையின் இணையதளத்தில் கேட்டுள்ள விபரங்கள், உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
முறையாக பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா தொழில் நிறுவனங்களில் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து தேனி கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பஸ்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
- உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் உள்வட்டம் பண்ணைப்புரம் வருவாய் கிராமம் உட்கடை மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.






